Total Pageviews

Monday, 9 May 2016

பிம்பிளிக்கி பாலிட்டிக்ஸ்

பாபருக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்ல பார்ட்டி
கொள்கை : ஆப் கி பார்; எந்த ப்ளைட்டுல பறக்குறார் அண்ணாந்து பார்.

நாட்டையே நிமிர்த்துவோம் என முழங்கி நாடுநாடாய்ப் பறந்து கொண்டிருக்கும் பிரதமர் சார்ந்துள்ள கட்சி. சர்ச்சைகள் சட்டையைப் பிடித்துத் தொங்கியபடியே இருக்கும். அந்நிய நாட்டு உறவுகளை பலப்படுத்துவதே ஐந்தாண்டுத் திட்டம். தமிழகத்தில் வெகுவேகமாக வளர்ந்து கொண்டிருப்பதாக அவர்களே சொல்லிக்கொள்வார்கள்.
மாட்டுக்கறி,மதக்கலவரம் என ஆல்டைம் லைம்லைட்டிலேயே இருப்பது சிறப்பு.

போங்கிரஸ் ( ரிட்டையர்டு நடிகைகள் முன்னேற்றக் கழகம் )
கொள்கை : இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித் தருதல்.

நாட்டிலேயே ஏன் உலகிலேயே அதிக வேட்டியவிழ்ப்புகள் நடைபெறும் இடம் குத்தியமூர்த்தி பவன்.(ஆபாசம் துளியும் இல்லை ) தினமும் முந்நூறு நானூறு பேர் வந்துசெல்லும் மடம் சாரி இடம்.
ரிட்டையர்டு நடிகைகளுக்கு முன்னுரிமை தந்து காரிய(?) கமிட்டியில் பதவி வழங்கப்படும். மீதமுள்ள மூத்த உறுப்பினர்களுக்கு மதியம் மீந்துபோன பொங்கல் இலவசமாகத் தரப்படும்.
கட்சியின் இளைய தலைவர் கோகுல் மட்டும் சுற்றுப்பயணம் என்கிற பெயரில் ஏழைக் குடிசைகளுக்குள் புகுந்து கூழை ஆட்டயப்போட்டு குடிப்பார். சின்னப்புள்ளைகளின் ரொட்டியை புடுங்கித் தின்பதால் பப்பு என்ற செல்லப்பெயரும் உண்டு.

அடிமைகள் முன்னேற்ற கழகம்
கொள்கை : பணிவு குனிவு.

முதுகுக் கூனல் உள்ளவர்களுக்கு உடனடி அமைச்சர் பதவி.தேர்தலில் சீட்டு கிடைக்க அறிமுகத்திற்கு முன்பு தங்கத்தாரகையில் தொடங்கி புரட்சித்தலைவி என முடியும் பதிமூன்று பக்கக் கட்டுரை வாசிக்கத் தெரிந்திருக்கவேண்டும். கோயஸ் தோட்டத்தில் கிளம்பும்போது கண்ணைமூடி மண்ணைப்பார்த்து கும்பிடத்தொடங்கி வடநாடு போகும்வரை நிமிராதிருக்க வேண்டும். அப்படியே கண்ணசந்து தூங்கவிடவும் கூடாது.முழிப்பதற்குள் கேபினட்டில் பெயர் நீக்கப்பட்டுவிடும்.
அறிஞர் பிரேசில் கும்பத் நடத்திய சர்வேயின்படி குடிப்பவர்கள் இ்ல்லாத ஒரே கட்சி இதுதான் என்ற பெருமையையும் சமீபத்தில் பெற்றுள்ளது.

திருடர்கள் (ஒழிப்பு) முன்னேற்றக் கழகம்
கொள்கை : கடமை கண்ணியம் கட்டுப்பாடு (சிரிக்கப்படாது).

நாடகக்கம்பெனியில் வேலைபார்த்தவர்களுக்கு முன்னுரிமை.பங்காளிச் சண்டைகள் தலைவருக்கு அலர்ஜி. குறைந்தபட்சம் ஜேப்படி, பிக்பாக்கெட்டாவது செய்திருக்கவில்லையெனில் நரிவாலயத்துக்குள் அனுமதியே இல்லை. நாற்பதும் நமதே திட்டம் புஸ்ஸாகிப் போனதால் நமக்கு நாமே என ஊரைச்சுற்றி செல்பீ எடுப்பது தற்போதைய ட்ரெண்ட்டிங்.
அண்ணன் எப்ப போவான் திண்ணை எப்ப காலியாகும் என்ற பழமொழி இங்கே ….ம்ஹூம். ஒன்னுமில்லீங்க.

நாளைய தமிழகம் கேப்டன் கட்சி
கொள்கை : தூக்கி அடிச்சுருவேன் பாத்துக்க.

கைநடுக்கம் கண்டிப்பாக இருத்தல் கூடாது. பாண்டிச்சேரிக்காரர்களுக்கு சிறப்பு அனுமதி. மீம்ஸ் க்ரியேட்டர்கள் ஆகவே ஆகாது.
கட்சியில் அனைவரும் ஜென் துறவிகளாகவே இருப்பதால் நாக்கைத் துருத்துதல் மகாபாவம்.
யாரும் எகிறிக்குதித்து ஓடாமல் கட்சியைச்சுற்றி காம்பவுண்டு சுவர் விரைவில் கட்டப்படும். உறுப்பினர்களுக்கு ஹெல்மட் வழங்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது.

மாம்பழ மக்கள் கட்சி
கொள்கை : மாற்றம் முன்னேற்றம் கட்டப்பஞ்சாயத்து.

கோயில் திருவிழாவில் ஆடுவெட்டும் பூசாரிகளுக்கு முன்னுரிமை. அட்லீஸ்ட் விறகு வெட்டவாவது தெரிந்திருக்கவேண்டும். புகை அலர்ஜி.
சாக்குப்போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் கூட்டணிவிட்டுக் கூட்டணி தாவும் காட்சிகளுக்குத் தாக்குப்பிடிக்கலாம். இல்லையெனில் போன தேர்தல் கூட்டணிக்கட்சிப் பேரைச் சொல்லி கல்லெறி வாங்க நேரிடும்.

மைக்கோ டிமுக
கொள்கை : நட நட நடந்துகொண்டேயிரு.

ஆணிக்கால் உள்ளவர்கள் அனுமதியில்லை.சாலை சுத்திகரிப்புப் பணிக்காக நாடு முழுவதும் நடக்கநேரிடும்.பயணப்படியையும் கொலஸ்டிரால் அளவையும் கட்டுக்குள் வைக்கவே இந்த சிறப்புத்திட்டம். இந்தக் கட்சியைப் பொறுத்தவரை தேர்தலே அலர்ஜிதான்.

நாம் டுமீலர் கட்சி
கொள்கை : நரம்பு புடைக்கும் வீரம்; காத்துல பறக்கும் மானம்.

தம்பிகளாக இருந்தால் போதுமானது. புரொபைல் பிக்சராக புரட்சியாளர் ஒருவரின் படம் வைத்திருப்பது கூடுதல் தகுதி. பேஸ் வால்யூம் ஹைய்யாக இருக்கவேண்டும். மைக் செலவுகளைக் கட்டுக்குள் கொண்டுவரவே இந்த யுத்தி. போனுக்கும் தலைவருக்கும் கொஞ்சம் தகராறு.
உறுப்பினர்கள் ஹலோவுக்குப் பதிலாக ங்கோ… சொல்லிப் பேசத்தொடங்க வேண்டும் என்பது புதிதாகச் சேர்க்கப்பட்ட விதி.
மிக முக்கியமானது அணிவதற்கு வாரத்திற்கு ஏழு கருப்புச்சட்டைகள் வைத்திருக்கவேண்டும்.

சல்யூட் ராம்ராஜ் மக்கள் கட்சி
கொள்கை : எட்டி உதைத்தாலும் போகமாட்டோம்.

அட.. ஒரே ஒரு கருது குடுறா ..
அதுசரி ஓங்கருது..நீ தரமாட்ட..
எனும் வெடிவேலு காமெடி இங்கே அரங்கேறும்.
உறுப்பினர்கள் என்னதான் அசிங்கப்பட்டாலும் சகித்துக்கொள்ளும் தன்மை வேண்டும்.
ராம்ராஜ் பனியன் சட்டை அணிந்தவர்கள் கட்சிக்கு வரலாம். என்றும் தொண்டனாகவே நீடிக்கலாம்.ஏனெனில் தலைவருக்கு மட்டுமே சீட்டு கிடைக்கும்.

ஹார்வர்டு க்ளாக்
கொள்கை : தேர்தலுக்கு மட்டும் தலைகாட்டுவோம்.

சீட்டுக்கம்பெனி நடத்திய அனுபவமிருந்தால் கட்சியில் பெரிய பதவிக்கு வரலாம். கருப்புக்கண்ணாடியும் தொப்பியும் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ். ஐந்து வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நினைவு திரும்பும் அபூர்வவகை கோமா கட்சியைத் தாக்கியதாக உளவுத்துறை தகவல்.

பொம்மயூனிஸ்ட்
கொள்கை : போராட்டம் ஆர்ப்பாட்டம் சாலைமறியல் மனிதச்சங்கிலி.

ஏற்கெனவே இருப்பவர்களுக்கே மத்தியானச் சாப்பாட்டுக்கு காசில்லாமல் இருப்பதால் புதிதாக உறுப்பினர் சேர்க்கை தற்போது தடை செய்யப்பட்டுள்ளது.



குறிப்

ரசிகக் கண்மனிகளே ...

ரசிகக் கண்மணிகளே ...
**************************

தமிழ் சினிமா ரசிகர்கள் இந்த வெரைட்டி ல ஏதாச்சும் ஒன்னா இருப்பாய்ங்க..


ரசிகக் குஞ்சுகள் :
தங்கள் ஆஸ்தான நடிகரின் படங்களை மட்டும் ஏற்றுக்கொள்பவர்கள்.படத்தின் கதையைக் கேட்டால்கூட ஹிட்டுடா..பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் டா என்பார்கள்.ஒருவாரம் தியேட்டரை மொய்த்துவிட்டு ஓய்ந்துவிடுவார்கள்.அடுத்தபடம் வரும்வரை போன தலைமுறை படத்தையே சொல்லி பெருமை கொள்வார்கள்.
துப்பாக்கி டா...மங்காத்தா டா... என்பவை இவ்வகையைச் சேரும்.

லாஜிக்_லாலிபாப்ஸ் :
இந்த வகையறாக்கள் லாஜிக் பார்ப்பதற்காகவே படம் பார்ப்பவர்கள்.வேதாளம் படத்துல ஸ்ருதி எப்படி  பதினஞ்சாவது மாடிக்கு வந்தா.. கத்தி படத்துல விஜய்ண்ணா எப்படி குழாய்க்குள்ள மூச்சுப்போகாம இருந்தாரு  எனக்கேட்டு சீரியசாக  புன்னகைப்பார்கள்.
இவர்களையெல்லாம் வைத்து பசுமாட்டுல பால் கறக்குற சீனும் மூக்கு சிந்தி சேலையில் துடைக்கும் சீன் மட்டுமே சஜ்ஜஸ்ட் செய்யமுடியும். பால்கறக்கும் சீனில்கூட  காம்பு இருக்காவென ஆராய்ச்சி செய்வார்கள்.
இவர்கள் வடிவுக்கரசி ரசிகராகவோ ராமராஜன் ரசிகராகவோ இருக்க வாய்ப்புகள் அதிகம்.
இதற்குள் இன்னும் டீப்பாக இறங்கி பிட்டு படத்தில் தேக்குமர டேபிள் எப்படி ஆடும் என்கிற ரேஞ்சில் லாஜிக் பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். கீப் டிஸ்டன்ஸ் .

அதிமேதாவி_அல்லுசில்லுகள்:
கமல் படங்களை எப்படி இருந்தாலும் சூப்பர்.ஹாலிவுட் ரேஞ்சுல தலைவரு அசத்திட்டாரு என்பார்கள்.கமல் படங்களை புரியாமலேயே பார்த்து புரிந்து ரசித்ததாய் காட்டிக்கொள்வார்கள்.கமல் ரசிகர்கள் அதிமேதாவிகள் எனும் மூட(!)நம்பிக்கை கொண்டவர்கள்.
(தாக்குதல் கொடூரமா இருக்கும்னு நெனைக்கிறேன்.நானும் கமல் லைக்கர் ப்பா..அவ்வ்வ் )

ஹாலிவுட்_காப்பிரைட்டர்கள் :
இன்னும் சிலர் எந்தப்படத்தைப் பார்த்தாலும் ப்ரெஞ்ச் மூவி கொரியன் மூவியென அஞ்சாறு பட டைட்டில்களை மனப்பாடம் செய்துவைத்துக்கொண்டு இது அந்தப்படத்தின் காப்பி இந்தப்படத்தின் காப்பி அடித்து விடுவார்கள்.நோலன் ,இண்டர்ஸ்டெல்லார்,மொமண்டோ என இவர்கள் ஒரு A4 பேப்பரில் பட்டியல் போட்டு வைத்திருப்பார்கள்.
உலக சினிமா ,நீட்சி ,படிமம் , போன்ற புரியாத தமிழ் பேசி கலங்கடிப்பார்கள். இது அவர்களுக்காவது புரியுமா என்றால் அது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

டாட்டாபிர்லாஸ் :
படம்பாக்கலாம் நேரமில்ல என்பதாகத்தொடங்கும் இவர்களின் பேச்சு.கடைசியாக சூரியவம்சம் படத்தை கே டிவியில் பார்த்திருப்பார்கள்.பார்க்கும் படமெல்லாம் பிடிக்கும்.ஆனால் கூத்தாடி காத்தாடி என அங்கலாய்ப்பார்கள்.சுகர் கம்ப்ளெயிண்டாகவோ பிபி பேசண்டாகவொ இருப்பார்கள்.
நேரமில்லை..கொழம்புல காரமில்லனு வாழ்க்கையில் ஓடிக்கொண்டேயிருப்பார்கள்.

ரிவ்யூ_ரிவால்வர்ஸ்:
திஸ் பீப்பிள் ஆர் மோஸ்ட் டேஞ்சரஸ். விமர்சனம் எழுதுவதற்காகவே நாப்பது அடி திரையில் முதல்நாள் படம் பார்ப்பவர்கள்.
எந்தப்படமாக இருந்தாலும் இழுத்துப்போட்டு அடிப்பதில் கில்லாடிகள். நல்ல படங்களையும் அடித்துத்துவைத்து அழகுபார்த்து ஓடவிடாமல் செய்யும் ஸ்லீப்பர் செல்கள்.
படத்தின் தோல்வியில் இவர்களுக்கு முக்கியப்பங்கு உண்டு.
ரிவ்யூக்கள் கிட்டத்தட்ட ஒரே கியரில் இருக்கும்.அது பிஸினஸ் ட்ரிக்கு .


       - விக்னேஷ் சி செல்வராஜ்
          

Friday, 6 May 2016

புரட்சிப்புயல் வைகோ அவர்களுக்கு ஓர் கடிதம்

புரட்சிப்புயல் வைகோ அவர்களுக்கு ஓர் கடிதம்



'பாராளுமன்றப் புலி' என வர்ணிக்கப்பட்ட புரட்சிப்புயல் வைகோ அவர்களுக்கு,


தங்களின் முழக்கங்களால் கவரப்பட்டு அரசியலறிவைக் கற்கத்தொடங்கிய இளைஞர்கள் பலருள் ஒருவன் எழுதும் கடிதம். அது 1994 ஆம் ஆண்டு. கைக்குழந்தையான என்னைத் தாங்கள் தங்கள் கைகளில் தூக்கி, 'தொல்காப்பியன்' எனப் பெயர் சூட்டினீர்கள். அதனால்தானோ என்னவோ உங்களின் மீது அபார நம்பிக்கை இன்றுவரை தொடர்கிறது.

புகைப்படங்களிலும், தொலைக்காட்சிகளிலும் மட்டுமே பார்த்த உங்களை இரண்டு முறை நேரில் பார்க்கும் வாயப்பு கிட்டியது. இரண்டுமுறை பார்க்கும்போதும் உணர்ச்சிமயமான சூழலில் இருந்தீர்கள். ஒரு புரட்சிகரமான அரசியல்வாதியை நேரில் பார்த்த மகிழ்ச்சி எனக்கு அப்போது. தினசரிகளில் உங்கள் புல்லரிக்க வைக்கும் பேச்சுகளை வாசித்து கியூபாவின் சே-கு-வேராவைப் போல உருவகப்படுத்தி பிற்பாடு தங்களின் செயல்பாடுகளால் ஏமாற்றப்பட்ட என் ஆதங்கம்தான் இக்கடிதம்.

சே ஒரு போராளி என்பதால் மட்டும் அவர்மீது நாம் மதிப்பு வைக்கவில்லை. அவர் அசாதாரண சாதனைகளை செய்துகாட்டக் கூடியவர்.
ஏகாதிபத்தியத்தால் பயிற்சியளிக்கப்பட்டு,  ஏகாதிபத்தியத்தால் உருவாக்கப்பட்ட ஒரு நாட்டின் இராணுவத்திற்கு எதிராக விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய ஒருசிலரை வைத்து எதிர்த்ததே அசாதாரணமான ஒன்று.
எங்களுக்கு நீங்களும் அவ்வாறு தோன்றியது முழுக்க முழுக்க எங்கள் தவறுதான் என்பது சமீபகால தங்களது நிலைப்பாடுகளால் தெளிவாகப் புரிகிறது.

வாரிசு அரசியலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக -விலிருந்து விலகி தனிக்கட்சி தொடங்கி தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்தீர்கள். வாரிசு அரசியலுக்கு முடிவுகட்டி தமிழகத்தை மீட்கும் மீட்பராகவே உங்களைப் பலரும் பார்த்தார்கள். ஆனால், நீங்கள் அதை எப்படிப் பயன்படுத்திக் கொண்டீர்கள்? இன்னொரு கட்சியின் மீதான வன்மத்தைத் தீர்ப்பதற்காக மாறிமாறிப் பயன்படுத்தி வருகிறீர்கள். ஜெயா அரசு தங்களையும் தங்கள் சகாக்களையும் 'பொடா' சட்டத்தில் கைது செய்தது. பாஜக ஆட்சியில் கூட்டணி தர்மமெனக் கூறி 'பொடா'வை நீங்கள் ஆதரித்து அது உங்களுக்கே வினையாய் அமைந்ததுதான் கொடுமையின் உச்சம். 

பொடாவில் கைது செய்யப்பட்டு பதினெட்டு மாதங்கள் சிறையில் அடைபட்டு வெளிவந்த பிறகு அதிமுக விற்கு எதிராய் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் ஹஸ்கி வாய்சில் பின்வருமாறு கூறினீர்கள். நினைவிருக்கிறதா ?

"காலம் எங்களைக் காயப்படுத்தியது. அதே காலம் எங்கள் காயங்களுக்கும் களிம்பு தடவியது. என்னைப் பார்க்க அன்பு மேலோங்க  'தலைவர்' கலைஞர் வந்ததால் என் மனச்சுமை நீங்கியது. இனி என் வாழ்நாளில் கலைஞரை எதிர்க்கமாட்டேன். காலம் எனக்குக் கற்றுக்கொடுத்த பக்குவம் இது."
எனக்கூறி கருணாநிதிக்கே புல்லரிக்க வைத்தீர்கள்.

பிறகு, தமிழர்களுக்கு எதிரான பாசிச ஜெயா அரசை வீழ்த்துவற்காக திமுக வுடன் 2004 பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணி வைத்தீர்கள். போட்டியிட்ட நான்கு தொகுதிகளிலும் வெற்றிபெறச் செய்தது இந்தத் தமிழ்ச் சமூகம். பதிலாய் என்ன செய்தீர்கள் ? மக்கள் நலனை விட தேர்தல் நோக்கத்தில் தங்கள் நலன் ஒன்றையே மையமாக வைத்துச் செயல்பட்டீர்கள்.


2006 சட்டமன்றத் தேர்தலில் தொகுதிப்பிரிப்பில் திமுக உடனான கூட்டணியில் பிளவு ஏற்பட்டு, ஒருகாலத்தில் உங்களது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை, "Unlawful prevention activities -ன் கீழ் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆதரவளிக்கும் மதிமுக விடம் இந்தியாவுக்கோ, தமிழ்நாட்டுக்கோ நன்மை பயக்கும் எந்தத் திட்டங்களும் இல்லை. ஆகவே அதை தடை செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்." எனக்கூறிய உங்கள்  அன்புச்சகோதரி ஜெயலலிதாவோடு கூட்டணி வைத்தீர்கள். அதற்கு என்ன தர்மக்கணக்கு வைத்திருந்தீர்கள் எனத் தெரியவில்லை.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதமிருந்த ஜெயலலிதாவுக்கு பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை நிறைவு செய்து வைத்து கொஞ்சம் கூட சிரிப்பை வெளிக்காட்டாமல் நம்பிக்கை நட்சத்திரம் என வாய் கூசாமல் புகழ்ந்தீர்கள்.

2011 தேர்தலின்போது உங்கள் சகோதரி உங்களுக்கு நீங்கள் விரும்பிய எண்ணிக்கையிலான தொகுதிகளைத் தரமறுக்க உங்களது தன்மானம் தலைதூக்கியது.
"கண்களை விற்றுச் சித்திரம் வாங்குவதைப் போல, சுயமரியாதையை இழந்து பதவி பெறவேண்டிய அவசியம் மதிமுக வுக்கு இல்லை." எனப்பேசி மானமிகு தலைவனாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டீர்.


"தந்தை பெரியார் அவர்களும், பேரறிஞர் அண்ணா அவர்களும் உருவாக்கி வளர்த்த தன்மான இயக்கத்தையும், சுயமரியாதையையும் இரு கண்களாகப் போற்றுகிறேன்" என மார்தட்டிக் கொள்ளும் நீங்கள் ஒவ்வொருமுறையும் மாற்றிமாற்றிப் பேசி தங்கள் அரசியல் வாழ்வில் ஆகச்சிறந்த சந்தர்ப்பவாதியாகத்தான் திகழ்ந்து வருகிறீர்கள்.

கடந்த வாரத்தில் இதே வைகோ தான் திமுக ஐநூறு கோடி பேரம் பேசியதாக எழுப்பிய குற்றச்சாட்டுக் கருத்தை வாபஸ் பெறமாட்டேன் என முழங்கினார். இப்போது ?
கருணாநிதியின் சாதிய அடையாளத்தைப் நேற்றைய பேட்டியில் குறிப்பிட்டுப் பிறகு, தான் சாதி மறுப்பாளன் என்பதை உணர்ந்து "தாயுள்ளம் கொண்டு அண்ணன் கருணாநிதி மன்னிக்க வேண்டும்" என அறிக்கை விட்டிருக்கிறீர்கள். இது மாற்றத்திற்கான கூட்டணியை ஒருங்கிணைத்த ஒரு தலைவனுக்கு அழகா ?

கிரேக்கத்தின் புரட்சிகளை, பொலீவியா, கியூபாவின் ஏகாதிபத்தியத்திற்கெதிரான முன்னெடுப்புகளை எனக்கு அறிமுகப்படுத்திய உங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை திரு.வைகோ அவர்களே..  சேகுவேரா வின் மறைவிற்குப் பிறகான அஞ்சலிக் கூட்டத்தில் ஃபிடல் காஸ்ட்ரோ சொன்ன வரிகள் இவை..

"கியூப விடுதலைக்கான போராட்டத்தில் முக்கியத்துவமற்ற காரியங்களில் உணர்ச்சிவசத்தால் ஈடுபட்டு ஆபத்தை விலைக்கு வாங்க முன்வந்த பலசமயங்களில் அவரை தடுத்து நிறுத்த பெருத்த முயற்சிகள் செய்யவேண்டியிருந்தது."

புரிந்துகொள்ளுங்கள். உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளைக் கொட்டிவிட்டுப் பின்வாங்குதல் ஒரு முன்னுதாரண செயற்பாட்டாளருக்கு ஏற்புடையதல்ல. ஐம்பதாண்டுகளுக்கும் மேலான அரசியல் அனுபவம் கொண்ட தங்களிடம் இவைபோன்ற முதிர்ச்சியற்ற முரணான கருத்துக்களை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. வெறும் உணர்ச்சி மிகுந்த சொற்பொழிவுகள் மட்டும் ஒரு நல்ல தலைவனுக்குப் போதாது. சிறந்த செயல்பாட்டிற்கான திட்டங்களை முன்னெடுத்துச் செல்லுங்கள். எவ்வளவு நாள்தான் நீங்களே ரத்தம் கொதிக்கப் பேசிக்கொண்டிருப்பீர்கள் ? கிரேக்கமும் சோவியத்தும் தமிழனின் வரலாறைப் பேசட்டும்.


                                                                              நம்பிக்கையுடன்,
                                                                 தொல்காப்பியன் என்கிற விக்னேஷ் சி செல்வராஜ்


பதிவு நாள் : ஏப்ரல் 7, 2016


'கோவிந்தா' மெட்ராஸ் மீட்புக் கமிட்டி

'கோவிந்தா' மெட்ராஸ் மீட்பு கமிட்டி



சமீபத்தில் வந்த வெள்ளம் சென்னையையே புரட்டிப்போட இயல்புக்கு திரும்புவதற்கு மக்களுக்கு உதவ (?) மற்றும் சம்பாதிக்க சில டிப்ஸ் ..

ஆல் இன் ஆல் அழகுராஜா பஞ்சர் கடை: 
வழக்கமாக டூவீலர் ,ஃபோர்வீலருக்கு பஞ்சர் வல்கனைசிங் செய்யும் அழகுராஜாக்கள் இனி மீட்புப்பணியில் ஈடுபட்ட படகுகளுக்கு ஓட்டை அடைக்கும் வேலையையும் சேர்த்துச் செய்யலாம்.

மொபைல்,லேப்டாப் ஐசியூ : 
தண்ணிக்குள் விழுந்து கண்டமான லேப்டாப்புகள், மொபைல்கள் சர்வீஸ் செய்ய வேலையில்லாத இன்ஜினியர்கள் முயற்சி செய்து மொரட்டுத்தனமாக கல்லா கட்டலாம்.

ஸ்நேக்பாபு பாம்பு பிடிக்கும் படை : 
வெள்ளநேரத்தில் வீட்டுக்குள் தண்ணியோடு தண்ணியாகப் புகுந்த பாம்புகள்,தவளைகள்,தேள்களை பிடிக்க தனிப்படை ஒன்றை அமைக்கலாம். அவற்றைப் பிடித்து வண்டலூரில் வெள்ள உயிரினங்கள் கண்காட்சி நடத்தியும் காசு பார்க்கலாம்.

நாதஸ் பேரீச்சம்பழக் கடை : 
தண்ணீரில் ஊறி ஒன்றுக்கும் ஆகாமல் போன கிரைண்டர்,மிக்ஸி, வாசிங்மெசின் போன்றவற்றை வாங்கிக்கொண்டு பேரிச்சம்பழம் கொடு்க்கும் பழங்கால எக்ஸ்சேன்ஞ் முறையைப் பின்பற்றலாம்.

எம்.எல்.எம் இன்ஜின் சர்வீஸ் : 
தண்ணீரில் நாள்கணக்காக மூழ்கிக்கிடந்து பழுதான வாகனங்களை சர்வீஸ் செய்யும் செட் போட்டு மொத்தமாக செய்யலாம் (?). அதாவது வாங்கிய அனைத்து வாகனங்களையும் இரவோடு இரவாக ஆட்டயப்போட்டு பக்கத்து மாநிலங்களில் விற்று விடலாம்.
(யாருப்பா அது.. நாம காட்டியுங் குடுக்குறோம் கூட்டியுங் குடுக்குறோமா னு கேக்குறது..? )

காண்ட்ராக்டர் நேசமணி ஹவுஸ் கீப்பிங் சிஸ்டம்ஸ் :
வீட்டுக்குள் கிடக்கும் மணல், உடைந்த கதவு, பொருட்களையெல்லாம் சுத்தம் செய்து வீட்டுக்கு ஒட்டடை அடிக்க மொத்தமாக காண்ட்ராக்ட் பேசலாம்.

ஐடியாமணி ஃபைபர் ஹவுஸ் :
அடுத்த வெள்ளத்திற்கு தாக்குப்பிடிக்க சிறியதாய் புதிய ஃபைபர் வீடுகளை கட்டலாம். ஏரி உடைக்கும் முன்னரே வீட்டை கண்டெயினரில் ஏற்றி அருகிலிக்கும் ராமநாதபுரத்தில் பார்க் செய்யலாம்.

இவை தவிர பேரிடரால் பழுதான டிவியில் சீரியல் பார்க்க இயலாத பெண்களுக்கு உதவும் வகையில் ஒவ்வொரு ஏரியாவிலும் மினி சீரியல் தியேட்டர்கள் அமைத்து டிக்கெட் வசூலிக்கலாம்.

 லீவுலாம் முடிஞ்சு பீலிங்கோட ஸ்கூலுக்கு போற பசங்களுக்கு எதுனா திட்டம் இருந்தா சொல்லுங்க பாஸு ..


                                 - விக்னேஷ் சி செல்வராஜ்
             

Thursday, 17 March 2016

வன்மத்தின் நிறம்

வன்மத்தின் நிறம்

வரட்டுக் கௌரவம் எனும் 
வெற்றுச்சாயத்தை விசமெனத் தடவி 
வல்லூறுகள் வேட்டையாடுகின்றன 
கோழிக் குஞ்சுகளை. 
வெடித்துக் கிளம்பும் நரம்புகளை 
மயிரென அடக்கிச் சுருண்டவன்  
கழுத்தில் பாய்கிறது கயவர்கள் 
கூட்டத்தின் ஒரு வாள். 
சாத்தானின் நாற்றம் கேவுகிறது 
ஈனச்சாதியென 
நாக்கில் விருச்சிகக் கொடுக்கு. 
குரூரத்தின் உச்சமாய்க் 
கண்ணீர் வடிக்கிறது 
உயிரின் வாசனை. 
சுட்டெரிக்கும் பகலில் 
வீழ்ந்த மனிதத்தின் சங்கில் 
அருகுகள் நசுங்கிய பூட்ஸ் கால் 
அழுத்துகிறது பெரும்பாறையென. 
வெள்ளைக் கோடிட்ட தார்ச்சாலையில் 
வன்மமெனத் தெறிக்கிறது புனிதத்தின் 
நிறம்மாறிய ரத்தம். 
நிமிடத்தில் கோரத்தின் முகமாய் 
மாறி வெறிக்கிறது சுயத்தின் நிழல். 
அறுந்து தொங்கும் ஊனாங்கொடியில் 
சொட்டும் பாலில் சிவப்புநிறம். 
"கொல்.. கொல்" என்பவனின் 
குரல்வளையை நெரிக்க வருகிறது 
சா'தீ'யால் கருகிய குடிசையின் 
பிண்ணனியில் அரிவாள்களின் 
நிறத்தவன் என அடையாளங்காணப்படப் 
போகும் ஒருவனது ஜனனம். 
விடாமல் தொடரும் இந்தக் 
கருமத்தின் வினை.

                               - விக்னேஷ் சி செல்வராஜ்


Monday, 14 March 2016

தேவதையின் குரலுக்குச் சொந்தக்காரி






"விண்மீனைக் கண்டு கண்டு கோடி கோடிப் பூக்கள் ஏங்கும்
உன் கண்ணைக் கண்டு அந்த விண்மீன் ஏங்கும் "  என ஹரிஹரன் பாடி நிறுத்த அடுத்த விநாடியில் "அஹஹஹஹ ..."  எனத் தொடரும் அந்தக் காந்தக் குரலால் காதல் வயப்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

வசந்தபாலனின் இயக்கத்தில் வெளிவந்த "வெயில்" திரைப்படத்தின் "உருகுதே மருகுதே .." வில் உருகிப் போகாத இசைப் பிரியர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
கண்களை மூடி "உருகுதே.. மருகுதே.. ஒரே பார்வையாலே...
உலகமே.. சுழலுதே.. உன்னப் பார்த்ததாலே.. " 
எனப் பாடி " சொக்கித்தானே போகிறேனே.. மாமா கொஞ்ச நாளா.." எனக் காதலில் கரையும்போது சொக்கிப்போவோம் நாம்.

தமிழில் "ஆல்பம்" திரைப்படத்தில் "செல்லமே செல்லம்.."  பாடலின் மூலம் அறிமுகமானார்.
"லாலலலாலா லாலாலா.. லாலலலாலா லாலாலா...
லாலலாலாலாலாலா "  என நமக்கு அறிமுகமான அந்தப் பாடலைத் தொடர்ந்து  அவர் கண்ணசைப்பிற்கிணங்கித்  தலையசைக்க வைத்துக்கொண்டேயிருக்கிறது அந்தக் குரல்.

பதினெட்டு ஆண்டுகளாகத் தன் குரலால் பலரது மனதைக் கட்டிப்போட்டிருக்கும் ஸ்ரேயா கோஷல் மேற்கு வங்கத்தில் பிறந்தது 1984 ல். தனது நான்கு வயதில் இசையைக் கற்றுக்கொள்ளத் தொடங்கிப் பின்பு கஸல், க்ளாசிக்கல், பாப், பஜன் என அத்தனை பிரிவுகளிலும் அடித்து நொறுக்குகிறார். தனது முதல் ஆல்பமாக "பென்தெக்கி பீனா" வை 1998 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிட்டார்.

தனது பதினாறாவது வயதில் அதாவது 2000ஆம் ஆண்டு ஜீ தொலைக்காட்சியில் சக்கைப் போடு போட்ட "ச ரி க ம ப"  ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று டைட்டில் வின்னரானார். பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி யின் தாயார் இவரது பாடும் திறனை வியந்து தன் மகனை அழைத்து நிகழ்ச்சியைப் பார்க்கச் சொல்ல, அவரும் குரலில் மயங்கி தன் அடுத்த படத்தில் அவரை அறிமுகப் படுத்தினார்.

"இன்னும் நன்றாக நினைவில் இருக்கிறது. பாடலைப் பதிவு செய்வதற்கு முன்பு ஒருமுறை ஒத்திகை பார்ப்பதற்காகப் பாடச் சொன்னார்கள். நான் மெல்லக் கண்களை மூடி இடைவெளியின்றிப் பாடி முடித்துக் கண்களைத் திறந்தபோது  ரெக்கார்டிங் அறைக்கு வெளியே பரபரப்பான சூழலை உணர்ந்தேன். அதன்பிறகு சஞ்சய்ஜி சொன்னபிறகுதான் தெரிந்தது நான் சிறப்பாகப் பாடிய ஒத்திகையையே பாடலாகப் பதிவுசெய்துவிட்டது."  என நெகிழ்கிறார் அழகாகக் கண்களை சிமிட்டிபடியே..

2003 ஆம் ஆண்டில் 'ஜிஸம்'  படத்தின் பாடலுக்காக ஃபிலிம்ஃபேர் விருது பெற்றார். 2005 ஆம் ஆண்டு 'பஹேலி' படத்தில் இடம்பெற்ற 'திரே ஜால்னா'  பாடலுக்காக சிறந்த பிண்ணனிப் பாடகிக்கான தேசிய விருதை இரண்டாவது முறையாகப் பெற்றார். 2007 ல் 'ஜப் வீ மெட்' படத்தின் பாடலுக்காக மூன்றாவது தேசிய விருதை தன்வசமாக்கினார். பின்னர் தொடர்ந்து தனது நான்காவது மற்றும் ஐந்தாவது தேசிய விருதுகளை அடுத்த ஆண்டிலேயே கைகளில் ஏந்தினார்.



'ஆஷிக் பானாயா அப்னே'  பாடலில் தனது மயக்கும் குரலால் இந்திய  இசைப்பிரியர்களின் நெஞ்சத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார்.  'தாவணி போட்ட தீபாவளி' யாக தமிழ் ரசிகர்களுக்கு இசைவிருந்து படைத்தும் பல காதலர்களின் தேர்வாக இன்றும் இருக்கும் ' முன்பே வா.. என் அன்பே வா..'  என சில்லுனு ஒரு காதலை இளைஞர்களிடம் விதைத்துவிட்டு பருத்திவீரனில் ' அய்யய்யோ ..' என அசரடித்துப் பறக்கிறது இந்தக்குயில் இசைச் சிறகுகள் கொண்டு.

இடைப்பட்ட காலமெல்லாம் தன் குரல்கொண்டு உயிர்சுண்டியிழுக்கும் வித்தைகள் புரிந்து இப்போதும் கூட 'மிருதா மிருதா ' என மென்சோகத்தைக் குரலில் தாங்கி நம் காதுகளின் வழியாகக் கடத்திக் கொண்டிருக்கிறார் ஸ்ரேயா. 'உன் பேரை சொல்லும்போதே உள்நெஞ்சில்..' எனக் கண்மூடிப் பாடி பலரது இரவுகளை உறக்கமின்றித் தின்றுகொண்டிருக்கும் தேவதைக்குப் பிறந்தநாள் இன்று.

பல்வேறு தென் மற்றும் வட இந்திய மொழிப்பாடல்களுக்கு உயிர்கொடுக்கும் ஸ்ரேயாவுக்கு தமிழ் தெரியாது என்பதுதான் நம்பமுடியாத அதிசயம். கடந்த ஆண்டு தன் பால்ய நண்பரான ஷில்ஆதித்யா முக்கோபாத்யாயாவை மணந்த ஸ்ரேயா பிண்ணனிப்பாடகி எனும் அடையாளம் தவிர்த்து ஸ்ரேயா சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் பங்கேற்றுள்ளார். அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தின் கவர்னரால் கௌரவிக்கப்பட்டு ஜூன் 26 ம் தேதி 'ஸ்ரேயா கோஷல் நாள்' என அறிவிக்கப்பட்டது. உலகின் தலைசிறந்த 'ஃபோர்ப்ஸ்' இதழில்  இந்தியாவின் நூறு சிறந்த பிரபலங்களில் ஒருவராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமை பெற்றவர் இந்த இசைதந்த தேவதை. இன்னும் இன்னும் தன் குரல்கொண்டு நம்மைக் கிறங்கடிக்க வாழ்த்துவோம்.

இசைக்கு சற்றுமேலேயே மிதந்தபடியிருக்கும் இவரது குரல் காதலுக்கு மிக அருகாமையானது இப்பொழுதும்.. எப்பொழுதும் !


குறிப்பு :  சினிமா விகடன் தளத்தில் வெளிவந்தது.
பதிவு நாள் : 12-03-2016


Wednesday, 13 January 2016

ஞயம் பட வரை - பிரதிலிபி கட்டுரைப்போட்டி

"இன்றைய தமிழர்களின் வாழ்வில் தாய்மொழிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்ன? அதனை அதிகரிக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம்?"  - பதில் காண முயல்வோம்.


     Where is my snacks box mom ?

     நிற்க! விழிக்கிறீர்களா? நீங்கள் வாசிக்கப் போவது தமிழ்க்கட்டுரையே தான். மேற்காணும் ஆங்கிலச் சொற்றொடர் எனது சகோதரியின் மகன் அன்றாடம் பள்ளிக்குக் கிளம்புகையில் உபயோகிப்பது. ஆனால், முதலாம் வகுப்பு படிக்கும் அவனுக்கு இன்னும் தன்பெயரைத் தமிழில் எழுதத்தெரியாதாம். ஒருபானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கேற்ப இதுபோல இன்று எத்தனை குழந்தைகள் தமிழகத்தில் இருக்கிறார்களோ தெரியவில்லை. அவர்களுக்கெல்லாம் தமிழ் மொழியின் அவசியத்தை உணர்த்தக் கிடைத்த வாய்ப்பாக இதைக் கருதுகிறேன். நம் மொழியின் வளர்ச்சிக்கான முன்னேற்பாடுகளைக் கூறுவதற்கு முன்பு இன்றைய தலைமுறைப் பிள்ளைகள் நம் தாய்மொழியின் சிறப்புகளை அறிந்து கொள்வது அவர்களுள்  சிறிதளவேனும் மாற்றங்களை ஏற்படுத்தலாம். எனவே, தாய்த்தமிழ் மொழியின் சிறப்புகள் வானளாவக் கிடந்தாலும் ஒரு சிறு முன்னோட்டம்.


தமிழ்மொழியின் தோற்றமும் வரலாறும் :


" கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு
முன்தோன்றிய மூத்தக்குடி தமிழ்க்குடி "
தமிழ் மொழியின் பழமையும் தொன்மையும் உலகறிந்ததே! திராவிட மொழிகளிலெல்லாம் தலைசிறந்தது எனப் போற்றப்படும் பெருமை வாய்ந்தது. மொழியின் தோற்றத்திற்கான ஆதாரம் மிகச்சரியாகத் தெரியவில்லையெனினும் பத்தாயிரம் ஆண்டுகள் பழமையானது என நிறுவுவதற்கான ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன. தமிழ் இலக்கியங்களில் தலைசிறந்ததாகப் போற்றப்படும் திருக்குறள் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இயற்றப்பட்டது எனக் கருதப்படுவதால் ஆக, அதற்கு முன்பிருந்தே தமிழ் இலக்கியங்கள் இயற்றப்பட்டு வந்திருக்கலாம். இயற்கை அழிவுகளின் காரணமாக எண்ணற்ற படைப்புகள் அழிந்துபோனது. எனினும் மிச்சமிருக்கும் நூல்களே மொழியின் பெருமையை உரக்கச் சொல்லும். திருவள்ளுவர் நம் தமிழில் இயற்றிய திருக்குறள் உலகின் முப்பத்தியேழுக்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வாசிக்கப்படுவதிலிருந்தே அதன் சிறப்பை நாம் புரிந்துகொள்ளலாம்.

தமிழர்களின் சிறப்பு :
அரசியல் சார்ந்த பல விடயங்களில் பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்படுவதில்லை என இந்தச் சமகாலத்திலும் கூட கேள்வியெழும் சூழல் நிலவுகிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் பெண்களுக்கு கல்வியும் சரிவரக் கிடைப்பதில்லை என வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பான தொடக்கத்திலேயே பெண்பாற் புலவர்கள் ஆண்களுக்கு சரிநிகர் சளைத்தவர்களல்ல என தத்தம் பாடல்களால் நிறுவியுள்ளனர். ஔவையார்,காக்கைப்பாடினியார், காரைக்கால் அம்மையார் என மிகப்பிரபலமான பெண்பாற் புலவர்கள் இருந்துள்ளனர்.

ஔவையார் திருக்குறளைப் பற்றி ஒற்றைவரியில் இப்படிச் சொல்லியிருக்கிறார். “அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகுத்திக் குறுகத்தரித்த குறள் “ என்று. இதில் உற்றுநோக்க வேண்டியது அணுவைப் பற்றி ஆராய்ந்ததே ஆயிரத்தி எண்ணூறுகளுக்குப் பிறகுதான். இரண்டாம் உலகப்போரில் தான் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டன.  அதுமட்டுமின்றி அக்காலங்களிலேயே வானவியல், கணிதம் போன்ற துறைகளில் சிறந்து விளங்கிய பலரும் தமிழர்களே! கணிதப்புலமையில் சிறந்து விளங்கிய ராமானுசர் வாழ்ந்ததும் இதே தமிழகத்தில்தான். இன்றும் கூட அனைவரும் வியந்து போற்றிடும் விந்தையான எண்கணிதங்களும் சூத்திரங்களும் அன்னார் படைத்ததுதான். விஞ்ஞானம் மெல்ல மெல்ல எட்டிக்கொண்டிருக்கும் பல விடயங்களை அன்றே பழமொழிகளின் வாயிலாகவும் பாடல்களாகவும் எளிதாய்ச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள். நாம் செய்ததெல்லாம் அந்த உண்மைகளைத் திரித்துப் பொருள் மாற்றி தவறாக உபயோகித்துக் கொண்டிருப்பது தான்.

மொழியின் அவசியம் :
மொழி என்பது உணர்வுகளை எடுத்துச்செல்கிற அல்லது உணர்த்தக்கூடிய கருவி என்பதையும் கடந்து மனிதர்களின் சமூகக் காரணிகளில் முக்கியப் பங்கு பெற்றதாகிறது. கலாச்சாரம், பண்பாடு, பொழுதுபோக்கு, தொன்மை என எல்லாவற்றையும் பிரதிபலிப்பதாகவே இருந்து வருகிறது. மொழியானது ஒலி வடிவத்தில் பேசுவதற்கு மட்டும் பயன்படுமாறு அல்லாமல் அதைச்சார்ந்த இலக்கியங்களின் வளர்ச்சிக்கும் துணை நிற்கிறது. ஆக, மனிதர்களின் நாகரீக வளர்ச்சிக்கு ஏற்ப மொழியும் வளமை பெற்று தன்னிறைவு பெறல் வேண்டும். காலமாற்றத்தில் சிதைவுறுவதாய் இருந்துவிடக் கூடாது.

இடைக்காலத் தமிழ் வளர்ச்சி :
கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் தமிழின் பரிணாம வளர்ச்சி என எடுத்துக்கொண்டால் சங்ககாலம் தொடங்கி இன்றைய சமகாலம் வரை பல நிலைகளைக் கடந்து வந்துள்ளது. கபிலர், இளங்கோவடிகள் போன்ற புலவர்கள் வாழ்ந்த கி.பி இரண்டு மற்றும் ஐந்தாம் நூற்றாண்டிலிருந்தும் எட்டாம் நூற்றாண்டுகளில் வளர்ச்சியடைந்த பக்திப் பாடல்களும் பின்னர் அரசர்களைப் பற்றிய இலக்கியங்களுமாய் காலத்திற்கேற்ப மொழியும் இலக்கியங்களும் மாறிக்கொண்டே சிறப்பாய்த் தம்பணி செய்துள்ளன. இதற்கு இடைப்பட்ட காலங்களில் வெளிநாட்டிலிருந்து இங்கே வந்த பலரும் கூட தமிழ் கற்று உரைநடை இலக்கியங்களெல்லாம் கூட எழுதியிருக்கின்றனர்.

இருபதாம் நூற்றாண்டில் இவற்றிற்கெல்லாம் மாற்றாக சுதந்திர வேட்கைப் பாடல்களும் இயற்கை குறித்த  வர்ணனைப் பாடல்களும் அதிகளவில் இயற்றப்பட்டன. பாரதியார் சுதந்திரப்புரட்சிக்கு வித்தாக பல பாடல்களை இயற்றினார். பின் வந்த பாரதிதாசன் போன்றோர் திறம்படக் கையாண்ட யுத்திகள் மொழியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றன.

நம் மொழிச்சிதைவின் தொடக்கம் :
மேற்கத்திய கலாச்சாரத்தின் பாதிப்பாலும் ஆங்கில மொழியின் செல்வாக்காலும் நசிவடைந்து கிடந்தன தமிழ் மொழியும் தமிழ் இலக்கியமும். பின்னர் அச்சு இந்திரங்களின் வருகையும் நிலையான ஆங்கிலேயர் ஆட்சியும் அதன்பின் ஏற்பட்ட சுதந்திர இந்திய ஆட்சியும் மதச்சுதந்திரமும், கல்வி முறையில் ஏற்பட்ட தோற்ற வளர்ச்சி நவீன சிந்தனைகளின் உருவாக்கமும் போன்ற காரணிகளால் தமிழ் மொழியும் இலக்கியமும் இக்காலக்கட்டத்தில் பெரிதும் வளர்ச்சியுற்றன. இக்காலக்கட்டத்தில் இடம்பெற்ற முக்கிய மாற்றமாகக் குறிப்பிடப்பட வேண்டியன
சங்க இலக்கியங்கள் மீளக் கண்டுபிடிக்கப்பட்டதும் அச்சேற்றியதும்.
உரைநடையில் எழுதுவது அறிமுகமானது.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புதுக்கவிதை எனும் புதுப்பாணி தோற்றம் பெற்றது.

பின்னர் இலக்கியங்கள் மாற்றத்திற்கேற்ப சிறுகதை இலக்கியங்களாகவும் புதினங்களாகவும் வளர்ச்சியடைந்தது. புதுமைப்பித்தன், கல்கி, மு.வரதராசனார் , ம.பொ.சி, மு.கருணாநிதி என எண்ணிலடங்காதோர் எழுதிக் குவித்தனர். பிற்காலத் தமிழ் புரிந்துகொள்ள எளிதாய் உருமாறி பெரும்பாலானோர் எழுதத் தொடங்க நூற்றாண்டின் பிற்பகுதியில் மேலைநாட்டுக் கருத்துக்களும் பரவ ஆரம்பித்தன. தமிழ் எனும் தனித்தமிழ் மொழி சிறிதாக பிறமொழிக் கலப்புப்பெற்றது. அதில் ஏற்படும் நயம் பெரும்பாலானோராலும் விருப்பமானதாய் ஏற்றுக்கொள்ளப்பட அது இன்னும் வளர்ந்தது.

சிறுகதை இலக்கியம் வரவேற்பு பெறத் தொடங்க அதன் வடிவமும் மாறி ரசனைக்கேற்ப பிறமொழிக் கலப்பு அதிகளவில் ஏற்பட்டது. பேச்சுவழக்கில் எழுத்துநடை பரவ ஆரம்பித்தது. சிறுகதைகள் உணர்வுகளை எளிதாய்க் கடத்தக் கூடியதாக இருந்தபடியால் மாற்றங்களைத் தவிர்க்க முடியவில்லை. இலக்கியங்களின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு சிறுகதைகள் வாசகர்களால் பச்சைக்கம்பள வரவேற்பைப் பெற்றன.

இன்றைய தாய்மொழியின் நிலை :
எது எப்படியாகினும், தமிழ்மொழி மக்களின் வாழ்வில் பெரும்பாண்மையான இடத்தை ஆக்கிரமித்திருக்கிறது என்று உறுதிபடக் கூறலாம். நம் தாய்மொழியைப் போற்றும் விதமாய் பிள்ளைகளுக்கு தமிழ் என்று பெயர் சூட்டுகிறார்கள். மற்ற எல்லா மொழிகளை விடவும் இங்கே அதிகமானோர் எழுதிக்குவிக்கிறார்கள். வாசகர்களும் இருக்கிறார்கள். இது சாதாரணமானது அல்ல. தொழில்நுட்பங்கள் வளர்ந்து மக்களின் கலைசார்ந்த மற்றும் பொழுதுபோக்குக்கான தேடல்கள் வெகுவாகக் குறைந்திருக்கும் இச்சூழலிலும் கூட எழுத்துக்கள் வரவேற்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இதற்குக் காரணம் நம் பாரம்பரியம். இலக்கியங்கள் நம் வாழ்வோடு கலந்தே இருக்கின்றன. புத்தகங்கள் இதுவரை அனைவராலும் விரும்பப்பட்டே வந்திருக்கிறது. இதெல்லாம் ஒருபுறமிருக்க தமிழர்களின் இன்னொருபக்கம் அதாவது பெரும்பான்மையானோரின் முகம் இதற்கு எதிரான மனநிலை உடையது.

அறியாமையால் பொருள் சிதைவு :
தமிழின் சிறப்புகளாக இன்றும் அழியாமல் பாமரர்களின் இலக்கிய வடிவமாக உள்ள பழமொழிகளை விருப்பம்போல் திரித்து பொருள்மாற்றி உண்மையான விளக்கத்துக்கு எதிரானதாக்கிப் பயன்படுத்துகிறோம். இது நிச்சயமாக தவிர்க்கப்பட்டு மேம்படுத்தப்பட வேண்டியது.

“ ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன் “ என்று பழமொழி ஒன்று சொல்லப்படுகிறது. இது பேரை அல்ல வேரை (மூலிகை வேரை )ஆயிரம் வேரை கொன்றவன் அரை வைத்தியன்.

“நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.” இதில் வரும் சொல் சூடு அல்ல சுவடு. சந்தையில் மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம் சுவடு. அழுத்தமான சுவட்டை பதிக்கும் மாடே அதிக பலம் வாய்ந்தது. ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம் புலனாகும் என்ற கருத்தை எதிரானதாக்கி உபயோகிக்கிறோம்.

“அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை புடிப்பான்.” எனச் சொல்லப்படும் பழமொழியின் உண்மையான பொருள் அர்ப்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான் என்பதாகும். வள்ளல் ஆனவரை கஞ்சனாக மாற்றி விட்டோம் காலப்போக்கில்.
நம் முன்னோர்கள் நம் நல்வாழ்வுக்காக சொல்லி வைத்ததை நாம் பிறரை குறை கூற உபயோகிக்கிறோம்.

தமிழர்கள் தம் தாய்மொழிக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் :
“கற்றது தமிழ்”  என்றொரு  திரைப்படம் தமிழ் இலக்கியம் படித்து வாழவே பாடுபடும் ஒரு இளைஞனின் கதையை நேர்மையாக எடுத்துச் சொல்லியிருக்கும். விளிம்புநிலை மக்களில் ஒருவன் இலக்கியத்தின் மீதும் தாய்மொழியின் மீதுமுள்ள பற்றினால் அதையே பாடமாய் எடுத்துப் படிக்க பின்னர் வேலை கிடைக்காமல் நடைபாதையில் கைக்குட்டை விற்கும் சூழல் காட்டப்படும். தமிழ் படித்த ஒரே காரணத்திற்காக அவன் ஒதுக்கிவைக்கப் படுகிறான். சமூகத்தில் வேடிக்கையாக்கப்பட்டு கேள்வி கேட்கமுடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறான். இதுதான் தற்போது தாய்மொழிக்குத் தரப்படும் முக்கியத்துவம். வேலைவாய்ப்புகள் கூட தரப்படுவதில்லை.

வாசிக்கும் ஆர்வம் அனைத்து பரப்புகளிலும் வெகுவாகக் குறைந்திருக்கிறது என்பதே உண்மை. தாய்மொழியில் எழுதப்பட்ட இலக்கியங்கள் வெகுவானோரால் விரும்பப்படுவதில்லை. ஆங்கிலம் பெரிதாய் இந்த விடயத்தில் பங்காற்றியிருக்கிறது. ஆங்கிலத்தின் மீதான மோகம் அதிகரிக்கத் துவங்க சிறிதுசிறிதாக நம் பல்லாயிரமாண்டு பெருமைவாய்ந்த மொழி அழிவைச் சந்திக்கத் தொடங்குகிறது.

பாரதி “ மெல்லத் தமிழினிச் சாகும்”  என சொன்னது எவ்வளவு உண்மை? புத்தகங்கள் முன்போல அதிகளவில் விரும்பி வாசிக்கப்படுவதில்லை. பிரபலமான எழுத்தாளர்களின் புத்தகங்கள் கூட ஆயிரம் பிரதிகள் விற்கப்படாத சூழல் நிலவுகிறது. மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கத்தாலும் வளர்ந்துவரும் நாடுகளின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையிலும் நம் சமூகமும் மாற்றங்கண்டு வருகிறது. வாசித்தல் போன்றவையெல்லாம் தேவையில்லாததாகக் கருதப்படுகிறது. குழந்தைகளுக்கு படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தாமல் மின்னணு விளையாட்டுகளுக்குப் பழக்கி வாசித்தலில் ஒரு மோசமான எதிர்காலத்தை ஏற்படுத்தி வருகிறோம். தமிழ்வழியில் படித்தலும் கூட சமூகத்தில் ஏளனமாய்ப் பார்க்கப்படும் சூழல் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆங்கில வழியில் கல்வி கற்கும் பலரும் தாய்மொழியான தமிழை ஒரு பாடமாய்க் கூட எடுத்துப் படிக்க முன்வருவதில்லை. இந்தி உள்ளிட்ட வடமொழிப் பாடங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

உண்மையில் பார்த்தால் ஆங்கிலமே தெரியாமல் அறிவியலும், கணிதமும், தத்துவமும், தாய்மொழியில் கற்று அந்தந்தத் துறைகளில் வெற்றி கண்டவர்கள் எராளம் பேர். ஆனால், தமிழ்நாட்டில் தாய்மொழியில் இவற்றைப் பயில்வது கேவலம் என்று பொதுப்புத்தியில் வளர்க்கப்பட்டுள்ளது. தாய்மொழி வழிக்கற்றலின் மூலம்தான் புதிய கண்டுபிடிப்புகள் எளிதாக சாத்தியப்படும். புதிய கருவிகளை, இயந்திரங்களை உருவாக்கம் செய்து உலகோடு போட்டியிட இயலும்.

ஆங்கில மோகமும் தமிழின் அழிவும் :
தமிழ் வழி கற்றல் என்பது அதிக அளவில் ஆதரவு பெறாமல் இருக்க முக்கியமான காரணம் தமிழ் வழியில் படித்தால் நல்ல வேலை கிடைக்காது என்ற கருத்து பரவலாக இருப்பதே ஆகும். கல்வியானது ஆரோக்கியமான மனிதனை உருவாக்கும் என்பதை விட நல்ல சம்பளத்திற்கான வழி என்ற நம்பிக்கை பலப்படுத்தப்பட்டுவிட்டது இன்று. அதிலும் ஆங்கில வழிக் கல்வியே சிறந்த ஊதியத்தைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை. மேலும், தமிழ் வழியாக கல்வியின் பல்வேறு புலங்களை படிக்க இயலாது, அதற்கான சாத்தியப்பாடுகளும் இல்லை என்ற நிலையும் மற்றுமொரு காரணமாகும்.

இன்று தமிழ் வழிக் கல்வி என்பது அரசு பள்ளிகளில் மட்டும் காணப்படுகிறது. அங்கே பெரும்பாலும் ஏழை எளியோரே பயில்கின்றனர். அவர்களும் வேறு வழியில்லை என்பதற்காக தமிழில் பயிலும் நிலை. தமிழ் வழிக் கல்வி என்பது வெறும் மொழிப் பிரச்னை அல்ல. அது சமூக நீதி குறித்தப் பிரச்னை. அரசுப் பள்ளிகளின் அடிப்படை சமூக நீதியாகும். அதை மெதுவாக புறம்தள்ளும் வகையில் ஆங்கிலப் பள்ளிகள் எண்ணிக்கையில் பெருகி வருகின்றன. அரசும் ஆங்கில வழி வகுப்புகளை நாளும் புதிது புதிதாகத் தொடங்கி வருகிறது.

தமிழகத்தில் பள்ளிக்கல்வி முடித்த ஒருவன் தன் தாய்மொழியில் பிழையின்றி எழுதவும் படிக்கவும் இயலாதிருப்பது எவ்வளவு வெட்கக்கேடானது ? இந்த நிலைக்கு அரசுகள் ஒரு காரணம் என்றபோதும் முழுமுதற் காரணம் பெற்றோர்களே. சிறுவயதிலேயே தமிழில் வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தாமல் ஆங்கிலத்தில் பேசுவதையே பெருமையாகக் கருதி ஊக்குவிப்பதால் வந்த வினை. பின்னாட்களில் அதுவே பூதாகரமாகி தமிழ் அவர்களிடம் அடியோடு தடைப்பட்டுப் போகிறது. அந்தப் பிள்ளைகளும் வளர்ந்து அவர்களது குழந்தைகளிடம் தமிழ் வளர்ச்சி எப்படி இருக்கும் என யூகித்துப் பாருங்கள்.

நாம் தற்போது மிகப்பரவலாய்ப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு முறை மொழியைச் சிதைத்துக் கொண்டிருக்கிறது. குறுஞ்செய்திகள் *தங்கிலீஷ் (வேறு தமிழ்ச் சொல்லில் குறிப்பிடுவது அவ்வளவு சிறப்பாக இருக்காது.) என்ற பெயரில் தமிழ்ச்சொற்களை ஆங்கில எழுத்துக்களால் குறிப்பிடுகிறோம்.
இப்படித்தான் எந்த முன்னேற்பாடும் இ்ன்றி தமிழ்மொழி சீராக தன் பொழிவை இழந்து கொண்டிருக்கிறது.

தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டியன :
ஒருவர் தன் தேவைக்கேற்ப, வசதிக்கேற்ப எத்தனை மொழிகளை வேண்டுமென்றாலும் கற்றுக் கொள்ளலாம். இது அவரவர் திறனும் விருப்பமும் சார்ந்ததே. அதற்காக தமது சொந்த மொழியை, தாய்மொழியை புறக்கணிப்பதும் தாழ்வாகக் கருதுவதும் அநாகரிகமானது. ஒரு மொழி அதன் சொந்த மக்களால் புறக்கணிக்கப்படும்போது வேர் அறுபட்ட கொடியினைப் போல சிறிது காலம் பச்சையாகத் தெரிந்துவிட்டு, பின் பட்டுப் போய்விடும் அபாயம் நிகழ வாய்ப்பிருக்கிறது.
பிறமொழியில் சரளமாகப் பேசுவதை, எழுதுவதை கௌரவமாக, பெருமையாகக் கருதும் நாம், நம் தாய்மொழியை சரிவர கற்றுக் கொள்ளாது இருப்பதற்காக வெட்கப்படுவதில்லை. ஆங்கிலச் சொற்களை நிறைய நிறைய கலந்து பேசுபவர்களும், ஆங்கிலத்திலேயே பேசுபவர்களுமே புத்திசாலிகள் எல்லாம் தெரிந்தவர்கள் என்பது ஒரு மாயையான அறியாமையே!

நம்மிடம் சொற்கள் இல்லாதபோது பிறமொழிச் சொற்களில் பொருட்களின் பெயரை குறிப்பிடுவதிலாவது ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால், வலிந்து வாயில் வராதபோதும் தட்டுத்தடுமாறி பிறமொழிச்சொற்களை பெருமைக்காக பயன்படுத்துகிறோம் என்றால், நம் மொழியை நாம் அழிக்கத் தொடங்கி விட்டோம் என்றுதானே பொருள்?
தமிழைத் தம் தாய்மொழியாகக் கொண்ட மக்களில் பலர் தாமும் தங்கள் பிள்ளைகளும் தமிழில் உரையாடுவதை கௌரவக் குறைச்சலாக எண்ணும் ஒரு அபத்தம் நிகழ்கிறது. இந்த அறியாமையை முதலில் களைதல் வேண்டும். அன்றாடம் பயன்படுத்தும் சொற்களையாவது பிறமொழிக் கலப்பின்றி பேசத்தெரிதல் வேண்டும். பிள்ளைகளை ஆங்கிலவழிப் பள்ளிக்கூடங்களில் தான் படிக்கவைக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் மாற்ற முனைதல் மிக அவசியம். இன்றைக்கு ஆங்கிலவழிக் கல்விக் கூடங்களில் பிள்ளைகள் ஓரிரு வார்த்தைகள் தாய்மொழியில் பேசிவிட்டால் தண்டமும் தண்டனையும் என்பது மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளது. அறிவு வளர்ச்சி என்பது பிற மொழிகளைக் கற்றுக்கொள்வது மட்டுமேயல்ல. தாய்மொழியைப் பிழையின்றி பேசத்தெரிதலும் தான்.

தமிழ்மொழியின் வளர்ச்சிக்கான பரிந்துரைகள் :
தொழில் புரட்சி முதல் அறிவியல் புரட்சி வரை அது எந்த மொழியினரால் நடத்தப்படுகிறதோ அந்த மொழியே ஆதிக்கம் பெறுகிறது. அவ்வாறு ஆதிக்கம் பெறும் மொழி வழக்கு மொழியாக மாறி, அது பின்னர் வாழ்வியல் மொழியாக மாறுகிறது. எனவே, தமிழ் பேசலாம், கேட்கலாம், எழுதலாம், படிக்கலாம் என்ற நிலை மாறி அது வாழ்வின் அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்தலாம் என்ற நிலை என்று வருகிறதோ, அன்றைக்கு தான் தமிழ் வளரும்.
தமிழர்களின் கல்வி, வேளாண்மை, வணிகம், கலை, தொழில்நுட்பம், மருத்துவம், அறிவியல், மின்னியல், கணிதம், நீதி, வங்கித்துறை செயல்பாடுகள், அரசியல், திரைப்படத்துறை, ஊடகங்கள் என அனைத்திலும் தமிழ் என்ற நிலையை ஏற்படுத்தி, அதை பயன்பாட்டுக்கு கொண்டுவந்தால் மட்டுமே தமிழ் மென்மேலும் செழித்து வளரும்.

தமிழ் பல்கலைக்கழகம், தமிழ் படிக்கும் மாணவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் ஆகியோர் தமிழ் வளர்ச்சிக்கான திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
அறிவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், வேளாண்மை, மின்னியல், பொறியியல், தொழில்நுட்பம், மருத்துவம், மேலாண்மை, சட்டம் போன்ற உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி துறைகளில் பயன்பாட்டு மொழியாக தமிழை கொண்டுவரத் தேவையான தமிழ்ச் சொற்களை உருவாக்க வேண்டும். அனைத்துத்துறைகளிலும் உள்ள பாடப் புத்தகங்களை, ஆங்கிலம் மற்றும் உலக மொழிகளில் வெளிவரும் ஆராய்ச்சி நூல்களை அந்தத் துறையைச் சேர்ந்த வல்லுநர்களோடு சேர்ந்து, அதன் செழுமை மாறாமல் தமிழ் மொழியில் மாற்றம் செய்ய வேண்டும். அதை கல்வி பயில்வதற்கான நூலாக மாற்றம் செய்து அதை அனைத்து உயர்கல்வி நிலையங்களிலும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று அப்துல்கலாம் ஐயா குறிப்பிட்டிருக்கிறார்.

உலக தொடர்பு மொழியான ஆங்கிலத்தையும், தாய்மொழியான தமிழையும் அடிப்படையாக வைத்து நமது மொழியை வளர்க்க வேண்டும். முதலில் தமிழ் மொழியில் உயர்கல்வியை கற்பிக்கச் செய்து, அதன்பிறகு, ஆராய்ச்சியையும் நமது மொழியிலேயே மேற்கொள்ள வேண்டும். தமிழ் மொழியின் வாயிலாக செய்யப்பட்ட ஆராய்ச்சிகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து உலக அளவில் அவற்றை கொண்டு செல்ல வேண்டும். அதை புத்தகங்களாகவும், ஆராய்ச்சி நூல்களாகவும் வெளியிடுவது அவசியம்.
தமிழ் மொழி வளர்வதற்கு உயர்கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களின் பங்கு மிகவும் முக்கியமானது. தொழில்நுட்பங்கள், அறிவியல், மருத்துவம் போன்ற துறைகளில் தமிழ்மொழியிலேயே ஆராய்ச்சிகளைச் செய்து தாய் மொழியிலேயே சிந்திக்கும் திறனையும், கற்பனைத் திறனையும் மேம்படுத்த வேண்டும். இதன்மூலம், நாம் உலகத் தரத்தோடு புதிய சாதனங்களை, எந்திரங்களை உற்பத்தி செய்து உலக நாடுகளோடு போட்டி போட்டு வெற்றி பெற முடியும். இத்தகைய சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கான கொள்கைகளை வகுக்க வேண்டும். இதன்மூலம் தொழில் மேம்பாடு அடைவதோடு, வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த துறையை தேர்ந்தெடுத்துப் படிக்கும் சூழல் ஏற்படுவதுடன், தாய்மொழியிலேயே படிப்பதால் தமிழும் வளரும்.

ஆட்சி அதிகாரத்திலும், சட்டம் மற்றும் நீதியிலும் தமிழ் மொழியையே முழுமையாக பயன்படுத்த வேண்டும். அதேசமயம் தொடர்பு மொழியாக ஆங்கிலத்தை கற்றுக் கொண்டு, அதை துணை ஆட்சி மொழியாக பயன்படுத்தலாம். தமிழ்நூல்களை மற்ற மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும். அதேபோன்று, மற்ற மொழிகளின் நூல்கள் தமிழ்மொழியில் மொழி பெயர்ப்பு செய்து வெளியிட வேண்டும். இந்த திட்டங்களை முறையாக செயல்படுத்தினால் தமிழ் மொழி செழித்து வளரும்.

சமீபத்திய நாளிதழில் வெளிவந்த செய்தியின்படி சிங்கப்பூரில் குழந்தைகள் எளிமையாகத் தமிழைக் கற்றுக்கொள்வதற்கு வசதியாக ஒரு செயலியை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். அதைப்போலவே இங்கும் தொடங்கி விளையாட்டாகத் தமிழார்வத்தை இன்றைய குழந்தைகளிடம் வளர்க்கலாம். நேரமின்மையும் புத்தகங்களை வாங்கிப்படிக்க அக்கறையின்மையாலும் படிக்க இயலாதவர்கள் எளிதாக வாசிக்கும் வண்ணம் இணையம் மூலம் மின்வடிவில் அல்லது செயலிகளின் வழியாக புத்தகங்களைப் பரவலாக கிடைக்கச் செய்யவேண்டும். பழைய நூல்களை மின்வடிவில் புதுப்பித்தல் மட்டுமல்லாது புதிய எழுத்தாளர்களை ஊக்குவித்து அவர்களின் படைப்புகளும் வெளிவரச் செய்து தமிழார்வத்தை வளர்க்கவேண்டும். அப்போது மட்டுமே மொழியின் வளர்ச்சியைச் செம்மையுறச் செய்யமுடியும்.

மொழி வளர்ச்சியில் நம் கடமை :
நாம் சிந்திக்கும் முறை, நடந்து கொள்ளும் விதம், செயல்கள் இவற்றால் மட்டுமே நமது நற்பண்பும் அறிவும் ஆளுமையும் மிளிருமே தவிர, வேறு ஒரு மொழியை அம்மொழியை அறியாதவர்களிடம் பேசி தன்னைப் பெரிய ஆளாகக் காட்டிக் கொள்வதால் அல்ல. இதனால் அவர்களிடமிருந்து அந்நியப்பட்டுப் போவதற்குத்தான் அதிக வாய்ப்பிருக்கிறது. நம் தாய்மொழியான தமிழ், தமிழாசிரியர்களின் மொழியாகவும் தமிழ் இயக்கங்களின் மொழியாகவும் அரசியல் கட்சிகளின் மொழியாகவும் கதை கவிதைக்கான மொழியாகவும் மட்டும் இன்று சுருக்கப்பட்டிருப்பதை ஆயிரம் பெருமைக்குரிய செம்மொழியான தமிழ்மொழியின் துயரமான காலகட்டம் என்றே குறிப்பிடலாம்.

தாய்மொழி என்பது சிந்தனை. அதுதான் எண்ணம். அதுதான்எல்லாமும். அதை மறுப்பதன் வழியாக நாம் சிந்தனையையும் எண்ணத்தையும் மறக்கிறோம் என்பதால்தான், மகாத்மா காந்தி உள்பட அனைவரும் தாய்மொழி வழிக்கல்வியை வலியுறுத்திச் சொல்கிறார்கள். பிறமொழி வழிக்கல்வியைப் பயில்பவர்கள் அம்மொழியை நன்கு பேசி எழுதி மனனம் செய்து மருத்துவராகவோ, பொறியாளராகவோ மாறி பொருள் ஈட்ட முடியுமே தவிர, கண்டுபிடிப்பாளர்களாகவும் சிந்தனையாளர்களாகவும் உருவாவது அரிது என்பதே கல்வியாளர்களின் ஒருமித்த கருத்து. அதிகார பலமிக்கவர்களோடு எளிய மக்கள் அச்சமின்றி உரையாடக்கூடிய வலுவைத் தரக்கூடியது கல்வி. இன்றோ வருவாய் நோக்கில் நம் தூய தமிழ்மொழியின் மீது வெற்று முலாம் பூசி அதன் சிறப்பை மறைத்து விற்கப்படும் வியாபாரமாக ஆனதற்கு முக்கியப் பொறுப்பேற்க வேண்டியது அரசாங்கமே! தமிழில் கல்வி கற்றாலும் வேலைவாய்ப்புகள் ஏராளம் உண்டு என்கிற நிலையை ஏற்படுத்தி தமிழை வெறும் இலக்கிய மொழியாக மட்டும் புகழ்ந்து கொண்டிருக்காமல் வணிக மொழியாகவும் தொழில் மொழியாகவும் உயர்த்த வேண்டும். வெறும் ஆர்வம் மட்டுமே போதாது என்பதை தமிழ்ச் சமூகமே உணர்ந்து செயல்பட்டால்தான் செந்தமிழ் செழிப்புறும்.

" இனிமைத் தமிழ் மொழி எமது-எமக்
கின்பந்தரும்படி வாய்த்தல் நல் அமுது!
கனியைப் பிழிந்திட்ட சாறு-எங்கள்
கதியில் உயர்ந்திட யாம் பெற்ற பேறு!
தனிமைச் சுவையுள்ள சொல்லை-எங்கள்
தமிழினும் வேறெங்கும் யாங் கண்ட தில்லை
நனியுண்டு நனியுண்டு காதல்-தமிழ்
நாட்டினர் யாவர்க்குமே தமிழ் மீதில்..! "

எனப் பாரதிதாசனார் பாடியது எப்படி மெய்யன்றிப் போகும் ? தமிழர்கள் யாவருக்கும் தம் மொழியின் மீது காதலிருக்கும்.

நாம் அனைவரும் தற்போதைய நம் மொழியின்நிலை உணர்ந்து நம் தீந்தமிழ் மொழி ஆலமரம்போல் ஆழமாக வேரிட்டு அருகுபோல் அகலப்படர நம்மால் இயன்றதைச் செய்வோம் என உறுதியேற்போம்.

பாரதியைக் கூப்பிட்டு அவர் மகிழும் விதமாய் இப்போது ஒன்றுமட்டும் சொல்வோம்.

“தமிழ் இனி மெல்லத் தளிர்க்கும்.”



          

                        - விக்னேஷ் சி செல்வராஜ்



பதிவு : பிரதிலிபி - அகம் இணைந்து நடத்திய 'ஞயம் பட வரை' கட்டுரைப்போட்டிக்காக எழுதியது.