படம்: முகநூல்
சற்று முன்னரே
பிறந்த என்னிடம்
முதல் சொல்லைக்
கேட்டிட முயல்கிறீர்கள் ..
முரண்டு பிடிக்கிறேன்
பேச மனமின்றி..
செவிகளைத் திறந்து
சுற்றிலும் பேசும்
ஓசைகளை சப்தமின்றிக்
கேட்கிறேன்..
சுகமாய்த்தான் இருக்கிறது..
பேச எத்தனிக்கையில்
இருள் சூழ்கிறது ..
இதில் எனக்கு விருப்பமில்லை..
காதுகளை அடைத்து
குரல் எழுப்புமாறு
கூவுகிறீர்கள் ..
காலால் உதைத்து
வாய்திறக்க மறுக்கிறேன் ..
உளி கொண்டு
உச்சந்தலையில் அடித்து
உரக்கப் பேசச்
சொல்கிறீர்கள் ..
'மௌனம் என் மொழி'யென
முதல் இதழ் உதிர்க்கின்றேன்..
அடுத்த இதழை உதிர்க்க
அவசியமற்றுப் போகிறது...
Posted via Blogaway
Total Pageviews
Thursday, 16 April 2015
உதிரும் இதழ்கள்
கவிதையொன்று உதிர்கிறதே...

ஒரு பார்வை
ஒரு தலையாட்டல்
ஒரு ஆச்சரியம்
ஒரு புருவம் உயர்த்தல்
ஒரு கண்சிமிட்டல்
ஒரு புன்னகை
ஒரு மகிழ்ச்சி
ஒரு உதட்டுச் சுழிப்பு
ஒரு மௌனம்
ஒரு வார்த்தை
ஒரு முத்தம்
ஒரு மழலை
ஒரு விரலசைவு
ஒரு கைகோர்ப்பு
ஒரு தலைகோதுதல்
ஒரு அரவணைப்பு
ஒரு தவிப்பு
ஒரு ஏக்கம்
ஒரு பாசம்
ஒரு பரிவு
ஒரு சீண்டல்
ஒரு சண்டை
ஒரு சிணுங்கல்
ஒரு அழுகை
ஒரு சமாதானம்
ஒரு வெளிச்சம்
ஒரு இருள்
ஒரு நிலவு
ஒரு மழை
ஒரு மலர்
ஒரு மரம்
ஒரு தனிமை
ஒரு நேசம்
ஒரு உணர்வு
ஒரு தேநீர்
ஒரு பேருந்து
ஒரு பயணம்
ஒரு குறுஞ்செய்தி
ஒரு வாசணை
ஒரு இரவு
ஒரு கனவு
ஒரு நாள்
ஒரு மாலை
ஒரு தூக்கம்
ஒரு அழைப்பு
ஒரு ஹலோ
ஒரு நிழல்
ஒரு பள்ளி
ஒரு நினைவு
ஒரு அதட்டல்
ஒரு காத்திருப்பு
ஒரு கையசைத்தல்
ஒரு அச்சம்
ஒரு ஜன்னல்
ஒரு கதவோரம்
ஒரு மாடிப்படி
ஒரு வெட்கம்
ஒரு 'ப்போ'
ஒரு சாக்லேட்
ஒரு சாத்துக்குடி ஜூஸ்
ஒரு புகைப்படம்
ஒரு தழுவல்
ஒரு கண்ணீர்
ஒரு விசும்பல்
ஒரு நடை
ஒரு காற்று
ஒரு வானம்
ஒரு பரிசு
ஒரு எச்சில்
ஒரு சிரிப்பு
ஒரு நீ
ஒரு நான்
ஒரு பேரன்பு
இன்னும் எத்தனை
'ஒரு'க்கள் இந்த
ஒரு காதலில்..
ஒவ்வொன்றும்
ஒரு கவிதையல்லவா ?
உன் தலையிலிருந்து
உதிரும்
ஒரு மல்லிப்பூவும்
ஒரு கவிதையொன்றை
உதிர்த்திடுமே ...
Posted via Blogaway
Wednesday, 15 April 2015
ஒரு துளி வலி..!
ஒட்டுமொத்தப் பிரபஞ்சமும்
ஒரு துளிக்குள் அடங்கிப்போகும் .
அது வறண்ட நிலத்தில்
விழுந்த முதல் சொட்டு
மழையாக இருக்கலாம் .
கன்றுக்குட்டி முட்டிக்
குடிக்கும் தாய்ப்பசுவின்
மடியில் சுரந்த
சீம்பாலாய் இருக்கலாம் .
காலையில் நடக்கையிலே
சாலையோரப் புல்லில்
தகதகத்து சூரியனையும்
ஒளித்துவைக்கும் சிறு
பனித்துளியாய் இருக்கலாம் .
அந்த நேரத்து அமைதியைக்
கலைக்கும் வண்ணம்
குழாயில் 'க்ளுக்'கெனச்
சொட்டும் ஒருதுளித்
தண்ணீராய் இருக்கலாம் .
குழந்தைகளைத் தூக்கிக்
கொஞ்சுகையில் சிந்தும்
எச்சிலாய் இருக்கலாம் .
அன்புக்குரியோரின்
வெறித்த பார்வையை
விலக்க எண்ணி
விரலால் தொட்டு முகத்தில்
தெளித்த குளிர்பானமாய்
இருக்கலாம் .
உழைத்துக் களைத்து
வீடு வந்த கணவனின்
முகம் நோக்கி மனைவி
புடவைத் தலைப்பால்
அழுத்தத் துடைந்த
அந்த ஒருதுளி
வியர்வையாய் இருக்கலாம் .
அந்த ஒரு துளி
இப்படி அழகாய்த்தான்
இருக்கவேண்டும்
என்பதில்லை .
மாதவிடாய் வலியின் ஊடே
சப்தமின்றிக் கதறும்
பெண்ணின் உடையில் சிந்தும்
உதிரமாகவும் இருக்கலாம் .
அந்த ஒரு துளி...
பாலின்றிப் பசியில் அழுது
தாய்முலை தேடும் குழந்தை
அதைப்பெற்ற ஏழைத்தாய்
வேதனையுடன் அழச்சக்தியற்று
விசும்ப அதில் கரைந்த
கடைசிச் சொட்டுக்
கண்ணீராய்க் கூட
இருக்கலாம் ..
Tuesday, 14 April 2015
காதல் என்பதொரு காவிய முரண்
இங்கே நிழலான நினைவுகள்
வண்ணங்களால் மின்னும்..
நிஜங்கள் கறுப்புவெள்ளைத்
திரையாய்க் கடக்கும்..
மனங்கள் சிறைப்பட்டுக் கிடக்கும்..
எனினும் மனங்கொள்ளாச் சுதந்திரக்
காற்று சுவாசிக்கக் கிடைக்கும்..
வார்த்தைகள் ஆயிரம் உரையாடும்.
இறுதியில் அந்த
மௌனமொழி தலைதூக்கும்..
முட்டல்களும் மோதல்களும்
முறையாய்த் தொடங்கினாலும்
முத்தங்களால் முற்றுப்பெறும்..
இல்லாக் காற்றும் மிதக்கவைக்கும்..
நின்றபின் கூட மழையது
நனைய வைக்கும்..
தேய்பிறையில் கூட வளரும்
காதலுக்கு உவமைகூறும் நிலா..
கண்கள் விழிதிறந்தே
கனவு காணும்..
சுற்றிலும் வெயிலடிக்கும்..
உள்ளுக்குள்ளே உவகை
மழை பெய்யும்..
மார்கழியில் கோடைவரும்..
பங்குனியில் பனிவிழும்..
முரண்கள் தமிழுக்கு மட்டுமா அழகு?
"எதுவும் வேண்டாம்.
எப்பவும் நீ கூடவே இரு.."
காதலென்பது இதைப்போல
காவிய முரணல்லவா..?
Posted via Blogaway
கடவுளும் ஒரு கோப்பைத் தேநீரும்..
அதை எண்ணி வெட்கத்தால் பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டு கர்ச்சீப் எடுத்து முகம் மறைத்துத் துடைக்க ஒன்றுமில்லாமல் அடங்குகிறது நீர். மேற்கொண்டு நடக்க வெயில் கொஞ்சம் மட்டுப்பட்டால் பரவாயில்லை என நினைத்துக்கொண்டே நகர அந்தக் கதிரவன் காது கொடுத்துக் கேட்டதோ என்னவோ தலைதாழ்த்திப் பின்வாங்க நான் முன்னேறினேன். எதிரே டீக்கடை.ஏனோ நிற்க வேண்டும்போல் இருந்தது.வெயில் மண்டையைப் பிளக்கையிலும் கூட தேநீர் அருந்துவதென்பது சுகமானதாய்த்தான் இருக்கிறது.இப்போது குடிக்க மனமில்லையெனினும் வெறும் பிஸ்கட்டோடு அந்தக் கடையைக் கடக்கப் பிரியமில்லை. பதினைந்து வயதிருக்கும் அந்தச் சிறுவனுக்கு..குழந்தைத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்படவில்லை என வழக்கமாக எல்லாக் கடைகளிலும் காணப்படும் அந்த விழிப்புணர்வு ஸ்டிக்கர் அந்தக் கடையிலும் இருந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. வயிற்றுப் பிழைப்புக்கு வேறு வழி இல்லையெனில் இதில் தவறேதும் இல்லையெனவே கருதுவேன். வாழ்வதற்கு வழியை உண்டாக்காமல் வெற்றுச் சம்பிரதாயமாக ஸ்டிக்கர் ஒட்டுதல் ஒன்றும் பெரிதாய்க் கிழித்துவிடப் போவதில்லை. யாரிடம் முறையிடுவது ? கடைக்கு வெளியே ஒருவர் கலைந்த கேசம், கசங்கிய துணிகள்,முகத்தை முழுதாய் மறைக்குமளவு தாடியுடன் இவையனைத்திற்கும் நேர்மாறாய் ஏதோ தெளிவான சிந்தனையுடன் சற்றுமுன்பே ஏதோ நாட்டு அதிபரைச் சந்தித்து தேநீர் அருந்திய அதே திருப்தியுடன் கனிந்த பார்வையுமாய் .. இருந்தாலும் அருகே போய் அவர் முதுகில் தொட்டு ஒரு தேநீர் டம்ளரை நீட்டி நம்நாட்டின் அவலங்களையும் அநிநாயங்களையும் சொல்லி அவர் பதிலுக்குக் காத்திருந்தேன்.புரியாதது போலவே முகத்தை வைத்துக்கொண்டு மேலேயும் கீழேயுமாய் என்னைப் பார்க்க அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பி யாரெனக் கேட்டேன்.
தலையை உயர்த்திக் 'கடவுள்' என்றார்.
பைத்தியக்காரன்கிட்ட என்ன தம்பி பேசிக்கிட்டு இருக்கீங்க எனக்குரல் கேட்டு திரும்பி மறுபடி திரும்புவதற்குள் அந்தக் 'கடவுள்' எதிர்ச்சாலையில் நடந்து போய்க்கொண்டிருந்தார்.டம்ளர் கல்லில் அமர்ந்திருந்தது. வெயில் திரும்ப சுடுவது போல இருந்தது.
மண்டை கணக்க மறுபடி நடந்தேன் அடுத்த தேநீர்க்கடை நோக்கி...
Friday, 3 April 2015
உறக்கத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும் ..!
தூக்கம் வராத இந்தப் பின்னிரவில்
அமர்ந்து எதையோ தட்டச்சுகிறேன்.
தூக்கம் தொலைந்ததற்குக் காரணம்
பசியாய் இருக்கலாம்.அல்லது
உண்டது செரிக்காமல் இருக்கலாம்.
யாரையோ நினைத்துக் கொண்டிருக்கலாம்.
அது யாராகவும் இருக்கலாம்.
உதாசீனப் படுத்தப் பட்டிருக்கலாம்.
ஏதோ புரியாத மொழிப்படத்தை
பார்த்த குழப்பமாயிருக்கலாம்.
பங்குனி வெயிலின் தாக்கமாக
இருக்கலாம்.ஏன்? கொசுத்தொல்லையாகக்கூட
இருக்கலாம்.மாலையில் போட்ட
குட்டித்தூக்கம் தான் காரணமென
நான் சொன்னால் மட்டுமே உனக்குத்
தெரிந்திடப் போகிறது.எனினும்,
அறையில் அனைவரும் உறங்க
இருட்டிய வெளிச்சத்தில் ..
(இது உங்களுக்கு முரணாகத் தோன்றலாம்.
எப்படி எடுத்துக்கொண்டாலும் இந்த
நள்ளிரவில் அதைப்பற்றி நினைக்க
வெல்லாம் நேரமில்லை.இருட்டிலும்
எனக்கு மட்டுமே தெரியும் வெளிச்சம்
என வைத்துக்கொள்ளலாமே ..
இது நம் கண்களின் சிறப்புத்தன்மை.
வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்குள் நாம்
நுழையும்போது இருட்டாகக் கண்கள் தெரியாத
நிலை ஏற்படும்.இருட்டு பழகிய பிறகு
இண்டிகேட்டர் வெளிச்சம் கூட தூக்கத்தைக்
கெடுக்கும் அசாத்தியத் திறமை
கொண்டது.
ஐயோ..இதெல்லாம் ரொம்ப முக்கியமா ?)
எங்கவிட்டோம் ?
ஆங்..இருட்டிய வெளிச்சத்தில் காலாற
குறுக்கும் நெடுக்குமாய் நடந்து
அறையின் பரப்பளவையும் மூலைவிட்டத்தையும்
அலைந்து அளந்து கொண்டிருத்தல்
எத்தனை சுகம்?
சோகம் எனக் கருதினால் அது சோகமே ..!
இப்போதுதான் எல்லா எண்ண ஓட்டங்களும்
வந்து போகும். அன்றைய நினைவின்
நீட்சியாகப் பலவற்றை நம் மனம்
அசைபோடும்.
பயணங்களும் பாடங்களும் கண்முன்னே
வந்துபோகும். இரயிலிலும் பேருந்திலும்
செல்வது மட்டுமே பயணத்தில் சேருமா என்ன ?
மூன்றாவது மாடியிலிருந்து தரைக்கு
படிக்கட்டுகளின் வழியே மெதுவாய்
இறங்கி ஒவ்வொரு தளத்திற்குமிடையே
நீண்ட பெருமூச்சொன்றை விட்டுக்கொண்டு
கைப்பிடிகளின் உதவியின்றி தரைத்தளம்
அடைவதும் எதிரே பார்த்த முகங்களும்
எப்பொழுதாவது அவசரமாகப்
படியிறங்கையில் எதிரே வருவோர் மீது
மோதிப் புன்னகைத்து சாரி..! எனக்
கடந்து செல்லுதலும் கடைசிப்படியில்
கால் நழுவித் தடுமாறி கட்டைச்
சுவரைப் பிடித்தூன்றி நின்று
தலையைச் சிலுப்புவதுமாய்
ஆயிரம் நினைவுகள் ஒவ்வொரு
படியிறங்களிலும்..
இப்போது சொல்லுங்கள்..
இதைப் பயணம் எனக்கூறுதல் தவறா ?
அத்தனையையும் கடந்த அன்றையநாள்
அந்தக்கருமம் எல்லாம் இப்போதுதான்
வந்து தொலைக்குமா ? என நாம்
கருதினால் மட்டும் நினைவுகளை
அழித்திட முடியுமா என்ன?
இருங்க ..தண்ணி குடிச்சுக்கிறேன்.
ம்ம்..நினைவலைகளின் சுமைகளுடன்
உறங்கிப்போவதை விட உங்கள்
தூக்கத்தைக் கெடுத்து யோசிக்க
வைத்த திருப்தியுடன் தூங்குவேன்.
இது மனிதர்களின் குரூர புத்தியா ?
அது உண்மையெனில் நான்மட்டும்
அதில் எப்படி விதிவிலக்காவேன்..?
இன்னும் கொஞ்சநேரம் மொக்க போடலாம்தான்.
ஆனாலும், அந்தக்காற்று என்னை அடித்துத்
துரத்தி கட்டிலில் படுக்கவைத்துத்தான்
ஓய்வேன் என சபதமேற்கொண்டிருந்தால்
நான் என்ன செய்ய..?
உறக்கத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்.
உறக்கம் மறுபடி வெல்லும்..!
தூங்குற நேரத்துல இதெல்லாம் ரொம்பத்
தேவையா ?
ஆஆஆஆவ்....
குட் நைட்.
Posted via Blogaway
Sunday, 29 March 2015
எங்கே எந்தன் சங்கத் தமிழ்..?
என் தமிழ் எங்கே?
வீரமும் ஈரமும் கலந்தே
விளைந்த எந்தமிழ் எங்கே ?
முதல்நாள் போரிலும் அதற்கு
முந்தைய நாள் போரிலும்
தன் கணவனையும் தகப்பனையும்
இழந்த அந்த வீரத்தாய்
மூன்றாம் நாள் போர்முரசு கேட்க
தன் பச்சிளம் பாலகனைத்
தலைசீவி உடையிட்டு
போருக்கு அனுப்பிய அந்தப்
புறநானூற்றுத் தமிழ் எங்கே?
அதனையும் மிஞ்சிய இன்னொரு
புறநானூற்றுத் தாயொருத்தி தன்மகன்
போரிலே புறமுதுகிட்டான் எனக்கேட்டுச்
சினங்கொண்டாள்.செருக்களம்
சென்று உடல்களைப் புரட்டிப்பார்த்தாள்.
நெஞ்சில் வேல் குத்தி தன்மகன்
வீழ்ந்துகிடக்க பெருமைகொண்ட
அவள் மடியில் கிடத்தி மகிழ்ந்தாளாம்.
அந்தத் தமிழ் எங்கே?
படிப்பவர் புல்லரிக்கும் அந்தச்
சங்கத் தமிழ் எங்கே ?
பாரதியும்,அவன் தாசனும் நெஞ்சினுள்
உரமேற்றிய அந்த இடைத்தமிழ்
எங்கே?
வீறுகொண்ட நெஞ்சினாய் வா..
என்றழைத்த எம் தமிழ் எங்கே ?
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு..
என முழங்கிய தாய்த்தமிழ் எங்கே?
காற்றும்,மழையும்,வறண்ட பாலையும்,
வற்றிய கடலும்,வனமும்
கவிதையாகும் என் தமிழில்.
தாமரை மலரும்,தண்ணீர் அல்லியும்
மட்டுமா கவிதையாகும்?
காட்டரளியும்,கள்ளிச்செடியும்
கூடக் கவிதைதான் நமக்கு..!
எதுகையும் மோனையும் இயைபும்
அடுக்குத்தொடர் இரட்டைக்கிளவி
என எல்லாம் அமைந்த எம்மொழி .
இலக்கியம் என்ன ஆனது?
எங்கே எம் தமிழ்ப் புலவர்கள்.?
தமிழ் இனி மெல்லச் சாகும்..
எனப் பாரதி சொன்னது பலித்திடுமா?
இன்று தமிழ் கற்றோர் நிலை என்ன?
தூக்கிவைத்துக் கொண்டாடப்படுகிறார்களா?
உலகத்தமிழ் மாநாடு நடத்தி
தமிழ் கற்றோர் நிலை உயர்த்தப்பட்டதா ?
செம்மொழி அந்தஸ்து பெற்றது..
தமிழரின் வாழ்வு செம்மை பெற்றதா ?
இலக்கியம் படித்தோரின் வேலை
இல்லாத் திண்டாட்டத்திற்கு யார்
காரணம் ?
தமிழ்நாட்டில் தமிழ் கற்றவர் நிலை
நகைப்புக்குரியதாகிப் போனது ஏன் ?
இன்று என்னானது என் உயிர்மொழி ?
காலத்தின் கோலத்தால்
மொழிக்கலப்புற்று சிறப்பை
இழக்கிறதே ..ஏன்
இனியேனும் விழிப்புறுவோம்.
தமிழ் இனி மெல்லத் துளிர்க்கும் .
'தமிழ் எங்கள் உயிருக்கு நேர்'
எனி வே...!ஆல் ஆர் ஃபேக்ட்.
வயிற்றுக்கு என்ன வழி?
Friday, 27 March 2015
கமான் மிஸ்டர் கூல்..!
அன்றைய பீகாரின் ராஞ்சி அருகில் உள்ள
கிராமத்தில் 1981 ல் பிறந்தவர்.
பேட்மின்டனிலும் கால்பந்திலும் ஆர்வம்
கால்பந்தில் சிறந்த கோல் கீப்பர்.
அதனாலோ என்னவோ..
கிரிக்கெட்டிலும் விக்கெட் கீப்பர்.
கிரிக்கெட்டின் மீது காதல்.
1999 களில் பீகார் உள்ளூர் கிரிக்கெட்
அணியில் விளையாட வாய்ப்புப் பெற்றார் .
வறுமையின் பிடியில் இறுகாமல்
டிக்கட் பரிசோதகராக காரக்பூரில் பணி.
சுனாமி அலை உலகையே உலுக்கிய
அதே 2004 ஆம் ஆண்டு.அதற்கு
மூன்று நாட்கள் முன்பே யாருமறியாத
இந்த அமைதிப்புயல் சர்வதேச கிரிக்கெட்டில்
காலெடுத்து வைத்தது.
வங்கதேசத்திற்கு எதிரான அப்போட்டியில்
முதல் பந்தை எதிர்கொண்ட அவரை
பெவிலியன் ரன் அவுட்டோடு அன்பாக
வரவேற்றது.
வலதுகை நடுவரிசை ஆட்டக்காரராக
ஆடத்தொடங்கினார்.
அதிரடியாய் வெடித்ததெல்லாம் தனிக்கதை.
அதற்கடுத்த டிசம்பரில் டெஸ்டில் அறிமுகம் .
அதற்கடுத்த 2006 டிசம்பரில் இருபது ஓவர்
போட்டியில் அறிமுகமானார்.
அவரது கடைசி டெஸ்டும் டிசம்பரிலே
அமைந்தது எதிர்பாரா சோகம்.
ஆஸ்திரேலியத் தொடரின் தோல்விகளோடு
90 போட்டிகளோடு ரசிகர்கள் எதிர்பார்க்காத
ஓய்வுமுடிவை அறிவித்தார்.
இவரின் மிகப்பிரத்யேகமான
'ஹெலிகாப்டர் ஷாட்' விசில் போட வைக்கும்.
ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துவைப்பதில்
உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர்.
தலைசிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவர்.
தோல்விகளால் திணறிய இந்திய
அணிக்கு கேப்டனாக 2007ல் பொறுப்பேற்றார் .
டி20 உலகக்கோப்பையில் அதிரடி வெற்றி.
அன்றுமுதல் தொட்டதெல்லாம் வெற்றிமயம் .
28 வருடக் கனவுகளோடு உலகக்கோப்பை
வெல்லும் முனைப்புடன் ஆடி
இறுதிப்போட்டியில் அடித்த தகர்த்திட முடியாத
அந்த 91* ரன்களையும் பெவிலியன் தாண்டிய
அந்தக் கடைசி சிக்ஸரையும் மறந்திட
முடியுமா..?
கிரிக்கெட்டின் கடவுளைக் கோப்பையுடன்
சுமந்த அந்தத் தருணங்கள்.
2013 ல் 'சாம்பியன்ஸ் டிராபி' கோப்பையைக்
கைப்பற்றி மூன்றுவகையான
ICC சாம்பியன்ஷிப் கோப்பைகளையும்
வென்ற ஒரே அணி என்னும் பெருமையையும்
பெற்றது இந்தியா..
இவரது சீரிய தலைமையின்கீழ்
நாற்பது ஆண்டுகளுக்குப்பிறகு டெஸ்டில்
ஆஸ்திரேலியாவை அடித்துநொறுக்கி
'ஒயிட்வாஷ்' செய்த முதல் அணி
எனும் புகழையும் பெற்றது.
ICC ஆண்டின் சிறந்த வீரர் விருதை
2008 மற்றும் 2009 ஆண்டுகளில்
பெற்றவர்.இருமுறை இவ்விருதைப் பெற்ற
முதல்வீரர் எனும் பெயரையும்
தனதாக்கிக் கொண்டார்.
2007 ல் ராஜீவ்காந்தி கேல் ரத்னா
2009ல் மதிப்புமிக்க 'பத்மஶ்ரீ' விருதுகளையும்
பெற்றதோடு மட்டுமின்றி
கபில்தேவிற்குப் பிறகு
இரண்டாவது கிரிக்கெட் வீரராக
இந்தியப் பாதுகாப்புப்படையின்
கௌரவ 'லெப்டினன்ட் கலோனல்'
பதவியளித்தும் கௌரவித்தது அரசு.
ஃபோர்ப்ஸ் இதழ் தரவரிசையில்
உலகின் 22ஆவது மதிப்புமிக்க வீரர் எனவும்
டைம் ஆங்கிலப் பத்திரிக்கை வெளியிட்ட
உலகின் செல்வாக்கு மிகுந்த நூறு
நபர்களில் ஒருவராக 2012 ல் தேர்வு
செய்யப்பட்டார்.
இது ஒன்றும் ஒரு நள்ளிரவில் பெற்ற
வெற்றிகள் அல்ல.
இவற்றிற்குப் பின்னால் அவரின் தியாகமும்
திறமைகளும் வியக்கவைப்பவை..
எத்தனையோ போட்டிகளில் வெற்றியைப்
பெற்றுத்தந்தாலும் தாண்டவமாடியதில்லை.
அவரின் அதிகபட்ச மகிழ்ச்சி என்பது
ஒன்றுமறியாதவர் போல
ஒற்றை ஸ்டம்பை கைகளில் ஏந்திச் செல்வதே.!!
ஆறுமுறை 'தொடர்நாயகன்' விருது பெற்றவர்.
அப்படி ஒன்றும் சாதித்திராதது போல
முகத்தை வைத்துக்கொள்ளும் அந்த
வித்தையை எங்கே கற்றாரோ ?
முகத்தில் அந்த குறும்புன்னகையும்
கண்களில் அடங்காத வெறியும்
இன்னும் எத்தனை நாடுகளைப்
பந்தாடக் காத்திருக்கிறதோ ...?
இந்திய அணி லீக் போட்டிகளிலேயே
வெளியேறும் எனும் கணிப்புகளை உடைத்து
ஏழு தொடர்வெற்றிகளைப் பெற்று
தற்போது கூட ஆசையாய்ப் பெற்ற
மகளை இன்னும் நேரில் காணாமல்
தான் கொண்ட குறிக்கோளை நிறைவேற்றிட
உலகக்கோப்பையில் ஆடிவிட்டு
நாளைதான் தாய்நாடு திரும்புகிறார்.
ஒரு பந்திற்கு ஆறு ரன்கள் தேவை
என்ற நிலையிலும் ஒரு வீரன்
அதே மென்புன்னகையுடன் களத்தில்
நின்றுகொண்டிருந்தால் ஹெல்மட்டைக்
கழற்றிப் பாருங்கள்.
அது 'கேப்டன் கூல்'ஆக இருக்கலாம்.
ஆறு ஓவரில் நூறு ரன் வெற்றிக்குத் தேவையெனில்
match still alive ..?! எனக் கமெண்ட்ரி வந்தால்
அவர்தான் நம் தல MSD ..!
அவர் போகும் பாதையில் பூக்களைத்
தூவச்சொல்லவில்லை..
கற்களையாவது வீசாமலிருங்கள்..
அவர் கற்றுக்கொண்டதும் நமக்குக்
கற்றுக்கொடுத்ததும் இதைத்தான்...
வெற்றிகள் மட்டுமே வாழ்க்கையா என்ன ?
வலிகளும் சேர்ந்ததுதான்.!
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.
கமான் இண்டியா..!
கமான் மிஸ்டர் கூல்...!
Wednesday, 25 March 2015
தேவை..! மற்றுமொரு சுதந்திரம்.!
என்னவாய்ப் பொருள் கொள்ளப்படுகிறது ?
பெண்களுக்கு அந்த 33% உரிமையைப்
பெற்றுத் தருவதா ?
பெண் சுதந்திரம் பற்றி வாய்கிழிய
மேடைகளில் பேசித் திரிவதா ?
கல்வியிலும்,அரசியலிலும்
மகளிரைப் பங்குபெறச் செய்து
அவர்களைத் தாங்களாகவே
முன்னேறச் செய்வதா ?
விண்வெளிக்கு அனுப்பி
வேடிக்கை பார்ப்பதா ?
எது எப்படியாகினும் ..
இன்று இந்தப் பாரதநாட்டில்
எத்தனை சகோதரிகள் வன்புணர்வு
செய்யப்படுகிறார்கள் .?
தலைநகர் முதல் தட்டான்
பறக்கும் அடித்தட்டு கிராமம் வரை
மறைக்கப்பட்டும் மறக்கப்பட்டும்
எத்தனை சீரழிவுகளால் நம்
சகோதரிகள் துன்பப்பட்டிருப்பார்கள்..?
'கற்பழிப்பு' இந்த வார்த்தையை
தினசரிகளில் கண்டும் காணாமல்
எத்தனை முறை ஜஸ்ட் லைக் தட்
கடந்து சென்றிருப்பாய்..?
அன்னை தெரசாவையும்,
ஐரோம் ஷர்மிளாவையும் மட்டுமே
நாம் எத்தனை நாட்களுக்கு
போற்றிக்கொண்டே இருப்போம் ?
அரசியலுக்கு அப்பாற்பட்டு
ஈ.வெ.ரா வுக்குப் பிறகு
எத்தனை பெண்ணியவாதிகள்
பெண்ணுரிமைக்குக் குரல்
எழுப்பியிருப்பார்கள்..?
'பெண்கள் நம் கண்கள்'
எனும் சொற்றொடர் வெறும்
அடுக்குமொழி வார்த்தைப்
பிரயோகத்திற்கு மட்டுமே பயன்படல்
எவ்வளவு பெரிய அவலம்..?
பள்ளித்தேர்வுகளில் மாநில
சிறப்பிடங்கள் பெற்ற மாணவிகள்
பின்னாட்களில் சஹாராவிற்குக்
குடிபோய்விட்டார்களா என்ன ?
இல்லையெனில், அவர்களின்
திறமைகள் மழுங்கடிக்கப்பட்டு
முன்னேறவிடாமல் செய்தது எது ?
அதற்குப் பெயர்தான் 'ஆணாதிக்கமா ..?'
உலகைத் தாங்கவேண்டிய அந்தக்
கைகளைக் கட்டிப்போட்டது யார் ?
நீயாய் இருக்கும் அல்லது நானாய்
இருக்கும்.
இன்னும் எத்தனை தேவதைகளை
நாம் இழக்கக் காத்திருக்கிறோம்?
ஒரு வன்புணர்வுக் குற்றவாளி
ஊடகத்தில் வெளிப்படையாகப்
பேட்டி கொடுக்க நாம் ஏற்படுத்திய
சுதந்திரம் நம் பெண்களுக்கு ஏன்
இன்னும் வழங்கப்படவில்லை .?
அடித்துப் பறிக்கவேண்டும் என
நினைக்கிறாயா ? ஆம் எனில்,
நெரித்து ஒடிக்க மெல்லிய கழுத்தெலும்பும்
அடித்தே கொல்ல உடலமைப்பையும்
உடைய அவர்களால் எப்படிமுடியும் ?
இந்தக் கேள்விகளையெல்லாம்
நீ என்னிடம் திருப்பிக்கேட்டால்
"காஃபி ல இன்னும் கொஞ்சம்
சுகர் போடு" எனச் சொல்லிக்கொண்டே
எழுதிக்கொண்டிருக்கும் என்னால்
மட்டும் எப்படி பதில்கூற முடியும்
எனதருமை நண்பா...
Monday, 23 March 2015
நீ கேளு நண்பா...
லவ்வு கிவ்வு பண்ணுறியாடா ?
அப்டினு நீ கேட்டா நா ஒன்னும்
சொல்லமாட்டேன் நண்பா..
அதெல்லாம் இல்லடா ..நம்மளலாம்
யாருடா லவ் பண்ணுவா ?
சும்மாதான் எழுதுறேன்னு சொல்லுவேன்.
நீ அத நம்பிருவியாக்கும்.?
திரும்பவும் கேப்ப ...
அட போடா நீ வேறனு சொல்லி
ஒரு ஸ்மைலி போடுவேன்.
டேய்..எல்லாம் தெரியும் ..சொல்லுடானு
நீ சொன்னா ....
தெரியும்ல அப்பறம் என்ன மானாவுக்கு
என்ட்ட கேக்குற ..மூடிட்டு கெளம்பு..
அப்படினு சொன்னா கோவப்படாத நண்பா...
மறுநாள் காலைல
hi nanba..
அப்படினு மெசேஜுவேன்..
இல்லனா hi da busy ya
அப்படினு 'வாட்ஸ் அப்'புவேன் ..
சரியா.. ஃபீல் பண்ணாத ..
இப்ப முன்னாடியே சொன்னதுதான்...
என்னவா ....?
மூ*** கெளம்பு..
Sunday, 22 March 2015
நான் என்பது நானா ?
இப்ப இது ஒன்னுதான் கொறச்சல் அப்டினு யாராச்சும் கேக்கனுமே?
கேட்டாலும் ஒங்களுக்கெல்லாம் ஒன்னும் சொல்லமுடியாதுங்க.
பேசுறத விட எழுதுறது ரொம்ப ஈசி எனக்கு..
சின்ன வயசுல கூட நா கட்டுரைப்போட்டில லாம் ஜெயிச்சுருக்கேன்.
ஆனா பாருங்க..இந்த பாழாப்போன பேச்சுப்போட்டில லாம் வந்ததே இல்லங்க.
நல்லா பாத்து பழகாதவங்ககிட்ட பேசவே ஒருமாதிரி இருக்கும்ல.
அத மாத்தனும்னு நெனக்கிறேன்..
இதேமாதிரி குஜராத்ல கூட ஒரு சம்பவம் நடந்துச்சு
அப்டினுலாம் மொக்க போட விரும்பல.
அப்படினு சொல்லுவேன் .ஆனா மொக்கதான்.
உள்ள வந்தாச்சுல்ல , கேட்டுட்டுதான் போகனும் .
க்ளாஸ்ல communication லேப்ல க்ரூப் டிஸ்கசன்னு பேச விடுவாய்ங்க.
நல்லா பேசுனாதான் வேலக்கி சேத்துக்குவாய்ங்களாம்.
ஏன்டா ஒங்களுக்கு கம்பெனில வந்து நாங்க வேலபாக்க போறோமா..?
இல்ல தொனதொன னு பேசிக்கிட்டு இருக்கப் போறோமா..?
'அதிகம் கேள்;குறைவாகப் பேசு' அப்படினு திருவள்ளுவரே சொல்லிருக்காருடா..
திருவள்ளுவர் எங்கடா இதெல்லாம் சொன்னாரு வென்னனு யாரும் கேக்கப்படாது.
எவ்வளவோ சொல்லிருக்காரு.இதச் சொல்லிருக்க மாட்டாரா ?
ஆமா நம்ம ஏன் இதெல்லாம் பேசிட்டுருக்கோம்? யாரு சொன்னா நமக்கென்னங்க.
டாபிக் மாறுது .
கட் கட்..
எங்க விட்டோம்.?
ம்ம்.
பேசுறத விட எழுதுறது ரொம்ப ஈசிங்க.
இப்ப என்னதான்டா சொல்ல வர்ற ? னு யாராச்சும் கேட்டா ..
யோவ் .நீ ஒன்னும் படிச்சுக்கிழிக்கவேணாம் ..கெளம்பு .
அப்படிலாம் ஒங்கள சொல்லுவேனா ?
(ஐயோ..சோத்துல வெசம் வச்சுருவாய்ங்களே)
அதுனால இப்ப என்ன சொல்ல வறேன்னா ?...
அடேய் அந்தக் கருமத்தத் தான் ரொம்பநேரமா பெனாத்துற
அப்டினு ஒங்க மைண்ட்வாய்ஸ் கேக்குது.இனியும் சொல்லலனா
இங்க வெட்டுக்குத்து நடந்து blog ரத்தக்களறி ஆகவேணாம் .
அதுனால...
அட நாதாரி என்னடா இன்னும் இழுக்குற ? அப்டிங்குறீங்களா?..
சொல்ல விடுய்யா மொதல்ல..
நா இனிமே பேச நெனக்கிறதெல்லாம் எழுதுவேனாம் .
நீங்கவந்தா மட்டும் போதும் .
ச்சீ.. நீங்க பாத்தா மட்டும் போதும் .
ஓகே வா..