Total Pageviews

Saturday, 5 December 2015

காதல் பிள்ளையார்

நமக்குப் பரிமாற்றுப் பொருளாகிப்போன பிள்ளையார்களால் நிறைந்திருக்கிறது வீடு.

நாம் கதை பேசும்போதெல்லாம் அவர் சிரி்த்துக்கொண்டிருக்கிறார்.
நம் ஊடல்களின் போதெல்லாம் பிள்ளையார் முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்.
' விட்டுப்போ..' என நீ கோபத்தில் கத்தியபோது ஒத்திசைவால் ஒரு பிள்ளையார் விழுந்து தும்பிக்கையின் ஒரு ஓரம் உடைபட்டுப் போனது.
எடுத்துக் கையில்வைத்து அழுது கொண்டேயிருந்தாய்.
அடுத்தடுத்த நாட்களில் கத்துவதற்கு முன்பே பிள்ளையாரை பத்திரப்படுத்தி விடுகிறேன் நான்.
நீ விலகிச் சென்றபோது பிள்ளையார் கண்ணில் ஈரமாய் இருந்ததாகப் பட்டது எனக்கு.
கண்ணீரின் வழி பார்த்தால் எல்லாம் கலங்கலாய்த் தான் தெரியும் என மனதைத் தேற்றிக் கொள்கிறேன் மறுபடியும் ..
பிள்ளையாரைக் கடக்கும்போதெல்லாம் உன்னைத் தேடுவதைப்போலவே இருக்கிறது.
சீக்கிரம் வந்திடுவா எனச்சொல்லிச்  சமாளிக்கிறேன்.
குழந்தையைப் போலக் கண்ணடிக்கிறார்.
இப்படித்தான் நீ என் காதலியான பிறகு அவர் என் நண்பனாகி விட்டார்.


No comments:

Post a Comment