Total Pageviews

Tuesday, 14 April 2015

கடவுளும் ஒரு கோப்பைத் தேநீரும்..

மத்தியான வெயில்..சுள்ளென்று அடிக்கிறது.சற்றுமுன் குடித்த சர்பத் வாடை நன்னாரியும் எழுமிச்சையுமாய் தொண்டைக்கு நடுவில் தேங்கி நிற்கிறது.வாட்டர் பாக்கெட் ஒன்றை வாங்கி கொஞ்சமாய் குடித்து மெட்ரோ வாட்டரினால் ஏற்பட்ட முகச்சுழிப்புடன் தண்ணீரைப் பீய்ச்சி முகத்தில் அடித்து அந்தச் சூரியனை வென்ற புன்னகையோடு நிமிர அந்தத் தண்ணீரோ தோல்வியை ஒப்புக்கொள்வதுபோல் கீழ்நோக்கி வழிந்தோடுகிறது.
அதை எண்ணி வெட்கத்தால் பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டு கர்ச்சீப் எடுத்து முகம் மறைத்துத் துடைக்க ஒன்றுமில்லாமல் அடங்குகிறது நீர். மேற்கொண்டு நடக்க வெயில் கொஞ்சம் மட்டுப்பட்டால் பரவாயில்லை என நினைத்துக்கொண்டே நகர அந்தக் கதிரவன் காது கொடுத்துக் கேட்டதோ என்னவோ தலைதாழ்த்திப் பின்வாங்க நான் முன்னேறினேன். எதிரே டீக்கடை.ஏனோ நிற்க வேண்டும்போல் இருந்தது.வெயில் மண்டையைப் பிளக்கையிலும் கூட தேநீர் அருந்துவதென்பது சுகமானதாய்த்தான் இருக்கிறது.இப்போது குடிக்க மனமில்லையெனினும் வெறும் பிஸ்கட்டோடு அந்தக் கடையைக் கடக்கப் பிரியமில்லை. பதினைந்து வயதிருக்கும் அந்தச் சிறுவனுக்கு..குழந்தைத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்படவில்லை என வழக்கமாக எல்லாக் கடைகளிலும் காணப்படும் அந்த விழிப்புணர்வு ஸ்டிக்கர் அந்தக் கடையிலும் இருந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. வயிற்றுப் பிழைப்புக்கு வேறு வழி இல்லையெனில் இதில் தவறேதும் இல்லையெனவே கருதுவேன். வாழ்வதற்கு வழியை உண்டாக்காமல் வெற்றுச் சம்பிரதாயமாக ஸ்டிக்கர் ஒட்டுதல் ஒன்றும் பெரிதாய்க் கிழித்துவிடப் போவதில்லை.  யாரிடம் முறையிடுவது ? கடைக்கு வெளியே ஒருவர் கலைந்த கேசம், கசங்கிய துணிகள்,முகத்தை முழுதாய் மறைக்குமளவு தாடியுடன் இவையனைத்திற்கும் நேர்மாறாய் ஏதோ தெளிவான சிந்தனையுடன் சற்றுமுன்பே ஏதோ நாட்டு அதிபரைச் சந்தித்து தேநீர் அருந்திய அதே திருப்தியுடன் கனிந்த பார்வையுமாய் .. இருந்தாலும் அருகே போய் அவர் முதுகில் தொட்டு ஒரு தேநீர் டம்ளரை நீட்டி நம்நாட்டின் அவலங்களையும் அநிநாயங்களையும் சொல்லி அவர் பதிலுக்குக் காத்திருந்தேன்.புரியாதது போலவே முகத்தை வைத்துக்கொண்டு மேலேயும் கீழேயுமாய் என்னைப் பார்க்க அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பி யாரெனக் கேட்டேன்.
தலையை உயர்த்திக் 'கடவுள்' என்றார்.
பைத்தியக்காரன்கிட்ட என்ன தம்பி பேசிக்கிட்டு இருக்கீங்க எனக்குரல் கேட்டு திரும்பி மறுபடி திரும்புவதற்குள் அந்தக் 'கடவுள்' எதிர்ச்சாலையில் நடந்து போய்க்கொண்டிருந்தார்.டம்ளர் கல்லில் அமர்ந்திருந்தது. வெயில் திரும்ப சுடுவது போல இருந்தது.
மண்டை கணக்க மறுபடி நடந்தேன் அடுத்த தேநீர்க்கடை நோக்கி...

No comments:

Post a Comment