Total Pageviews

Friday, 6 May 2016

புரட்சிப்புயல் வைகோ அவர்களுக்கு ஓர் கடிதம்

புரட்சிப்புயல் வைகோ அவர்களுக்கு ஓர் கடிதம்



'பாராளுமன்றப் புலி' என வர்ணிக்கப்பட்ட புரட்சிப்புயல் வைகோ அவர்களுக்கு,


தங்களின் முழக்கங்களால் கவரப்பட்டு அரசியலறிவைக் கற்கத்தொடங்கிய இளைஞர்கள் பலருள் ஒருவன் எழுதும் கடிதம். அது 1994 ஆம் ஆண்டு. கைக்குழந்தையான என்னைத் தாங்கள் தங்கள் கைகளில் தூக்கி, 'தொல்காப்பியன்' எனப் பெயர் சூட்டினீர்கள். அதனால்தானோ என்னவோ உங்களின் மீது அபார நம்பிக்கை இன்றுவரை தொடர்கிறது.

புகைப்படங்களிலும், தொலைக்காட்சிகளிலும் மட்டுமே பார்த்த உங்களை இரண்டு முறை நேரில் பார்க்கும் வாயப்பு கிட்டியது. இரண்டுமுறை பார்க்கும்போதும் உணர்ச்சிமயமான சூழலில் இருந்தீர்கள். ஒரு புரட்சிகரமான அரசியல்வாதியை நேரில் பார்த்த மகிழ்ச்சி எனக்கு அப்போது. தினசரிகளில் உங்கள் புல்லரிக்க வைக்கும் பேச்சுகளை வாசித்து கியூபாவின் சே-கு-வேராவைப் போல உருவகப்படுத்தி பிற்பாடு தங்களின் செயல்பாடுகளால் ஏமாற்றப்பட்ட என் ஆதங்கம்தான் இக்கடிதம்.

சே ஒரு போராளி என்பதால் மட்டும் அவர்மீது நாம் மதிப்பு வைக்கவில்லை. அவர் அசாதாரண சாதனைகளை செய்துகாட்டக் கூடியவர்.
ஏகாதிபத்தியத்தால் பயிற்சியளிக்கப்பட்டு,  ஏகாதிபத்தியத்தால் உருவாக்கப்பட்ட ஒரு நாட்டின் இராணுவத்திற்கு எதிராக விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய ஒருசிலரை வைத்து எதிர்த்ததே அசாதாரணமான ஒன்று.
எங்களுக்கு நீங்களும் அவ்வாறு தோன்றியது முழுக்க முழுக்க எங்கள் தவறுதான் என்பது சமீபகால தங்களது நிலைப்பாடுகளால் தெளிவாகப் புரிகிறது.

வாரிசு அரசியலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக -விலிருந்து விலகி தனிக்கட்சி தொடங்கி தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்தீர்கள். வாரிசு அரசியலுக்கு முடிவுகட்டி தமிழகத்தை மீட்கும் மீட்பராகவே உங்களைப் பலரும் பார்த்தார்கள். ஆனால், நீங்கள் அதை எப்படிப் பயன்படுத்திக் கொண்டீர்கள்? இன்னொரு கட்சியின் மீதான வன்மத்தைத் தீர்ப்பதற்காக மாறிமாறிப் பயன்படுத்தி வருகிறீர்கள். ஜெயா அரசு தங்களையும் தங்கள் சகாக்களையும் 'பொடா' சட்டத்தில் கைது செய்தது. பாஜக ஆட்சியில் கூட்டணி தர்மமெனக் கூறி 'பொடா'வை நீங்கள் ஆதரித்து அது உங்களுக்கே வினையாய் அமைந்ததுதான் கொடுமையின் உச்சம். 

பொடாவில் கைது செய்யப்பட்டு பதினெட்டு மாதங்கள் சிறையில் அடைபட்டு வெளிவந்த பிறகு அதிமுக விற்கு எதிராய் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் ஹஸ்கி வாய்சில் பின்வருமாறு கூறினீர்கள். நினைவிருக்கிறதா ?

"காலம் எங்களைக் காயப்படுத்தியது. அதே காலம் எங்கள் காயங்களுக்கும் களிம்பு தடவியது. என்னைப் பார்க்க அன்பு மேலோங்க  'தலைவர்' கலைஞர் வந்ததால் என் மனச்சுமை நீங்கியது. இனி என் வாழ்நாளில் கலைஞரை எதிர்க்கமாட்டேன். காலம் எனக்குக் கற்றுக்கொடுத்த பக்குவம் இது."
எனக்கூறி கருணாநிதிக்கே புல்லரிக்க வைத்தீர்கள்.

பிறகு, தமிழர்களுக்கு எதிரான பாசிச ஜெயா அரசை வீழ்த்துவற்காக திமுக வுடன் 2004 பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணி வைத்தீர்கள். போட்டியிட்ட நான்கு தொகுதிகளிலும் வெற்றிபெறச் செய்தது இந்தத் தமிழ்ச் சமூகம். பதிலாய் என்ன செய்தீர்கள் ? மக்கள் நலனை விட தேர்தல் நோக்கத்தில் தங்கள் நலன் ஒன்றையே மையமாக வைத்துச் செயல்பட்டீர்கள்.


2006 சட்டமன்றத் தேர்தலில் தொகுதிப்பிரிப்பில் திமுக உடனான கூட்டணியில் பிளவு ஏற்பட்டு, ஒருகாலத்தில் உங்களது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை, "Unlawful prevention activities -ன் கீழ் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆதரவளிக்கும் மதிமுக விடம் இந்தியாவுக்கோ, தமிழ்நாட்டுக்கோ நன்மை பயக்கும் எந்தத் திட்டங்களும் இல்லை. ஆகவே அதை தடை செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்." எனக்கூறிய உங்கள்  அன்புச்சகோதரி ஜெயலலிதாவோடு கூட்டணி வைத்தீர்கள். அதற்கு என்ன தர்மக்கணக்கு வைத்திருந்தீர்கள் எனத் தெரியவில்லை.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதமிருந்த ஜெயலலிதாவுக்கு பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை நிறைவு செய்து வைத்து கொஞ்சம் கூட சிரிப்பை வெளிக்காட்டாமல் நம்பிக்கை நட்சத்திரம் என வாய் கூசாமல் புகழ்ந்தீர்கள்.

2011 தேர்தலின்போது உங்கள் சகோதரி உங்களுக்கு நீங்கள் விரும்பிய எண்ணிக்கையிலான தொகுதிகளைத் தரமறுக்க உங்களது தன்மானம் தலைதூக்கியது.
"கண்களை விற்றுச் சித்திரம் வாங்குவதைப் போல, சுயமரியாதையை இழந்து பதவி பெறவேண்டிய அவசியம் மதிமுக வுக்கு இல்லை." எனப்பேசி மானமிகு தலைவனாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டீர்.


"தந்தை பெரியார் அவர்களும், பேரறிஞர் அண்ணா அவர்களும் உருவாக்கி வளர்த்த தன்மான இயக்கத்தையும், சுயமரியாதையையும் இரு கண்களாகப் போற்றுகிறேன்" என மார்தட்டிக் கொள்ளும் நீங்கள் ஒவ்வொருமுறையும் மாற்றிமாற்றிப் பேசி தங்கள் அரசியல் வாழ்வில் ஆகச்சிறந்த சந்தர்ப்பவாதியாகத்தான் திகழ்ந்து வருகிறீர்கள்.

கடந்த வாரத்தில் இதே வைகோ தான் திமுக ஐநூறு கோடி பேரம் பேசியதாக எழுப்பிய குற்றச்சாட்டுக் கருத்தை வாபஸ் பெறமாட்டேன் என முழங்கினார். இப்போது ?
கருணாநிதியின் சாதிய அடையாளத்தைப் நேற்றைய பேட்டியில் குறிப்பிட்டுப் பிறகு, தான் சாதி மறுப்பாளன் என்பதை உணர்ந்து "தாயுள்ளம் கொண்டு அண்ணன் கருணாநிதி மன்னிக்க வேண்டும்" என அறிக்கை விட்டிருக்கிறீர்கள். இது மாற்றத்திற்கான கூட்டணியை ஒருங்கிணைத்த ஒரு தலைவனுக்கு அழகா ?

கிரேக்கத்தின் புரட்சிகளை, பொலீவியா, கியூபாவின் ஏகாதிபத்தியத்திற்கெதிரான முன்னெடுப்புகளை எனக்கு அறிமுகப்படுத்திய உங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை திரு.வைகோ அவர்களே..  சேகுவேரா வின் மறைவிற்குப் பிறகான அஞ்சலிக் கூட்டத்தில் ஃபிடல் காஸ்ட்ரோ சொன்ன வரிகள் இவை..

"கியூப விடுதலைக்கான போராட்டத்தில் முக்கியத்துவமற்ற காரியங்களில் உணர்ச்சிவசத்தால் ஈடுபட்டு ஆபத்தை விலைக்கு வாங்க முன்வந்த பலசமயங்களில் அவரை தடுத்து நிறுத்த பெருத்த முயற்சிகள் செய்யவேண்டியிருந்தது."

புரிந்துகொள்ளுங்கள். உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளைக் கொட்டிவிட்டுப் பின்வாங்குதல் ஒரு முன்னுதாரண செயற்பாட்டாளருக்கு ஏற்புடையதல்ல. ஐம்பதாண்டுகளுக்கும் மேலான அரசியல் அனுபவம் கொண்ட தங்களிடம் இவைபோன்ற முதிர்ச்சியற்ற முரணான கருத்துக்களை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. வெறும் உணர்ச்சி மிகுந்த சொற்பொழிவுகள் மட்டும் ஒரு நல்ல தலைவனுக்குப் போதாது. சிறந்த செயல்பாட்டிற்கான திட்டங்களை முன்னெடுத்துச் செல்லுங்கள். எவ்வளவு நாள்தான் நீங்களே ரத்தம் கொதிக்கப் பேசிக்கொண்டிருப்பீர்கள் ? கிரேக்கமும் சோவியத்தும் தமிழனின் வரலாறைப் பேசட்டும்.


                                                                              நம்பிக்கையுடன்,
                                                                 தொல்காப்பியன் என்கிற விக்னேஷ் சி செல்வராஜ்


பதிவு நாள் : ஏப்ரல் 7, 2016


No comments:

Post a Comment