நமக்குப் பரிமாற்றுப் பொருளாகிப்போன பிள்ளையார்களால் நிறைந்திருக்கிறது வீடு.
நாம் கதை பேசும்போதெல்லாம் அவர் சிரி்த்துக்கொண்டிருக்கிறார்.
நம் ஊடல்களின் போதெல்லாம் பிள்ளையார் முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்.
' விட்டுப்போ..' என நீ கோபத்தில் கத்தியபோது ஒத்திசைவால் ஒரு பிள்ளையார் விழுந்து தும்பிக்கையின் ஒரு ஓரம் உடைபட்டுப் போனது.
எடுத்துக் கையில்வைத்து அழுது கொண்டேயிருந்தாய்.
அடுத்தடுத்த நாட்களில் கத்துவதற்கு முன்பே பிள்ளையாரை பத்திரப்படுத்தி விடுகிறேன் நான்.
நீ விலகிச் சென்றபோது பிள்ளையார் கண்ணில் ஈரமாய் இருந்ததாகப் பட்டது எனக்கு.
கண்ணீரின் வழி பார்த்தால் எல்லாம் கலங்கலாய்த் தான் தெரியும் என மனதைத் தேற்றிக் கொள்கிறேன் மறுபடியும் ..
பிள்ளையாரைக் கடக்கும்போதெல்லாம் உன்னைத் தேடுவதைப்போலவே இருக்கிறது.
சீக்கிரம் வந்திடுவா எனச்சொல்லிச் சமாளிக்கிறேன்.
குழந்தையைப் போலக் கண்ணடிக்கிறார்.
இப்படித்தான் நீ என் காதலியான பிறகு அவர் என் நண்பனாகி விட்டார்.
Total Pageviews
Saturday, 5 December 2015
காதல் பிள்ளையார்
Wednesday, 23 September 2015
நிலவின் சாட்சியாக
என்றாவது நினைவுக்கு வரட்டும்
இந்த நாளும்..
நம்மிருவர் காதலுக்கு சாட்சியாக
நிலவும் அந்த நீண்ட இரவையும்
தவிர வேறு யாருமில்லை..
விழித்துக்கொண்டே இருந்தது
அவ்வப்போது இடைவெளிவி்ட்டு
நம்மைப்போலவே
அந்தப் பி்ன்னிரவும்..
விண்மீன்களெல்லாம் உறங்கி
வெகுநேரமாகிவிட்டது..
மகிழ்ச்சியின் உறக்கமாயிருக்கலாம்..
தேடல்களெல்லாம் முடியும் வேளையில்
தான் இங்கே தொடங்கப்பட்டது..
அசைவின்றிக் கிடந்தது உதிர்ந்த
இதழ்களெல்லாம்
ஆதலினால் வியர்வைகள்
துளிர்த்திருக்கலாம்..
அர்த்தப்படாத கனவாய்க்கூட
இருக்கலாம்..
மகிழ்வு மறுநாள் தலைதுவட்டிக்
கொண்டது மட்டும் ஏனோ ?
எல்லாம் முடிந்தது
எண்ணிக் கழிந்த நாளும்
முந்நூறைத் தொட்டது..
எல்லாம் கனவாகவே கூட
தொடரலாம்..
அந்தப் பெயர் சொல்லி
யாரோ யாரையோ அழைக்க
நீ திரும்பிப் பார்த்தலில்
நான் தெரியலாம் காட்சியாக
எல்லாவற்றிற்கும் சாட்சியாக...
Tuesday, 22 September 2015
அழகிய ஊர் அது...
ஊரின் நடுவில் மலைகளில்லை..
வெள்ளாடுகள் மேய்வதையெல்லாம் பார்க்கமுடியாது..
எல்லாத் திசைகளிலும் பூக்களாகவே இருக்கும் என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது..
பிள்ளையார் கோயிலும்
பொல்லாக்குளமும்
நெல்லிக்காய் மரமும்
அவ்வளவு அழகு..
என நான் சொல்வதையெல்லாம் விட அழகானது கிருங்காக்கோட்டை.
ஏனெனில்
அது இந்துக்குட்டியின் ஊர்..
Thursday, 17 September 2015
சுவை
கொழுக்கட்டைத் தட்டை நீட்டி
அம்மா குடுத்துச்சு இந்தாங்க
எனச் சொல்லும் எல்லாக்
குழந்தைகளும் அவளைப்போலவே
தெரிகிறதெனக்கு..
ஆனால், நீ சாப்டு செல்லம் என்றவுடன் முதல் கடி தான் கடித்து மறுபாதியை ஊட்டிவிடும் இந்துக்குட்டியின் கொழுக்கட்டைச் சுவைதான் இப்போதைக்கில்லை..
Sunday, 13 September 2015
சாட்சி
ஒட்டுமொத்தப்
பிரியங்களின்
சாட்சியாக
அதோ இன்னும்
பறந்துகொண்டே
இருக்கிறது
ஒற்றைப் புறா
உயிர்விடவில்லை..
எப்பொழுதும்
போலவே இதுவும்
புரியாது உனக்கு..
Sunday, 30 August 2015
ஐந்தெழுத்துக்காரி
வேண்டுமென்றே கோவப்படுத்தியும்
கோவப்பட்டால் திணறத்திணறக்
கட்டியணைத்து
அன்பைப் பொழிந்தும்
ஆட்டிப்படைக்கிறாள்
இந்த 'ஐந்தெழுத்துக்காரி'..!
Wednesday, 26 August 2015
அழுத்தக்காரி..!
மகிழ்ச்சி துக்கமென அத்தனையையும்
என் மீதே தெளித்துப் பின்
நெஞ்சில் சாய்ந்து அழுத்திப்
பேசாத நேரங்களில் அடக்கிவைத்த
அவ்வளவையும் கண்ணீராகவே
பிழிந்துகொள்கிறாள்..
என் அழகான ஐந்தெழுத்துக்காரி..!
Wednesday, 19 August 2015
நீயும் நானும் ...
அடித்து வீழ்த்திவிடத்
துடிக்கிறாய்..
சுற்றிலும் மோதிப்
பின் உன்னுடல் உரசிப்
புன்னகைக்கிறேன்..
மீண்டும் உதைத்துத்
தள்ளினாலும்
கைகோர்த்துக் குழிக்குள்
இழுக்கிறேன் உன்னையும்..
நிறத்தைத் தவிர
இன்னொரு ஒற்றுமையும்
உண்டு..
இந்தக் காதலில்
வீழ்தல் 'வெற்றி' யெனக்
கொள்ளப்படும்
இருவருக்கும்..!
என்னமோ ?
வெட்டவெளியில்
வெளிச்சமின்றி
எல்லைகளற்று
எப்பொழுதாவது
உனக்குமெனக்குமான
இடைவெளியில்
ஊர்ந்து செல்கிறது..
ஊரே அதைக்
'காதலெ'ன்கிறது.
நீ என்ன சொல்கிறாய்..?
Thursday, 16 April 2015
உதிரும் இதழ்கள்
படம்: முகநூல்
சற்று முன்னரே
பிறந்த என்னிடம்
முதல் சொல்லைக்
கேட்டிட முயல்கிறீர்கள் ..
முரண்டு பிடிக்கிறேன்
பேச மனமின்றி..
செவிகளைத் திறந்து
சுற்றிலும் பேசும்
ஓசைகளை சப்தமின்றிக்
கேட்கிறேன்..
சுகமாய்த்தான் இருக்கிறது..
பேச எத்தனிக்கையில்
இருள் சூழ்கிறது ..
இதில் எனக்கு விருப்பமில்லை..
காதுகளை அடைத்து
குரல் எழுப்புமாறு
கூவுகிறீர்கள் ..
காலால் உதைத்து
வாய்திறக்க மறுக்கிறேன் ..
உளி கொண்டு
உச்சந்தலையில் அடித்து
உரக்கப் பேசச்
சொல்கிறீர்கள் ..
'மௌனம் என் மொழி'யென
முதல் இதழ் உதிர்க்கின்றேன்..
அடுத்த இதழை உதிர்க்க
அவசியமற்றுப் போகிறது...
Posted via Blogaway
கவிதையொன்று உதிர்கிறதே...

ஒரு பார்வை
ஒரு தலையாட்டல்
ஒரு ஆச்சரியம்
ஒரு புருவம் உயர்த்தல்
ஒரு கண்சிமிட்டல்
ஒரு புன்னகை
ஒரு மகிழ்ச்சி
ஒரு உதட்டுச் சுழிப்பு
ஒரு மௌனம்
ஒரு வார்த்தை
ஒரு முத்தம்
ஒரு மழலை
ஒரு விரலசைவு
ஒரு கைகோர்ப்பு
ஒரு தலைகோதுதல்
ஒரு அரவணைப்பு
ஒரு தவிப்பு
ஒரு ஏக்கம்
ஒரு பாசம்
ஒரு பரிவு
ஒரு சீண்டல்
ஒரு சண்டை
ஒரு சிணுங்கல்
ஒரு அழுகை
ஒரு சமாதானம்
ஒரு வெளிச்சம்
ஒரு இருள்
ஒரு நிலவு
ஒரு மழை
ஒரு மலர்
ஒரு மரம்
ஒரு தனிமை
ஒரு நேசம்
ஒரு உணர்வு
ஒரு தேநீர்
ஒரு பேருந்து
ஒரு பயணம்
ஒரு குறுஞ்செய்தி
ஒரு வாசணை
ஒரு இரவு
ஒரு கனவு
ஒரு நாள்
ஒரு மாலை
ஒரு தூக்கம்
ஒரு அழைப்பு
ஒரு ஹலோ
ஒரு நிழல்
ஒரு பள்ளி
ஒரு நினைவு
ஒரு அதட்டல்
ஒரு காத்திருப்பு
ஒரு கையசைத்தல்
ஒரு அச்சம்
ஒரு ஜன்னல்
ஒரு கதவோரம்
ஒரு மாடிப்படி
ஒரு வெட்கம்
ஒரு 'ப்போ'
ஒரு சாக்லேட்
ஒரு சாத்துக்குடி ஜூஸ்
ஒரு புகைப்படம்
ஒரு தழுவல்
ஒரு கண்ணீர்
ஒரு விசும்பல்
ஒரு நடை
ஒரு காற்று
ஒரு வானம்
ஒரு பரிசு
ஒரு எச்சில்
ஒரு சிரிப்பு
ஒரு நீ
ஒரு நான்
ஒரு பேரன்பு
இன்னும் எத்தனை
'ஒரு'க்கள் இந்த
ஒரு காதலில்..
ஒவ்வொன்றும்
ஒரு கவிதையல்லவா ?
உன் தலையிலிருந்து
உதிரும்
ஒரு மல்லிப்பூவும்
ஒரு கவிதையொன்றை
உதிர்த்திடுமே ...
Posted via Blogaway
Wednesday, 15 April 2015
ஒரு துளி வலி..!
ஒட்டுமொத்தப் பிரபஞ்சமும்
ஒரு துளிக்குள் அடங்கிப்போகும் .
அது வறண்ட நிலத்தில்
விழுந்த முதல் சொட்டு
மழையாக இருக்கலாம் .
கன்றுக்குட்டி முட்டிக்
குடிக்கும் தாய்ப்பசுவின்
மடியில் சுரந்த
சீம்பாலாய் இருக்கலாம் .
காலையில் நடக்கையிலே
சாலையோரப் புல்லில்
தகதகத்து சூரியனையும்
ஒளித்துவைக்கும் சிறு
பனித்துளியாய் இருக்கலாம் .
அந்த நேரத்து அமைதியைக்
கலைக்கும் வண்ணம்
குழாயில் 'க்ளுக்'கெனச்
சொட்டும் ஒருதுளித்
தண்ணீராய் இருக்கலாம் .
குழந்தைகளைத் தூக்கிக்
கொஞ்சுகையில் சிந்தும்
எச்சிலாய் இருக்கலாம் .
அன்புக்குரியோரின்
வெறித்த பார்வையை
விலக்க எண்ணி
விரலால் தொட்டு முகத்தில்
தெளித்த குளிர்பானமாய்
இருக்கலாம் .
உழைத்துக் களைத்து
வீடு வந்த கணவனின்
முகம் நோக்கி மனைவி
புடவைத் தலைப்பால்
அழுத்தத் துடைந்த
அந்த ஒருதுளி
வியர்வையாய் இருக்கலாம் .
அந்த ஒரு துளி
இப்படி அழகாய்த்தான்
இருக்கவேண்டும்
என்பதில்லை .
மாதவிடாய் வலியின் ஊடே
சப்தமின்றிக் கதறும்
பெண்ணின் உடையில் சிந்தும்
உதிரமாகவும் இருக்கலாம் .
அந்த ஒரு துளி...
பாலின்றிப் பசியில் அழுது
தாய்முலை தேடும் குழந்தை
அதைப்பெற்ற ஏழைத்தாய்
வேதனையுடன் அழச்சக்தியற்று
விசும்ப அதில் கரைந்த
கடைசிச் சொட்டுக்
கண்ணீராய்க் கூட
இருக்கலாம் ..
Tuesday, 14 April 2015
காதல் என்பதொரு காவிய முரண்
இங்கே நிழலான நினைவுகள்
வண்ணங்களால் மின்னும்..
நிஜங்கள் கறுப்புவெள்ளைத்
திரையாய்க் கடக்கும்..
மனங்கள் சிறைப்பட்டுக் கிடக்கும்..
எனினும் மனங்கொள்ளாச் சுதந்திரக்
காற்று சுவாசிக்கக் கிடைக்கும்..
வார்த்தைகள் ஆயிரம் உரையாடும்.
இறுதியில் அந்த
மௌனமொழி தலைதூக்கும்..
முட்டல்களும் மோதல்களும்
முறையாய்த் தொடங்கினாலும்
முத்தங்களால் முற்றுப்பெறும்..
இல்லாக் காற்றும் மிதக்கவைக்கும்..
நின்றபின் கூட மழையது
நனைய வைக்கும்..
தேய்பிறையில் கூட வளரும்
காதலுக்கு உவமைகூறும் நிலா..
கண்கள் விழிதிறந்தே
கனவு காணும்..
சுற்றிலும் வெயிலடிக்கும்..
உள்ளுக்குள்ளே உவகை
மழை பெய்யும்..
மார்கழியில் கோடைவரும்..
பங்குனியில் பனிவிழும்..
முரண்கள் தமிழுக்கு மட்டுமா அழகு?
"எதுவும் வேண்டாம்.
எப்பவும் நீ கூடவே இரு.."
காதலென்பது இதைப்போல
காவிய முரணல்லவா..?
Posted via Blogaway