Total Pageviews

Saturday, 5 December 2015

காதல் பிள்ளையார்

நமக்குப் பரிமாற்றுப் பொருளாகிப்போன பிள்ளையார்களால் நிறைந்திருக்கிறது வீடு.

நாம் கதை பேசும்போதெல்லாம் அவர் சிரி்த்துக்கொண்டிருக்கிறார்.
நம் ஊடல்களின் போதெல்லாம் பிள்ளையார் முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்.
' விட்டுப்போ..' என நீ கோபத்தில் கத்தியபோது ஒத்திசைவால் ஒரு பிள்ளையார் விழுந்து தும்பிக்கையின் ஒரு ஓரம் உடைபட்டுப் போனது.
எடுத்துக் கையில்வைத்து அழுது கொண்டேயிருந்தாய்.
அடுத்தடுத்த நாட்களில் கத்துவதற்கு முன்பே பிள்ளையாரை பத்திரப்படுத்தி விடுகிறேன் நான்.
நீ விலகிச் சென்றபோது பிள்ளையார் கண்ணில் ஈரமாய் இருந்ததாகப் பட்டது எனக்கு.
கண்ணீரின் வழி பார்த்தால் எல்லாம் கலங்கலாய்த் தான் தெரியும் என மனதைத் தேற்றிக் கொள்கிறேன் மறுபடியும் ..
பிள்ளையாரைக் கடக்கும்போதெல்லாம் உன்னைத் தேடுவதைப்போலவே இருக்கிறது.
சீக்கிரம் வந்திடுவா எனச்சொல்லிச்  சமாளிக்கிறேன்.
குழந்தையைப் போலக் கண்ணடிக்கிறார்.
இப்படித்தான் நீ என் காதலியான பிறகு அவர் என் நண்பனாகி விட்டார்.


Friday, 4 December 2015

கண்ணீரின் காதலன் நான்

எல்லாவற்றிற்கும் அழத்தான் செய்கிறேன்
ஆண்பிள்ளை அழலாமா எனக் கேட்பவர்களையெல்லாம் அருகேயழைத்து அழவைத்துவிடுகிறேன்.
ஐ லவ் யூ சொன்னாலும் அழுகிறேன்
வெறுப்பதாகச் சொன்னாலும் மறைத்தபடி அழுகிறேன்
கட்டிக்கொண்டாலும் அழுதுதீர்த்து விடுகிறேன்
நீ இருக்கும்போதும் அழுகிறேன்.
நீயில்லாதிருக்கப்போகும் நாட்களை நினைத்தும் அழுகிறேன்
அது மட்டும் கூடவே இருக்கிறது
எல்லா இரவுகளிலும்
உன்னை விடவும்..


Thursday, 1 October 2015

கொலுசு முத்துக்கள்

* அடித்துப்பெய்த மழை அறிந்திருக்கவில்லை வேயாமல் ஒழுகும் அடுப்படிக் கூரையை..


* இந்த வாடிய கனகாம்பரம் கூட உன்னையே நினைக்கவைக்குமெனில் எந்த நம்பிக்கையில் மறக்கச் சொல்கிறாய் உன்னை..


* ஒவ்வொரு துளியிலும் உன்பெயரெழுதிய இம்மழை கரைத்துவிடத் துடிக்கிறது காலெடுக்க மனமின்றி முழுவதுமாய் மூழ்கிப் போகிறேன் நான் உன்னில் ..


* புறாக்களையெல்லாம் கொன்றொழித்துவிட்டு அதன் நிறங்களை மட்டும் எந்தச் சமாதானத்திற்காய் பயன்படுத்தப் போகிறீர் ?


* இந்தப் பின்னிரவு அள்ளித் தெளிக்கிறது மழையை கூடவே அவள் நினைவுகளையும்..


* விட்டுவிட்டுப் பெய்யும் மழை நினைவுபடுத்துகிறது நீ கையாட்டி திரும்பித் திரும்பிப் பார்த்துச் சென்றதை..


* மேகமென்றதற்கும் நிலவென்றதற்கும் ஒரே புன்னகைதான் வீசிச் சென்றாய்.. இப்போது மழையென்கிறேன் சிலதுளிகள் சிந்துகிறாய்..


* நெற்றியிலிடும் முத்தங்களைப்போல சாலைநனைத்த கோடைமழையும் அதி அழகானதே


* இறுதிவரை சில வார்த்தைகள் பயன்படவேயில்லை.. ஒருவேளை அவைகூட நம்மை இணைக்கப் பயன்பட்டிருக்கலாம்..


* ஒருசேர என்னுள் உன்னையும் உன்னுள் என்னையும் நினைவூட்டிவிடுகிறது யாரோ மீட்டிய இசை பண்பலையில்


* பரிகசித்த வெயிலையும் சேர்த்து விழுங்கி பசியாறிக்கொண்டிருக்கிறது இந்தப் பெருமழை..


* வெற்று இதயத்தில் இசை மீட்டுகிறாயே இப்படி உன் வயலின் விரல்களால்..


* சுவிஸ் வங்கித் தொடர்புள்ள இதே தேசத்தில்தான் கூரைவீட்டுக் கடவுள்களும் வாழ்கிறார்கள்.


* வழிந்த குருதியையெல்லாம் துடைந்தெறிந்துவிட்டு அடுத்த வேளைச் சோற்றுக்கு அலைபவனின் தேசத்தில் நாம் பெற்றதற்குப் பெயர் 'சுதந்திரம்'.


*நிலவில்லாத இரவுகளிலெல்லாம் கூட காதலிக்கிறேன் உன்னை மின்மினிப்பூச்சிகளின் சாட்சியாக..


* பக்கங்களையெல்லாம் புரட்ட ஒட்டிக்கொண்டிருந்தது இரு பக்கங்கள் எச்சில் எனத்தலைப்பிட்ட கவிதை தாங்கியபடி ..


* உச்சந்தலை வலிக்க குட்டிய சகோதரிகளின் பாசம் பின்னர் கைவைத்து அழுத்தி வலிக்குதா எனக்கேட்பதில் புரியும்.


* வேருக்குச் சேதியனுப்ப ஒவ்வொரு இலையாய் உதிர்க்கிறது கிளை.. கடைசி இலை சொல்லிச்சென்றது மரணச்செய்தியை..


*அந்தச் சிலவற்றை மட்டும் ஸ்மைலிகளால் கடக்கமுடிந்தால் வாழ்க்கை இன்னும் பேரழகு..


* மடித்து ஒற்றிட்டு உடைந்த வார்த்தைகளெல்லாம் அழகாய் அமர்ந்துகொண்டது கவிதையெனும் பெயரோடு..


* பேப்பரில் கோடரி வரைந்த குழந்தை ஏளனப் புன்னகை செய்தது மேசை..


* தட்டான்கள் ஹெல்மட் மாட்டியிருப்பதாகக் சொல்லிச் சிரிக்கும் குழந்தையை விட இந்த வானவில் ஒன்றும் அழகில்லை..


* மான் வரையத் தெரியாத குழந்தைக்காக புல்லைத் தின்று பசியாறிக்கொண்டது புலி ஓவியம்..


* பறந்துவிட்ட பலூனைப் பிடிப்பதற்காகவே முதல்நாள் விடுபட்ட கனவைத் தொடர முயல்கிறது குழந்தை ..


* புரண்டு படுக்கும் குழந்தைகளை யாரும் எழுப்பிவிடாதீர் கடவுளுடன் கிச்சுகிச்சு மூட்டி விளையாடியிருக்கலாம்..


* பென்சில்களை இறுகப் பற்றிக்கொண்டே தினம்தினம் உறங்குகிறாள் எங்கள் வீட்டு தேவதை..


* ஊதச் சொன்னால் புல்லாங்குழல் கடிக்கும் குழந்தைகளெல்லாம் கண்ணன் இல்லையென யார் சொன்னது ?


* ஒட்டுமொத்தப் பிரியங்களின் சாட்சியாக இன்னும் உயிர் வாழ்கிறது இந்த ஒற்றைப்புறா..


* பறந்துவிட்ட பட்டாம்பூச்சி
மறந்துவிட்ட கதைகள்
தொலைந்துவிட்ட பால்யம்
எல்லாவற்றையும் மொத்தமாய் உணர்ந்துவிட இருக்கவே இருக்கிறது
என் 'தமிழ்'..


* வார்த்தைகளைப் படுத்தி எடுத்ததையெல்லாம் பக்குவமாய் அடுக்கி தானாகவே  கவிதையாக்குகிறது
என் 'தமிழ்'..


* பதில்களையெல்லாம் அடுத்த கேள்விகளாக்கித் தொடுத்துக்கொண்டே இருக்கிறாள் உறங்கும் வரை எங்கள் வீட்டு தேவதை..


* வானவில் மகளா நீ
மகிழ்ச்சி துக்கமென
நொடிக்கொருதரம் நிறம்மாறிக் கொண்டிருக்கிறாயே..

  
* எல்லா வருடமும் போல்தான் இன்றும்.
அவள் கடித்துக் கொடுத்த கொழுக்கட்டைச் சுவைதான் இப்போதைக்கில்லை..


* நீ பேசாத
வார்த்தைகளிலெல்லாம் கூடப்
பொதிந்திருக்கிறது
காதலெனும் பேரன்பு.


* சிதிலமடைந்த வீடுகளின்
பெயர்ந்த காரைகளைத் தவிர இப்போது மிச்சமிருப்பதெல்லாம் பழைய நினைவுகளாக இருக்கலாம் ..

  
* இருக்கும் கொஞ்சமே கொஞ்சம்
மரங்களும் வெட்டப்பட்டு
வீடுகளாக்கப்பட்டபின்
யானைகளை யார் வீட்டில் வளர்ப்பீர்..


* விரும்பிக் கேட்ட பொருளை
அப்பாக்கள் வாங்கி வருவதற்குள்
தேவதைகள் தூங்கிவிடுகிறார்கள்..


* ஆசான்
______________________
உன் காதோரம் ஒட்டிய
சாக்பீஸ் துகள்களுக்கெல்லாம்
தலை வணங்குகிறேன் ..
அதுதானே எனக்கு அகரம் சொல்லிக்கொடுத்தது..

  
* ஊரையே வாழவைக்கும்
மழைநீரில்
செத்துச் செத்துப்
பிழைக்கிறது
அட்டைப்பூச்சி..


* உலகை அழிக்கும் உங்கள்
ஆசை நிறைவேறவேனும்
பற்றி எரியச் சருகுகளையாவது
மிச்சம் வையுங்களேன் .


* அன்புள்ள எனத் தொடங்கிய
கடிதங்களையெல்லாம் தொலைத்துவிட்டு
தாங்கள் செலுத்தத்தவறிய தவணைத்தொகை
எனும் எல்ஐசி காகிதங்களையே
சுமந்து வருகிறார் போஸ்ட்மேன் தாத்தா..


* திருவிழாக் கடைகளில்
அடம்பிடித்து
வளையல், பாசி
வாங்கி அணிந்ததோடு
கரைந்தது மிச்சமிருந்த பால்யம்.


* பெரு அழுத்தத்தோடு
வந்த மழை
ஒருவேளை
முற்றத்து வீடுகளைத்
தேடியதோ என்னவோ ?


* சோளக்காட்டை அழித்துப்போட்ட
ரியல் எஸ்டேட்
மஞ்சள் கற்களை
மறைத்துச் செழிப்பாய்
வளர்கிறது சீமைக்கருவேலை.

   

     


Wednesday, 23 September 2015

நிலவின் சாட்சியாக

என்றாவது நினைவுக்கு வரட்டும்
இந்த நாளும்..

நம்மிருவர் காதலுக்கு சாட்சியாக
நிலவும் அந்த நீண்ட இரவையும்
தவிர வேறு யாருமில்லை..
விழித்துக்கொண்டே இருந்தது
அவ்வப்போது இடைவெளிவி்ட்டு
நம்மைப்போலவே
அந்தப் பி்ன்னிரவும்..

விண்மீன்களெல்லாம் உறங்கி
வெகுநேரமாகிவிட்டது..
மகிழ்ச்சியின் உறக்கமாயிருக்கலாம்..
தேடல்களெல்லாம் முடியும் வேளையில்
தான் இங்கே தொடங்கப்பட்டது..

அசைவின்றிக் கிடந்தது உதிர்ந்த
இதழ்களெல்லாம்
ஆதலினால் வியர்வைகள்
துளிர்த்திருக்கலாம்..

அர்த்தப்படாத கனவாய்க்கூட
இருக்கலாம்..
மகிழ்வு மறுநாள் தலைதுவட்டிக்
கொண்டது மட்டும் ஏனோ ?

எல்லாம் முடிந்தது
எண்ணிக் கழிந்த நாளும்
முந்நூறைத் தொட்டது..
எல்லாம் கனவாகவே கூட
தொடரலாம்..

அந்தப் பெயர் சொல்லி
யாரோ யாரையோ அழைக்க
நீ திரும்பிப் பார்த்தலில்
நான் தெரியலாம் காட்சியாக
எல்லாவற்றிற்கும் சாட்சியாக...


Tuesday, 22 September 2015

ஆசை

எனக்காக என்னடா செஞ்ச இதுவரைக்கும் என நீ கேட்கும்போதெல்லாம்
வார்த்தைகளில்தான் சமாளித்துப்
புன்னகைக்கிறேன் ஒவ்வொரு முறையும்..
உள்ளே அழுவது உனக்கும்
புரியுமென ..


அழகிய ஊர் அது...

ஊரின் நடுவில் மலைகளில்லை..
வெள்ளாடுகள் மேய்வதையெல்லாம் பார்க்கமுடியாது..
எல்லாத் திசைகளிலும் பூக்களாகவே இருக்கும் என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது..
பிள்ளையார் கோயிலும்
பொல்லாக்குளமும்
நெல்லிக்காய் மரமும்
அவ்வளவு அழகு..
என நான் சொல்வதையெல்லாம் விட அழகானது கிருங்காக்கோட்டை.
ஏனெனில்
அது இந்துக்குட்டியின் ஊர்..


Thursday, 17 September 2015

சுவை

கொழுக்கட்டைத் தட்டை நீட்டி
அம்மா குடுத்துச்சு இந்தாங்க
எனச் சொல்லும் எல்லாக்
குழந்தைகளும் அவளைப்போலவே
தெரிகிறதெனக்கு..
ஆனால், நீ சாப்டு செல்லம் என்றவுடன் முதல் கடி தான் கடித்து மறுபாதியை ஊட்டிவிடும் இந்துக்குட்டியின் கொழுக்கட்டைச் சுவைதான் இப்போதைக்கில்லை..


Sunday, 13 September 2015

சாட்சி

ஒட்டுமொத்தப்
பிரியங்களின்
சாட்சியாக
அதோ இன்னும்
பறந்துகொண்டே
இருக்கிறது
ஒற்றைப் புறா
உயிர்விடவில்லை..
எப்பொழுதும்
போலவே இதுவும்
புரியாது உனக்கு..


Sunday, 30 August 2015

ஐந்தெழுத்துக்காரி

வேண்டுமென்றே கோவப்படுத்தியும்
கோவப்பட்டால் திணறத்திணறக்
கட்டியணைத்து
அன்பைப் பொழிந்தும்
ஆட்டிப்படைக்கிறாள்
இந்த 'ஐந்தெழுத்துக்காரி'..!


Wednesday, 26 August 2015

அழுத்தக்காரி..!

மகிழ்ச்சி துக்கமென அத்தனையையும்
என் மீதே தெளித்துப் பின்
நெஞ்சில் சாய்ந்து அழுத்திப்
பேசாத நேரங்களில் அடக்கிவைத்த
அவ்வளவையும் கண்ணீராகவே
பிழிந்துகொள்கிறாள்..
என் அழகான ஐந்தெழுத்துக்காரி..!


Wednesday, 19 August 2015

நீயும் நானும் ...

படம்: Google

அடித்து வீழ்த்திவிடத்
துடிக்கிறாய்..
சுற்றிலும் மோதிப்
பின் உன்னுடல் உரசிப்
புன்னகைக்கிறேன்..
மீண்டும் உதைத்துத்
தள்ளினாலும்
கைகோர்த்துக் குழிக்குள்
இழுக்கிறேன் உன்னையும்..
நிறத்தைத் தவிர
இன்னொரு ஒற்றுமையும்
உண்டு..
இந்தக் காதலில்
வீழ்தல் 'வெற்றி' யெனக்
கொள்ளப்படும்
இருவருக்கும்..!


என்னமோ ?

வெட்டவெளியில்
வெளிச்சமின்றி
எல்லைகளற்று
எப்பொழுதாவது
உனக்குமெனக்குமான
இடைவெளியில்
ஊர்ந்து செல்கிறது..
ஊரே அதைக்
'காதலெ'ன்கிறது.
நீ என்ன சொல்கிறாய்..?


Wednesday, 15 July 2015

தேவதைக் கதை

வழக்கம்போலவே இன்றும் ஒரு கதை கேட்கிறாள்..மறந்துவிட்ட கதைகளையெல்லாம் நினைவூட்டிப் பார்க்கிறேன்..குமுதத்திலும் குங்குமத்திலும் வெளிவந்த ஒருபக்கக் கதைகளை..சிறுவர்மலர் உட்பட ஒன்றும் நினைவிலில்லை.. ராணி காமிக்ஸில் வந்த மரியாதைராமனும் முல்லாவும் மட்டும் கொஞ்சம் நினைவிருக்கிறார்கள்..முடிவு நினைவிருக்கிறது..இடையிடையே  கதையில் பாதி நினைவைவிட்டுத் தப்பித்துத் தொலைந்துவிட்டது.. வேறு வழியில்லை.. மாறுகிறேன் நானே ..எழுத்தாளனாய் .. முன்பு கூட உனக்காகத்தான் கவிஞனாகவும் ஆகித் தொலைத்தேன் நினைவிருக்கிறதா ?
எப்படி மறப்பாய் ..
உன்னை அழவைப்பதற்கும் சொற்ப முத்தங்களுக்காகவும்தானே  பயன்படுத்தியிருக்கிறேன் அவற்றை..
மடியில் தலைவைக்கச் சொல்லி கதை சொல்லத் தொடங்குகிறேன்.
சிங்கம் வந்தது.மருள்கிறாள்.. கூடவே ஒரு முயல் உன்னைப்போல ..சிரிக்கிறாள் சின்னதாய்.. சிலநேரங்களில் நரிகள் வரும். எப்போதாவது ட்ராகன்களும் கூட வருவதுண்டு.. ட்ராகன் பார்த்ததே இல்லடா என்கிறாள்..மலைப்பாம்பையும் கடற்குதிரையையும் சேர்த்தது மாதிரி என்கிறேன்.. அவள் உருவகப்படுத்திக்கொண்டாள். நீங்களும் உங்கள் மனதில் ட்ராகன்களை அப்படியே மாற்றிக்கொள்ளுங்களேன். இல்லையெனில் நான் பொய்யென கோபம் கொள்வாள் .அவள் பக்கத்து வீட்டுக் குழந்தைக்கும் இக்கதையைச் சொல்வாளாம் . சொல்லிச் சிரிப்பாள்.
சில இரவுகளில் கதையில் திக்கித்திணறி எப்படிப் பயணிப்பது எனத் தெரியாமல் சிங்கங்களையும் மான்களையும் கூட ஒன்றாக ஓடவிடுவேன்.சிங்கம் மானை  சாப்ட்டுறாதா என அவள் கேட்கையில் தான் மான்களையெல்லாம் புலிகளாய் மாற்றிவிடுவேன்.மகிழ்ச்சியாய்க் கேட்டுக்கொண்டிருப்பாள்..சிங்கம் பசியோட இருக்கு என்றாலும் முயல வேட்டையாடப் போகுது என்றாலும் ஒரேமாதிரி 'உச்' கொட்டுவாள் ..
ஆனால் ரத்தம் தெறிக்கும் கதைகள் அவளுக்குப் பிடிப்பதேயில்லை..
பேய்க்கதைகள் சொல்லச் சொன்னாள்..ஊரிலுள்ள உரக்கேணி பற்றி ஒருமுறையும் வெள்ளையம்மா புளியமரத்தையும் பற்றிக் கதை சொல்லித்தொலைக்க அந்தப் பக்கம் போவதையே தவிர்த்துவிட்டாள்..
அதோடு அதையும் நிறுத்திக்கொண்டேன்..
தண்ணி நெறய குடி என்று சொன்னாலும் அதற்குள்ளும் ஒரு கதை கேட்பாள் .ராஜா கதை, தேவதை கதை,ஏழு மலை, ஏழுகடல் தாண்டிய சம்பவங்கள் ரொம்பவே பிடிக்குமென்பாள்..ஆனால் எனக்குத்தான் அது இன்னும் கைகூடவில்லை.. சிலநேரங்களில் அவளையே நாயகியாகவும், நான் நாயகனாகவும் எண்ணிக்கொண்டு கதை சொல்வதுண்டு.வேண்டுமென்றே அக்கதையில் கட்டிப்பிடிக்கும் காட்சிகள் வைத்துக் கமுக்கமாய்ச் சிரித்தாலும் கடைசிவரை கண்டுபிடிக்கவே தெரியாமல்தான் முழித்தபடி கேட்டுக்கொண்டிருப்பாள். பயந்துநடுங்கும்படி கதை சொன்னால் இறுக்கி அணைத்துக் கொள்வாள்.அதனாலேயே தேவையின்றியும் அந்தப்பயம் நீட்டிக்கப்படுவதுண்டு..சொல்லிக்கொண்டே இருக்கையில் பின்னாடி திரும்பி பாரு என்றால் கத்தி விடுவாள்.
சிரித்தால் கடித்து வைப்பாள்.
நீ ஒரு கதை சொல்லு என்றால் முயல் ஆமை கதை சொல்வாள் கைகளை ஆட்டியபடி..ஆனால் அவள் கதையில் முயல் மட்டுமே எப்போதும் ஜெயிக்கும்..
யானைக்கதைகளில் காது எவ்ளோ பெருசு என்பதுபோன்ற  குறுக்குக் கேள்விகளும் கேட்பாள்.
முன்புபோல சுட்டிக்கதைகள் படிக்க முடிவதில்லை.
நம்பர் நடிகை விநாயக சிவன் டைப்பான  கிசுகிசுக்கள் எல்லாம் அவளுக்குச் சுத்தமாய்ப் பிடிப்பதேயில்லை.
கர்ணன்,அர்ஜுனன் என ஆரம்பித்தால் கொட்டாவி விடத் தொடங்கிவிடுவாள்..
காக்கா நரிக்கதையை எத்தனைமுறை சொன்னாலும் திரும்பத் திரும்பக் கேட்பாள். பாட்டி பாவம்ல எனக் கிறுக்குத் தனமாய்க் கேள்வி கேட்பாள்.
பாட்டிகிட்ட வடையைத் திருப்பி குடுக்குற மாதிரி சீன் வைத்தால் குழந்தை போலவே கன்னத்தில் கைவைத்துக் கேட்டுக்கொண்டிருப்பாள்.
பேச்சுவாக்கில் ஒருமுறை நா செத்துப்போய்ட்டா யாருக்கிட்ட கத கேப்ப என்றவுடன் அழுதே விட்டாள்.
அது எனக்காகவா இல்லை கதைக்காகவா என்பது அவளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.
இப்படித்தான் சிலநேரங்களில்
கதையைக் கடத்தத் தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கையிலே எண்ணம் புரிந்தோ என்னவோ அப்படியே தூங்கியும் போய் விடுகிறாள்.
அவளையே தேவதையாக்கி நான் ஒரு கதை கண்டுகொண்டிருக்கிறேன் அடுத்தமுறை சொல்வதற்கு..
இதோ..,வெள்ளை கவுனுடன் மடியில் படுத்திருக்கிறாள்...

Sunday, 7 June 2015

எது கவிதை டியர்..?

      வெளிநாட்டிலிருந்து தோழி ஒருத்தி அலைபேசுகிறாள். ஹலோ ..எப்டி இருக்க ? என்ன பிஸியாய்ட்டியா ? ரொம்ப நாளாச்சு.. என்கிறேன். அதெல்லாம் இல்லடா..நல்லா இருக்கேன். நீ நல்லா இருக்கியா ? ஊருல மழையெல்லாம் பெய்யுதாடா ?. ஒரு கவித ஒன்னு சொல்லுடா ப்ளீஸ் என்கிறாள். கவிதையா ? நடந்து போய்க்கிட்ருக்கேன். ஈவ்னிங் சொல்றேன் கண்டிப்பா என்கிறேன். வேணும்னா இப்ப இருக்க அட்மாஸ்பியர் சொல்லட்டா ? என்கிறேன். சரி சொல்லுடா என்கிறாள்.
        
           ஒரு தாத்தா அவரோட பேரன சைக்கிள்ல வச்சு ஸ்கூலுக்கு கூட்டிட்டு போறாரு . ரெண்டு கையையும் சீட்ல ரெண்டு பக்கமும் நல்லா பிடிச்சுக்க சொல்லிட்டு கையில ஒக்காந்துற கூடாதேனு பாத்துப்பாத்து இலேசா ஒக்காந்து பேசிட்டே ஓட்டிட்டுப் போறாரு. பேக் வெய்ட் பின்னாடி இழுக்குது .

           தண்ணி ஊத்துற சத்தம்.மாடு மூச்சா போகுது. டேய் லூசு எனச் சிரிக்கிறாள்.
அப்புறம்..
அந்த வீட்டு ஹோம் தியேட்டர்ல "இப்படியே எங்கவேணா தூக்கிகிட்டுப் போ..."னு சாங் ஓடுது.. விசாலும் ஸ்ருதியும் டூயட் பாடுறாங்க..
   
         ரெண்டுநாளக்கி முன்னாடி பேஞ்ச மழத்தண்ணி இன்னும் ரோட்டுக்கு நடுவுல பள்ளத்துல கெடக்கு. நம்மூரு ரோட்டப் பத்திதான் ஒனக்கே தெரியுமே..
கார் ஒன்னு போகுது. நல்லவேள வெலகிட்டேன்.இல்லனா தண்ணி தெறிச்சிருக்கும் .

        எட்டுமணியாகப் போகுது.இப்பதான் ஒருத்தரு பால் கறக்குறாரு. பெரிய கல்லு ஒன்னு மாட்டுக்கு முன்னாடி கட்டிருக்கு.அத நாக்கால நக்குது. கன்னுக்குட்டி செத்துப்போச்சு போல.
மறுமுனை அமைதியாய் இருக்கவே, ஏய்,.கேக்குறியா என்கிறேன். ம்ம்..கேக்கறேன்டா என்கிறாள்..

        நம்ம ஊர் ரோட்டோரம் புளியமரம் இருக்குல..நம்பர்லாம் போட்ருப்பாங்களே..அதுல ஏதோ குருவி கத்துற சத்தம்.அணில் ஒன்னு வேகமா மரத்த விட்டு எறங்கி ஓடுது.
அப்புறம் ...

டேய்..போதும் விக்னேஷ். இதுக்கு மேல என்ன கவிதை வேணும் ?..
I love u da stupid.how you carry on this type of centiments,emotions and bla bla ... with you ? dear. எனச்சொல்லி நிலைக்கதவில் சாய்ந்து கொள்கிறாள்.

(ஃபோனில் எப்படி கதவில் சாய்வது தெரியும் என அறிவுஜீவித்தனமாக நீ கேட்டால் did you are loved by anyone ? அன்புன்னா என்னனு தெரியுமா என ஆரம்பித்து மனசு,மண்ணு, ம**, ப்ளா ப்ளா ப்ளாவென பல பக்க வசனம் சொல்வேன் என எதிர்பார்க்கிறாயா நண்பா ? நோ..நெவர்.கொஞ்சம் தண்ணி குடி நண்பா என வேண்டுமானால் சொல்வேன்.)

நிலைக்கதவில் சாய்ந்து கொள்கிறாள்.
take care dear எனச்சொல்லி ஃபோனை வைக்கிறேன்.
யோசிக்கிறேன். still.....
எது கவிதை விக்னேஷ் ..??


எது கவிதை ..?

படம்:முகநூல்

பழநி சரவணபவன். மதிய உணவு சாப்பிடுவதற்காகப் போய் அமர்கிறேன்.பக்கவாட்டு வட்டமேசையில் இளம் தம்பதியர் சிறு குழந்தையுடன். அளவு சாப்பாடு வருகிறது.கூடவே ஒரு தட்டு முழுக்க வட்டக்கிண்ணங்களில் சாம்பார்,ரசம்,குருமா,மோர் என..
சாப்பிடத் தொடங்குகிறார்கள்.
        "சாம்பார்ல புகைவாசணை வருது" என்கிறாள் அந்தச்சகோதரி. "உன் சமையலுக்கு இது எம்புட்டோ பரவாயில்ல" எனச் சிரிக்கிறார் அவர். "வீட்டுக்கு வாங்க இருக்கு உங்களுக்கு.." எனச் செல்லமாய் அதட்டுகிறாள்.

       அய்யோ க்யூட் ....
கவிதை போல அவ்வளவு அழகு. சுற்றிலும் நிகழ்கவிதை நிகழ்கையில் கவிதை தேடி எங்கு அலைந்து கொண்டிருக்கிறாய் விக்னேஷ் ? என கேஷியரின் அருகில் உள்ள பொம்மை  கேட்பது எனக்கு மட்டும்தான் கேட்கிறதா ?


Tuesday, 26 May 2015

பேசாத பேச்செல்லாம்...

     வாழ்க்கை ஒருகட்டத்தில் இல்லையில்லை ஒரு புள்ளியில் சூன்யமாகிறது..அதுபோன்ற பல புள்ளிகளை இன்னும் சந்திக்கவேண்டி வரலாம்.திசைகள் மாறலாம்.தீர்வுகளும் ஏற்படலாம்.மேலைநாட்டுத் தத்துவங்களில் ஆகச்சிறந்ததாய் இதைச் சொல்வேன்.
"Only one thing is certain.that is, nothing is certain."ஆம். நிலையாமை ஒன்றே நிலையானது இவ்வுலகில் .
சூழல்களே முடிவுகளைத் தீர்மானிக்கின்றன.
     
            தாய், தந்தை, சகோதரிகள் மற்றும் அவள். அனைவரது அன்பு இவற்றைவிட கடவுள்,கோவில்,வழிபாடு,இவையெதுவும் பெரிதில்லை அல்லவா ? ஆம் எனில் நீயும் என் தோழனே. .

            நாத்திகம் என்பதென்ன ? கடவுள் நம்பிக்கைகளுக்கு எதிரானதல்ல. மூடநம்பிக்கைகளுக்கு எதிரானது.
கோவில்களுக்குச் செல்வேன். விழுந்தும் வணங்குவேன் . திருநீறும் இட்டுக்கொள்வேன். ஏனெனில் என்னைச் சார்ந்தோரின் நம்பிக்கை அது. அதீத நம்பிக்கை ,இந்த அன்புதான் சிவமெனில் நாத்திகன் ஏன் வேல்தாங்கக் கூடாது.? ஏன் மொட்டையடிக்கக் கூடாது ? ஏன் அலகுகுத்திக் கொள்ளக் கூடாது ?

            சிவத்தை விடவும் அன்புதான் பெரிதென்று அதன்பால் கட்டுண்ட முழு மனிதன் எவனோ அவனே 'நாத்திகன்' என்பேன். அன்பே சிவம். அதீத அன்பும் நம்பிக்கையும். அதுதானே கடவுள்!

          இழப்புகளும் இயற்கைதானே ..! ஆனால் இந்த இழப்புகளின் அளவைப் பொறுத்து அதன் தாக்கம் இருக்கத்தானே செய்யும்.அவளின் குரல் கூடவே இல்லையெனில் ,
பிரிதொன்றால் நிரப்பவியலா வெற்றிடம் ஒன்றுண்டு எனக்குள்..

கவிதை, கடவுள், கருமம், மயிரு, மட்டை எதுவுமின்றி
சுயநலமிக்க கிறுக்கனாய் மொட்டைத்தலை விக்னேஷ் பாப்பா .


Thursday, 16 April 2015

உதிரும் இதழ்கள்

படம்: முகநூல்

சற்று முன்னரே
பிறந்த என்னிடம்
முதல் சொல்லைக்
கேட்டிட முயல்கிறீர்கள் ..
முரண்டு பிடிக்கிறேன்
பேச மனமின்றி..
செவிகளைத் திறந்து
சுற்றிலும் பேசும்
ஓசைகளை சப்தமின்றிக்
கேட்கிறேன்..
சுகமாய்த்தான் இருக்கிறது..
பேச எத்தனிக்கையில்
இருள் சூழ்கிறது ..
இதில் எனக்கு விருப்பமில்லை..
காதுகளை அடைத்து
குரல் எழுப்புமாறு
கூவுகிறீர்கள் ..
காலால் உதைத்து
வாய்திறக்க மறுக்கிறேன் ..
உளி கொண்டு
உச்சந்தலையில் அடித்து
உரக்கப் பேசச்
சொல்கிறீர்கள் ..
'மௌனம் என் மொழி'யென
முதல் இதழ் உதிர்க்கின்றேன்..
அடுத்த இதழை உதிர்க்க
அவசியமற்றுப் போகிறது...



Posted via Blogaway