Total Pageviews

Monday, 9 May 2016

பிம்பிளிக்கி பாலிட்டிக்ஸ்

பாபருக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்ல பார்ட்டி
கொள்கை : ஆப் கி பார்; எந்த ப்ளைட்டுல பறக்குறார் அண்ணாந்து பார்.

நாட்டையே நிமிர்த்துவோம் என முழங்கி நாடுநாடாய்ப் பறந்து கொண்டிருக்கும் பிரதமர் சார்ந்துள்ள கட்சி. சர்ச்சைகள் சட்டையைப் பிடித்துத் தொங்கியபடியே இருக்கும். அந்நிய நாட்டு உறவுகளை பலப்படுத்துவதே ஐந்தாண்டுத் திட்டம். தமிழகத்தில் வெகுவேகமாக வளர்ந்து கொண்டிருப்பதாக அவர்களே சொல்லிக்கொள்வார்கள்.
மாட்டுக்கறி,மதக்கலவரம் என ஆல்டைம் லைம்லைட்டிலேயே இருப்பது சிறப்பு.

போங்கிரஸ் ( ரிட்டையர்டு நடிகைகள் முன்னேற்றக் கழகம் )
கொள்கை : இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித் தருதல்.

நாட்டிலேயே ஏன் உலகிலேயே அதிக வேட்டியவிழ்ப்புகள் நடைபெறும் இடம் குத்தியமூர்த்தி பவன்.(ஆபாசம் துளியும் இல்லை ) தினமும் முந்நூறு நானூறு பேர் வந்துசெல்லும் மடம் சாரி இடம்.
ரிட்டையர்டு நடிகைகளுக்கு முன்னுரிமை தந்து காரிய(?) கமிட்டியில் பதவி வழங்கப்படும். மீதமுள்ள மூத்த உறுப்பினர்களுக்கு மதியம் மீந்துபோன பொங்கல் இலவசமாகத் தரப்படும்.
கட்சியின் இளைய தலைவர் கோகுல் மட்டும் சுற்றுப்பயணம் என்கிற பெயரில் ஏழைக் குடிசைகளுக்குள் புகுந்து கூழை ஆட்டயப்போட்டு குடிப்பார். சின்னப்புள்ளைகளின் ரொட்டியை புடுங்கித் தின்பதால் பப்பு என்ற செல்லப்பெயரும் உண்டு.

அடிமைகள் முன்னேற்ற கழகம்
கொள்கை : பணிவு குனிவு.

முதுகுக் கூனல் உள்ளவர்களுக்கு உடனடி அமைச்சர் பதவி.தேர்தலில் சீட்டு கிடைக்க அறிமுகத்திற்கு முன்பு தங்கத்தாரகையில் தொடங்கி புரட்சித்தலைவி என முடியும் பதிமூன்று பக்கக் கட்டுரை வாசிக்கத் தெரிந்திருக்கவேண்டும். கோயஸ் தோட்டத்தில் கிளம்பும்போது கண்ணைமூடி மண்ணைப்பார்த்து கும்பிடத்தொடங்கி வடநாடு போகும்வரை நிமிராதிருக்க வேண்டும். அப்படியே கண்ணசந்து தூங்கவிடவும் கூடாது.முழிப்பதற்குள் கேபினட்டில் பெயர் நீக்கப்பட்டுவிடும்.
அறிஞர் பிரேசில் கும்பத் நடத்திய சர்வேயின்படி குடிப்பவர்கள் இ்ல்லாத ஒரே கட்சி இதுதான் என்ற பெருமையையும் சமீபத்தில் பெற்றுள்ளது.

திருடர்கள் (ஒழிப்பு) முன்னேற்றக் கழகம்
கொள்கை : கடமை கண்ணியம் கட்டுப்பாடு (சிரிக்கப்படாது).

நாடகக்கம்பெனியில் வேலைபார்த்தவர்களுக்கு முன்னுரிமை.பங்காளிச் சண்டைகள் தலைவருக்கு அலர்ஜி. குறைந்தபட்சம் ஜேப்படி, பிக்பாக்கெட்டாவது செய்திருக்கவில்லையெனில் நரிவாலயத்துக்குள் அனுமதியே இல்லை. நாற்பதும் நமதே திட்டம் புஸ்ஸாகிப் போனதால் நமக்கு நாமே என ஊரைச்சுற்றி செல்பீ எடுப்பது தற்போதைய ட்ரெண்ட்டிங்.
அண்ணன் எப்ப போவான் திண்ணை எப்ப காலியாகும் என்ற பழமொழி இங்கே ….ம்ஹூம். ஒன்னுமில்லீங்க.

நாளைய தமிழகம் கேப்டன் கட்சி
கொள்கை : தூக்கி அடிச்சுருவேன் பாத்துக்க.

கைநடுக்கம் கண்டிப்பாக இருத்தல் கூடாது. பாண்டிச்சேரிக்காரர்களுக்கு சிறப்பு அனுமதி. மீம்ஸ் க்ரியேட்டர்கள் ஆகவே ஆகாது.
கட்சியில் அனைவரும் ஜென் துறவிகளாகவே இருப்பதால் நாக்கைத் துருத்துதல் மகாபாவம்.
யாரும் எகிறிக்குதித்து ஓடாமல் கட்சியைச்சுற்றி காம்பவுண்டு சுவர் விரைவில் கட்டப்படும். உறுப்பினர்களுக்கு ஹெல்மட் வழங்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது.

மாம்பழ மக்கள் கட்சி
கொள்கை : மாற்றம் முன்னேற்றம் கட்டப்பஞ்சாயத்து.

கோயில் திருவிழாவில் ஆடுவெட்டும் பூசாரிகளுக்கு முன்னுரிமை. அட்லீஸ்ட் விறகு வெட்டவாவது தெரிந்திருக்கவேண்டும். புகை அலர்ஜி.
சாக்குப்போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் கூட்டணிவிட்டுக் கூட்டணி தாவும் காட்சிகளுக்குத் தாக்குப்பிடிக்கலாம். இல்லையெனில் போன தேர்தல் கூட்டணிக்கட்சிப் பேரைச் சொல்லி கல்லெறி வாங்க நேரிடும்.

மைக்கோ டிமுக
கொள்கை : நட நட நடந்துகொண்டேயிரு.

ஆணிக்கால் உள்ளவர்கள் அனுமதியில்லை.சாலை சுத்திகரிப்புப் பணிக்காக நாடு முழுவதும் நடக்கநேரிடும்.பயணப்படியையும் கொலஸ்டிரால் அளவையும் கட்டுக்குள் வைக்கவே இந்த சிறப்புத்திட்டம். இந்தக் கட்சியைப் பொறுத்தவரை தேர்தலே அலர்ஜிதான்.

நாம் டுமீலர் கட்சி
கொள்கை : நரம்பு புடைக்கும் வீரம்; காத்துல பறக்கும் மானம்.

தம்பிகளாக இருந்தால் போதுமானது. புரொபைல் பிக்சராக புரட்சியாளர் ஒருவரின் படம் வைத்திருப்பது கூடுதல் தகுதி. பேஸ் வால்யூம் ஹைய்யாக இருக்கவேண்டும். மைக் செலவுகளைக் கட்டுக்குள் கொண்டுவரவே இந்த யுத்தி. போனுக்கும் தலைவருக்கும் கொஞ்சம் தகராறு.
உறுப்பினர்கள் ஹலோவுக்குப் பதிலாக ங்கோ… சொல்லிப் பேசத்தொடங்க வேண்டும் என்பது புதிதாகச் சேர்க்கப்பட்ட விதி.
மிக முக்கியமானது அணிவதற்கு வாரத்திற்கு ஏழு கருப்புச்சட்டைகள் வைத்திருக்கவேண்டும்.

சல்யூட் ராம்ராஜ் மக்கள் கட்சி
கொள்கை : எட்டி உதைத்தாலும் போகமாட்டோம்.

அட.. ஒரே ஒரு கருது குடுறா ..
அதுசரி ஓங்கருது..நீ தரமாட்ட..
எனும் வெடிவேலு காமெடி இங்கே அரங்கேறும்.
உறுப்பினர்கள் என்னதான் அசிங்கப்பட்டாலும் சகித்துக்கொள்ளும் தன்மை வேண்டும்.
ராம்ராஜ் பனியன் சட்டை அணிந்தவர்கள் கட்சிக்கு வரலாம். என்றும் தொண்டனாகவே நீடிக்கலாம்.ஏனெனில் தலைவருக்கு மட்டுமே சீட்டு கிடைக்கும்.

ஹார்வர்டு க்ளாக்
கொள்கை : தேர்தலுக்கு மட்டும் தலைகாட்டுவோம்.

சீட்டுக்கம்பெனி நடத்திய அனுபவமிருந்தால் கட்சியில் பெரிய பதவிக்கு வரலாம். கருப்புக்கண்ணாடியும் தொப்பியும் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ். ஐந்து வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நினைவு திரும்பும் அபூர்வவகை கோமா கட்சியைத் தாக்கியதாக உளவுத்துறை தகவல்.

பொம்மயூனிஸ்ட்
கொள்கை : போராட்டம் ஆர்ப்பாட்டம் சாலைமறியல் மனிதச்சங்கிலி.

ஏற்கெனவே இருப்பவர்களுக்கே மத்தியானச் சாப்பாட்டுக்கு காசில்லாமல் இருப்பதால் புதிதாக உறுப்பினர் சேர்க்கை தற்போது தடை செய்யப்பட்டுள்ளது.



குறிப்

ரசிகக் கண்மனிகளே ...

ரசிகக் கண்மணிகளே ...
**************************

தமிழ் சினிமா ரசிகர்கள் இந்த வெரைட்டி ல ஏதாச்சும் ஒன்னா இருப்பாய்ங்க..


ரசிகக் குஞ்சுகள் :
தங்கள் ஆஸ்தான நடிகரின் படங்களை மட்டும் ஏற்றுக்கொள்பவர்கள்.படத்தின் கதையைக் கேட்டால்கூட ஹிட்டுடா..பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் டா என்பார்கள்.ஒருவாரம் தியேட்டரை மொய்த்துவிட்டு ஓய்ந்துவிடுவார்கள்.அடுத்தபடம் வரும்வரை போன தலைமுறை படத்தையே சொல்லி பெருமை கொள்வார்கள்.
துப்பாக்கி டா...மங்காத்தா டா... என்பவை இவ்வகையைச் சேரும்.

லாஜிக்_லாலிபாப்ஸ் :
இந்த வகையறாக்கள் லாஜிக் பார்ப்பதற்காகவே படம் பார்ப்பவர்கள்.வேதாளம் படத்துல ஸ்ருதி எப்படி  பதினஞ்சாவது மாடிக்கு வந்தா.. கத்தி படத்துல விஜய்ண்ணா எப்படி குழாய்க்குள்ள மூச்சுப்போகாம இருந்தாரு  எனக்கேட்டு சீரியசாக  புன்னகைப்பார்கள்.
இவர்களையெல்லாம் வைத்து பசுமாட்டுல பால் கறக்குற சீனும் மூக்கு சிந்தி சேலையில் துடைக்கும் சீன் மட்டுமே சஜ்ஜஸ்ட் செய்யமுடியும். பால்கறக்கும் சீனில்கூட  காம்பு இருக்காவென ஆராய்ச்சி செய்வார்கள்.
இவர்கள் வடிவுக்கரசி ரசிகராகவோ ராமராஜன் ரசிகராகவோ இருக்க வாய்ப்புகள் அதிகம்.
இதற்குள் இன்னும் டீப்பாக இறங்கி பிட்டு படத்தில் தேக்குமர டேபிள் எப்படி ஆடும் என்கிற ரேஞ்சில் லாஜிக் பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். கீப் டிஸ்டன்ஸ் .

அதிமேதாவி_அல்லுசில்லுகள்:
கமல் படங்களை எப்படி இருந்தாலும் சூப்பர்.ஹாலிவுட் ரேஞ்சுல தலைவரு அசத்திட்டாரு என்பார்கள்.கமல் படங்களை புரியாமலேயே பார்த்து புரிந்து ரசித்ததாய் காட்டிக்கொள்வார்கள்.கமல் ரசிகர்கள் அதிமேதாவிகள் எனும் மூட(!)நம்பிக்கை கொண்டவர்கள்.
(தாக்குதல் கொடூரமா இருக்கும்னு நெனைக்கிறேன்.நானும் கமல் லைக்கர் ப்பா..அவ்வ்வ் )

ஹாலிவுட்_காப்பிரைட்டர்கள் :
இன்னும் சிலர் எந்தப்படத்தைப் பார்த்தாலும் ப்ரெஞ்ச் மூவி கொரியன் மூவியென அஞ்சாறு பட டைட்டில்களை மனப்பாடம் செய்துவைத்துக்கொண்டு இது அந்தப்படத்தின் காப்பி இந்தப்படத்தின் காப்பி அடித்து விடுவார்கள்.நோலன் ,இண்டர்ஸ்டெல்லார்,மொமண்டோ என இவர்கள் ஒரு A4 பேப்பரில் பட்டியல் போட்டு வைத்திருப்பார்கள்.
உலக சினிமா ,நீட்சி ,படிமம் , போன்ற புரியாத தமிழ் பேசி கலங்கடிப்பார்கள். இது அவர்களுக்காவது புரியுமா என்றால் அது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

டாட்டாபிர்லாஸ் :
படம்பாக்கலாம் நேரமில்ல என்பதாகத்தொடங்கும் இவர்களின் பேச்சு.கடைசியாக சூரியவம்சம் படத்தை கே டிவியில் பார்த்திருப்பார்கள்.பார்க்கும் படமெல்லாம் பிடிக்கும்.ஆனால் கூத்தாடி காத்தாடி என அங்கலாய்ப்பார்கள்.சுகர் கம்ப்ளெயிண்டாகவோ பிபி பேசண்டாகவொ இருப்பார்கள்.
நேரமில்லை..கொழம்புல காரமில்லனு வாழ்க்கையில் ஓடிக்கொண்டேயிருப்பார்கள்.

ரிவ்யூ_ரிவால்வர்ஸ்:
திஸ் பீப்பிள் ஆர் மோஸ்ட் டேஞ்சரஸ். விமர்சனம் எழுதுவதற்காகவே நாப்பது அடி திரையில் முதல்நாள் படம் பார்ப்பவர்கள்.
எந்தப்படமாக இருந்தாலும் இழுத்துப்போட்டு அடிப்பதில் கில்லாடிகள். நல்ல படங்களையும் அடித்துத்துவைத்து அழகுபார்த்து ஓடவிடாமல் செய்யும் ஸ்லீப்பர் செல்கள்.
படத்தின் தோல்வியில் இவர்களுக்கு முக்கியப்பங்கு உண்டு.
ரிவ்யூக்கள் கிட்டத்தட்ட ஒரே கியரில் இருக்கும்.அது பிஸினஸ் ட்ரிக்கு .


       - விக்னேஷ் சி செல்வராஜ்
          

Friday, 6 May 2016

புரட்சிப்புயல் வைகோ அவர்களுக்கு ஓர் கடிதம்

புரட்சிப்புயல் வைகோ அவர்களுக்கு ஓர் கடிதம்



'பாராளுமன்றப் புலி' என வர்ணிக்கப்பட்ட புரட்சிப்புயல் வைகோ அவர்களுக்கு,


தங்களின் முழக்கங்களால் கவரப்பட்டு அரசியலறிவைக் கற்கத்தொடங்கிய இளைஞர்கள் பலருள் ஒருவன் எழுதும் கடிதம். அது 1994 ஆம் ஆண்டு. கைக்குழந்தையான என்னைத் தாங்கள் தங்கள் கைகளில் தூக்கி, 'தொல்காப்பியன்' எனப் பெயர் சூட்டினீர்கள். அதனால்தானோ என்னவோ உங்களின் மீது அபார நம்பிக்கை இன்றுவரை தொடர்கிறது.

புகைப்படங்களிலும், தொலைக்காட்சிகளிலும் மட்டுமே பார்த்த உங்களை இரண்டு முறை நேரில் பார்க்கும் வாயப்பு கிட்டியது. இரண்டுமுறை பார்க்கும்போதும் உணர்ச்சிமயமான சூழலில் இருந்தீர்கள். ஒரு புரட்சிகரமான அரசியல்வாதியை நேரில் பார்த்த மகிழ்ச்சி எனக்கு அப்போது. தினசரிகளில் உங்கள் புல்லரிக்க வைக்கும் பேச்சுகளை வாசித்து கியூபாவின் சே-கு-வேராவைப் போல உருவகப்படுத்தி பிற்பாடு தங்களின் செயல்பாடுகளால் ஏமாற்றப்பட்ட என் ஆதங்கம்தான் இக்கடிதம்.

சே ஒரு போராளி என்பதால் மட்டும் அவர்மீது நாம் மதிப்பு வைக்கவில்லை. அவர் அசாதாரண சாதனைகளை செய்துகாட்டக் கூடியவர்.
ஏகாதிபத்தியத்தால் பயிற்சியளிக்கப்பட்டு,  ஏகாதிபத்தியத்தால் உருவாக்கப்பட்ட ஒரு நாட்டின் இராணுவத்திற்கு எதிராக விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய ஒருசிலரை வைத்து எதிர்த்ததே அசாதாரணமான ஒன்று.
எங்களுக்கு நீங்களும் அவ்வாறு தோன்றியது முழுக்க முழுக்க எங்கள் தவறுதான் என்பது சமீபகால தங்களது நிலைப்பாடுகளால் தெளிவாகப் புரிகிறது.

வாரிசு அரசியலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக -விலிருந்து விலகி தனிக்கட்சி தொடங்கி தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்தீர்கள். வாரிசு அரசியலுக்கு முடிவுகட்டி தமிழகத்தை மீட்கும் மீட்பராகவே உங்களைப் பலரும் பார்த்தார்கள். ஆனால், நீங்கள் அதை எப்படிப் பயன்படுத்திக் கொண்டீர்கள்? இன்னொரு கட்சியின் மீதான வன்மத்தைத் தீர்ப்பதற்காக மாறிமாறிப் பயன்படுத்தி வருகிறீர்கள். ஜெயா அரசு தங்களையும் தங்கள் சகாக்களையும் 'பொடா' சட்டத்தில் கைது செய்தது. பாஜக ஆட்சியில் கூட்டணி தர்மமெனக் கூறி 'பொடா'வை நீங்கள் ஆதரித்து அது உங்களுக்கே வினையாய் அமைந்ததுதான் கொடுமையின் உச்சம். 

பொடாவில் கைது செய்யப்பட்டு பதினெட்டு மாதங்கள் சிறையில் அடைபட்டு வெளிவந்த பிறகு அதிமுக விற்கு எதிராய் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் ஹஸ்கி வாய்சில் பின்வருமாறு கூறினீர்கள். நினைவிருக்கிறதா ?

"காலம் எங்களைக் காயப்படுத்தியது. அதே காலம் எங்கள் காயங்களுக்கும் களிம்பு தடவியது. என்னைப் பார்க்க அன்பு மேலோங்க  'தலைவர்' கலைஞர் வந்ததால் என் மனச்சுமை நீங்கியது. இனி என் வாழ்நாளில் கலைஞரை எதிர்க்கமாட்டேன். காலம் எனக்குக் கற்றுக்கொடுத்த பக்குவம் இது."
எனக்கூறி கருணாநிதிக்கே புல்லரிக்க வைத்தீர்கள்.

பிறகு, தமிழர்களுக்கு எதிரான பாசிச ஜெயா அரசை வீழ்த்துவற்காக திமுக வுடன் 2004 பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணி வைத்தீர்கள். போட்டியிட்ட நான்கு தொகுதிகளிலும் வெற்றிபெறச் செய்தது இந்தத் தமிழ்ச் சமூகம். பதிலாய் என்ன செய்தீர்கள் ? மக்கள் நலனை விட தேர்தல் நோக்கத்தில் தங்கள் நலன் ஒன்றையே மையமாக வைத்துச் செயல்பட்டீர்கள்.


2006 சட்டமன்றத் தேர்தலில் தொகுதிப்பிரிப்பில் திமுக உடனான கூட்டணியில் பிளவு ஏற்பட்டு, ஒருகாலத்தில் உங்களது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை, "Unlawful prevention activities -ன் கீழ் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆதரவளிக்கும் மதிமுக விடம் இந்தியாவுக்கோ, தமிழ்நாட்டுக்கோ நன்மை பயக்கும் எந்தத் திட்டங்களும் இல்லை. ஆகவே அதை தடை செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்." எனக்கூறிய உங்கள்  அன்புச்சகோதரி ஜெயலலிதாவோடு கூட்டணி வைத்தீர்கள். அதற்கு என்ன தர்மக்கணக்கு வைத்திருந்தீர்கள் எனத் தெரியவில்லை.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதமிருந்த ஜெயலலிதாவுக்கு பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை நிறைவு செய்து வைத்து கொஞ்சம் கூட சிரிப்பை வெளிக்காட்டாமல் நம்பிக்கை நட்சத்திரம் என வாய் கூசாமல் புகழ்ந்தீர்கள்.

2011 தேர்தலின்போது உங்கள் சகோதரி உங்களுக்கு நீங்கள் விரும்பிய எண்ணிக்கையிலான தொகுதிகளைத் தரமறுக்க உங்களது தன்மானம் தலைதூக்கியது.
"கண்களை விற்றுச் சித்திரம் வாங்குவதைப் போல, சுயமரியாதையை இழந்து பதவி பெறவேண்டிய அவசியம் மதிமுக வுக்கு இல்லை." எனப்பேசி மானமிகு தலைவனாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டீர்.


"தந்தை பெரியார் அவர்களும், பேரறிஞர் அண்ணா அவர்களும் உருவாக்கி வளர்த்த தன்மான இயக்கத்தையும், சுயமரியாதையையும் இரு கண்களாகப் போற்றுகிறேன்" என மார்தட்டிக் கொள்ளும் நீங்கள் ஒவ்வொருமுறையும் மாற்றிமாற்றிப் பேசி தங்கள் அரசியல் வாழ்வில் ஆகச்சிறந்த சந்தர்ப்பவாதியாகத்தான் திகழ்ந்து வருகிறீர்கள்.

கடந்த வாரத்தில் இதே வைகோ தான் திமுக ஐநூறு கோடி பேரம் பேசியதாக எழுப்பிய குற்றச்சாட்டுக் கருத்தை வாபஸ் பெறமாட்டேன் என முழங்கினார். இப்போது ?
கருணாநிதியின் சாதிய அடையாளத்தைப் நேற்றைய பேட்டியில் குறிப்பிட்டுப் பிறகு, தான் சாதி மறுப்பாளன் என்பதை உணர்ந்து "தாயுள்ளம் கொண்டு அண்ணன் கருணாநிதி மன்னிக்க வேண்டும்" என அறிக்கை விட்டிருக்கிறீர்கள். இது மாற்றத்திற்கான கூட்டணியை ஒருங்கிணைத்த ஒரு தலைவனுக்கு அழகா ?

கிரேக்கத்தின் புரட்சிகளை, பொலீவியா, கியூபாவின் ஏகாதிபத்தியத்திற்கெதிரான முன்னெடுப்புகளை எனக்கு அறிமுகப்படுத்திய உங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை திரு.வைகோ அவர்களே..  சேகுவேரா வின் மறைவிற்குப் பிறகான அஞ்சலிக் கூட்டத்தில் ஃபிடல் காஸ்ட்ரோ சொன்ன வரிகள் இவை..

"கியூப விடுதலைக்கான போராட்டத்தில் முக்கியத்துவமற்ற காரியங்களில் உணர்ச்சிவசத்தால் ஈடுபட்டு ஆபத்தை விலைக்கு வாங்க முன்வந்த பலசமயங்களில் அவரை தடுத்து நிறுத்த பெருத்த முயற்சிகள் செய்யவேண்டியிருந்தது."

புரிந்துகொள்ளுங்கள். உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளைக் கொட்டிவிட்டுப் பின்வாங்குதல் ஒரு முன்னுதாரண செயற்பாட்டாளருக்கு ஏற்புடையதல்ல. ஐம்பதாண்டுகளுக்கும் மேலான அரசியல் அனுபவம் கொண்ட தங்களிடம் இவைபோன்ற முதிர்ச்சியற்ற முரணான கருத்துக்களை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. வெறும் உணர்ச்சி மிகுந்த சொற்பொழிவுகள் மட்டும் ஒரு நல்ல தலைவனுக்குப் போதாது. சிறந்த செயல்பாட்டிற்கான திட்டங்களை முன்னெடுத்துச் செல்லுங்கள். எவ்வளவு நாள்தான் நீங்களே ரத்தம் கொதிக்கப் பேசிக்கொண்டிருப்பீர்கள் ? கிரேக்கமும் சோவியத்தும் தமிழனின் வரலாறைப் பேசட்டும்.


                                                                              நம்பிக்கையுடன்,
                                                                 தொல்காப்பியன் என்கிற விக்னேஷ் சி செல்வராஜ்


பதிவு நாள் : ஏப்ரல் 7, 2016


'கோவிந்தா' மெட்ராஸ் மீட்புக் கமிட்டி

'கோவிந்தா' மெட்ராஸ் மீட்பு கமிட்டி



சமீபத்தில் வந்த வெள்ளம் சென்னையையே புரட்டிப்போட இயல்புக்கு திரும்புவதற்கு மக்களுக்கு உதவ (?) மற்றும் சம்பாதிக்க சில டிப்ஸ் ..

ஆல் இன் ஆல் அழகுராஜா பஞ்சர் கடை: 
வழக்கமாக டூவீலர் ,ஃபோர்வீலருக்கு பஞ்சர் வல்கனைசிங் செய்யும் அழகுராஜாக்கள் இனி மீட்புப்பணியில் ஈடுபட்ட படகுகளுக்கு ஓட்டை அடைக்கும் வேலையையும் சேர்த்துச் செய்யலாம்.

மொபைல்,லேப்டாப் ஐசியூ : 
தண்ணிக்குள் விழுந்து கண்டமான லேப்டாப்புகள், மொபைல்கள் சர்வீஸ் செய்ய வேலையில்லாத இன்ஜினியர்கள் முயற்சி செய்து மொரட்டுத்தனமாக கல்லா கட்டலாம்.

ஸ்நேக்பாபு பாம்பு பிடிக்கும் படை : 
வெள்ளநேரத்தில் வீட்டுக்குள் தண்ணியோடு தண்ணியாகப் புகுந்த பாம்புகள்,தவளைகள்,தேள்களை பிடிக்க தனிப்படை ஒன்றை அமைக்கலாம். அவற்றைப் பிடித்து வண்டலூரில் வெள்ள உயிரினங்கள் கண்காட்சி நடத்தியும் காசு பார்க்கலாம்.

நாதஸ் பேரீச்சம்பழக் கடை : 
தண்ணீரில் ஊறி ஒன்றுக்கும் ஆகாமல் போன கிரைண்டர்,மிக்ஸி, வாசிங்மெசின் போன்றவற்றை வாங்கிக்கொண்டு பேரிச்சம்பழம் கொடு்க்கும் பழங்கால எக்ஸ்சேன்ஞ் முறையைப் பின்பற்றலாம்.

எம்.எல்.எம் இன்ஜின் சர்வீஸ் : 
தண்ணீரில் நாள்கணக்காக மூழ்கிக்கிடந்து பழுதான வாகனங்களை சர்வீஸ் செய்யும் செட் போட்டு மொத்தமாக செய்யலாம் (?). அதாவது வாங்கிய அனைத்து வாகனங்களையும் இரவோடு இரவாக ஆட்டயப்போட்டு பக்கத்து மாநிலங்களில் விற்று விடலாம்.
(யாருப்பா அது.. நாம காட்டியுங் குடுக்குறோம் கூட்டியுங் குடுக்குறோமா னு கேக்குறது..? )

காண்ட்ராக்டர் நேசமணி ஹவுஸ் கீப்பிங் சிஸ்டம்ஸ் :
வீட்டுக்குள் கிடக்கும் மணல், உடைந்த கதவு, பொருட்களையெல்லாம் சுத்தம் செய்து வீட்டுக்கு ஒட்டடை அடிக்க மொத்தமாக காண்ட்ராக்ட் பேசலாம்.

ஐடியாமணி ஃபைபர் ஹவுஸ் :
அடுத்த வெள்ளத்திற்கு தாக்குப்பிடிக்க சிறியதாய் புதிய ஃபைபர் வீடுகளை கட்டலாம். ஏரி உடைக்கும் முன்னரே வீட்டை கண்டெயினரில் ஏற்றி அருகிலிக்கும் ராமநாதபுரத்தில் பார்க் செய்யலாம்.

இவை தவிர பேரிடரால் பழுதான டிவியில் சீரியல் பார்க்க இயலாத பெண்களுக்கு உதவும் வகையில் ஒவ்வொரு ஏரியாவிலும் மினி சீரியல் தியேட்டர்கள் அமைத்து டிக்கெட் வசூலிக்கலாம்.

 லீவுலாம் முடிஞ்சு பீலிங்கோட ஸ்கூலுக்கு போற பசங்களுக்கு எதுனா திட்டம் இருந்தா சொல்லுங்க பாஸு ..


                                 - விக்னேஷ் சி செல்வராஜ்