Total Pageviews

Thursday, 17 March 2016

வன்மத்தின் நிறம்

வன்மத்தின் நிறம்

வரட்டுக் கௌரவம் எனும் 
வெற்றுச்சாயத்தை விசமெனத் தடவி 
வல்லூறுகள் வேட்டையாடுகின்றன 
கோழிக் குஞ்சுகளை. 
வெடித்துக் கிளம்பும் நரம்புகளை 
மயிரென அடக்கிச் சுருண்டவன்  
கழுத்தில் பாய்கிறது கயவர்கள் 
கூட்டத்தின் ஒரு வாள். 
சாத்தானின் நாற்றம் கேவுகிறது 
ஈனச்சாதியென 
நாக்கில் விருச்சிகக் கொடுக்கு. 
குரூரத்தின் உச்சமாய்க் 
கண்ணீர் வடிக்கிறது 
உயிரின் வாசனை. 
சுட்டெரிக்கும் பகலில் 
வீழ்ந்த மனிதத்தின் சங்கில் 
அருகுகள் நசுங்கிய பூட்ஸ் கால் 
அழுத்துகிறது பெரும்பாறையென. 
வெள்ளைக் கோடிட்ட தார்ச்சாலையில் 
வன்மமெனத் தெறிக்கிறது புனிதத்தின் 
நிறம்மாறிய ரத்தம். 
நிமிடத்தில் கோரத்தின் முகமாய் 
மாறி வெறிக்கிறது சுயத்தின் நிழல். 
அறுந்து தொங்கும் ஊனாங்கொடியில் 
சொட்டும் பாலில் சிவப்புநிறம். 
"கொல்.. கொல்" என்பவனின் 
குரல்வளையை நெரிக்க வருகிறது 
சா'தீ'யால் கருகிய குடிசையின் 
பிண்ணனியில் அரிவாள்களின் 
நிறத்தவன் என அடையாளங்காணப்படப் 
போகும் ஒருவனது ஜனனம். 
விடாமல் தொடரும் இந்தக் 
கருமத்தின் வினை.

                               - விக்னேஷ் சி செல்வராஜ்


No comments:

Post a Comment