"இன்றைய தமிழர்களின் வாழ்வில் தாய்மொழிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்ன? அதனை அதிகரிக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம்?" - பதில் காண முயல்வோம்.
Where is my snacks box mom ?
நிற்க! விழிக்கிறீர்களா? நீங்கள் வாசிக்கப் போவது தமிழ்க்கட்டுரையே தான். மேற்காணும் ஆங்கிலச் சொற்றொடர் எனது சகோதரியின் மகன் அன்றாடம் பள்ளிக்குக் கிளம்புகையில் உபயோகிப்பது. ஆனால், முதலாம் வகுப்பு படிக்கும் அவனுக்கு இன்னும் தன்பெயரைத் தமிழில் எழுதத்தெரியாதாம். ஒருபானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கேற்ப இதுபோல இன்று எத்தனை குழந்தைகள் தமிழகத்தில் இருக்கிறார்களோ தெரியவில்லை. அவர்களுக்கெல்லாம் தமிழ் மொழியின் அவசியத்தை உணர்த்தக் கிடைத்த வாய்ப்பாக இதைக் கருதுகிறேன். நம் மொழியின் வளர்ச்சிக்கான முன்னேற்பாடுகளைக் கூறுவதற்கு முன்பு இன்றைய தலைமுறைப் பிள்ளைகள் நம் தாய்மொழியின் சிறப்புகளை அறிந்து கொள்வது அவர்களுள் சிறிதளவேனும் மாற்றங்களை ஏற்படுத்தலாம். எனவே, தாய்த்தமிழ் மொழியின் சிறப்புகள் வானளாவக் கிடந்தாலும் ஒரு சிறு முன்னோட்டம்.
தமிழ்மொழியின் தோற்றமும் வரலாறும் :
" கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு
முன்தோன்றிய மூத்தக்குடி தமிழ்க்குடி "
தமிழ் மொழியின் பழமையும் தொன்மையும் உலகறிந்ததே! திராவிட மொழிகளிலெல்லாம் தலைசிறந்தது எனப் போற்றப்படும் பெருமை வாய்ந்தது. மொழியின் தோற்றத்திற்கான ஆதாரம் மிகச்சரியாகத் தெரியவில்லையெனினும் பத்தாயிரம் ஆண்டுகள் பழமையானது என நிறுவுவதற்கான ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன. தமிழ் இலக்கியங்களில் தலைசிறந்ததாகப் போற்றப்படும் திருக்குறள் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இயற்றப்பட்டது எனக் கருதப்படுவதால் ஆக, அதற்கு முன்பிருந்தே தமிழ் இலக்கியங்கள் இயற்றப்பட்டு வந்திருக்கலாம். இயற்கை அழிவுகளின் காரணமாக எண்ணற்ற படைப்புகள் அழிந்துபோனது. எனினும் மிச்சமிருக்கும் நூல்களே மொழியின் பெருமையை உரக்கச் சொல்லும். திருவள்ளுவர் நம் தமிழில் இயற்றிய திருக்குறள் உலகின் முப்பத்தியேழுக்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வாசிக்கப்படுவதிலிருந்தே அதன் சிறப்பை நாம் புரிந்துகொள்ளலாம்.
தமிழர்களின் சிறப்பு :
அரசியல் சார்ந்த பல விடயங்களில் பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்படுவதில்லை என இந்தச் சமகாலத்திலும் கூட கேள்வியெழும் சூழல் நிலவுகிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் பெண்களுக்கு கல்வியும் சரிவரக் கிடைப்பதில்லை என வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பான தொடக்கத்திலேயே பெண்பாற் புலவர்கள் ஆண்களுக்கு சரிநிகர் சளைத்தவர்களல்ல என தத்தம் பாடல்களால் நிறுவியுள்ளனர். ஔவையார்,காக்கைப்பாடினியார், காரைக்கால் அம்மையார் என மிகப்பிரபலமான பெண்பாற் புலவர்கள் இருந்துள்ளனர்.
ஔவையார் திருக்குறளைப் பற்றி ஒற்றைவரியில் இப்படிச் சொல்லியிருக்கிறார். “அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகுத்திக் குறுகத்தரித்த குறள் “ என்று. இதில் உற்றுநோக்க வேண்டியது அணுவைப் பற்றி ஆராய்ந்ததே ஆயிரத்தி எண்ணூறுகளுக்குப் பிறகுதான். இரண்டாம் உலகப்போரில் தான் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டன. அதுமட்டுமின்றி அக்காலங்களிலேயே வானவியல், கணிதம் போன்ற துறைகளில் சிறந்து விளங்கிய பலரும் தமிழர்களே! கணிதப்புலமையில் சிறந்து விளங்கிய ராமானுசர் வாழ்ந்ததும் இதே தமிழகத்தில்தான். இன்றும் கூட அனைவரும் வியந்து போற்றிடும் விந்தையான எண்கணிதங்களும் சூத்திரங்களும் அன்னார் படைத்ததுதான். விஞ்ஞானம் மெல்ல மெல்ல எட்டிக்கொண்டிருக்கும் பல விடயங்களை அன்றே பழமொழிகளின் வாயிலாகவும் பாடல்களாகவும் எளிதாய்ச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள். நாம் செய்ததெல்லாம் அந்த உண்மைகளைத் திரித்துப் பொருள் மாற்றி தவறாக உபயோகித்துக் கொண்டிருப்பது தான்.
மொழியின் அவசியம் :
மொழி என்பது உணர்வுகளை எடுத்துச்செல்கிற அல்லது உணர்த்தக்கூடிய கருவி என்பதையும் கடந்து மனிதர்களின் சமூகக் காரணிகளில் முக்கியப் பங்கு பெற்றதாகிறது. கலாச்சாரம், பண்பாடு, பொழுதுபோக்கு, தொன்மை என எல்லாவற்றையும் பிரதிபலிப்பதாகவே இருந்து வருகிறது. மொழியானது ஒலி வடிவத்தில் பேசுவதற்கு மட்டும் பயன்படுமாறு அல்லாமல் அதைச்சார்ந்த இலக்கியங்களின் வளர்ச்சிக்கும் துணை நிற்கிறது. ஆக, மனிதர்களின் நாகரீக வளர்ச்சிக்கு ஏற்ப மொழியும் வளமை பெற்று தன்னிறைவு பெறல் வேண்டும். காலமாற்றத்தில் சிதைவுறுவதாய் இருந்துவிடக் கூடாது.
இடைக்காலத் தமிழ் வளர்ச்சி :
கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் தமிழின் பரிணாம வளர்ச்சி என எடுத்துக்கொண்டால் சங்ககாலம் தொடங்கி இன்றைய சமகாலம் வரை பல நிலைகளைக் கடந்து வந்துள்ளது. கபிலர், இளங்கோவடிகள் போன்ற புலவர்கள் வாழ்ந்த கி.பி இரண்டு மற்றும் ஐந்தாம் நூற்றாண்டிலிருந்தும் எட்டாம் நூற்றாண்டுகளில் வளர்ச்சியடைந்த பக்திப் பாடல்களும் பின்னர் அரசர்களைப் பற்றிய இலக்கியங்களுமாய் காலத்திற்கேற்ப மொழியும் இலக்கியங்களும் மாறிக்கொண்டே சிறப்பாய்த் தம்பணி செய்துள்ளன. இதற்கு இடைப்பட்ட காலங்களில் வெளிநாட்டிலிருந்து இங்கே வந்த பலரும் கூட தமிழ் கற்று உரைநடை இலக்கியங்களெல்லாம் கூட எழுதியிருக்கின்றனர்.
இருபதாம் நூற்றாண்டில் இவற்றிற்கெல்லாம் மாற்றாக சுதந்திர வேட்கைப் பாடல்களும் இயற்கை குறித்த வர்ணனைப் பாடல்களும் அதிகளவில் இயற்றப்பட்டன. பாரதியார் சுதந்திரப்புரட்சிக்கு வித்தாக பல பாடல்களை இயற்றினார். பின் வந்த பாரதிதாசன் போன்றோர் திறம்படக் கையாண்ட யுத்திகள் மொழியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றன.
நம் மொழிச்சிதைவின் தொடக்கம் :
மேற்கத்திய கலாச்சாரத்தின் பாதிப்பாலும் ஆங்கில மொழியின் செல்வாக்காலும் நசிவடைந்து கிடந்தன தமிழ் மொழியும் தமிழ் இலக்கியமும். பின்னர் அச்சு இந்திரங்களின் வருகையும் நிலையான ஆங்கிலேயர் ஆட்சியும் அதன்பின் ஏற்பட்ட சுதந்திர இந்திய ஆட்சியும் மதச்சுதந்திரமும், கல்வி முறையில் ஏற்பட்ட தோற்ற வளர்ச்சி நவீன சிந்தனைகளின் உருவாக்கமும் போன்ற காரணிகளால் தமிழ் மொழியும் இலக்கியமும் இக்காலக்கட்டத்தில் பெரிதும் வளர்ச்சியுற்றன. இக்காலக்கட்டத்தில் இடம்பெற்ற முக்கிய மாற்றமாகக் குறிப்பிடப்பட வேண்டியன
சங்க இலக்கியங்கள் மீளக் கண்டுபிடிக்கப்பட்டதும் அச்சேற்றியதும்.
உரைநடையில் எழுதுவது அறிமுகமானது.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புதுக்கவிதை எனும் புதுப்பாணி தோற்றம் பெற்றது.
பின்னர் இலக்கியங்கள் மாற்றத்திற்கேற்ப சிறுகதை இலக்கியங்களாகவும் புதினங்களாகவும் வளர்ச்சியடைந்தது. புதுமைப்பித்தன், கல்கி, மு.வரதராசனார் , ம.பொ.சி, மு.கருணாநிதி என எண்ணிலடங்காதோர் எழுதிக் குவித்தனர். பிற்காலத் தமிழ் புரிந்துகொள்ள எளிதாய் உருமாறி பெரும்பாலானோர் எழுதத் தொடங்க நூற்றாண்டின் பிற்பகுதியில் மேலைநாட்டுக் கருத்துக்களும் பரவ ஆரம்பித்தன. தமிழ் எனும் தனித்தமிழ் மொழி சிறிதாக பிறமொழிக் கலப்புப்பெற்றது. அதில் ஏற்படும் நயம் பெரும்பாலானோராலும் விருப்பமானதாய் ஏற்றுக்கொள்ளப்பட அது இன்னும் வளர்ந்தது.
சிறுகதை இலக்கியம் வரவேற்பு பெறத் தொடங்க அதன் வடிவமும் மாறி ரசனைக்கேற்ப பிறமொழிக் கலப்பு அதிகளவில் ஏற்பட்டது. பேச்சுவழக்கில் எழுத்துநடை பரவ ஆரம்பித்தது. சிறுகதைகள் உணர்வுகளை எளிதாய்க் கடத்தக் கூடியதாக இருந்தபடியால் மாற்றங்களைத் தவிர்க்க முடியவில்லை. இலக்கியங்களின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு சிறுகதைகள் வாசகர்களால் பச்சைக்கம்பள வரவேற்பைப் பெற்றன.
இன்றைய தாய்மொழியின் நிலை :
எது எப்படியாகினும், தமிழ்மொழி மக்களின் வாழ்வில் பெரும்பாண்மையான இடத்தை ஆக்கிரமித்திருக்கிறது என்று உறுதிபடக் கூறலாம். நம் தாய்மொழியைப் போற்றும் விதமாய் பிள்ளைகளுக்கு தமிழ் என்று பெயர் சூட்டுகிறார்கள். மற்ற எல்லா மொழிகளை விடவும் இங்கே அதிகமானோர் எழுதிக்குவிக்கிறார்கள். வாசகர்களும் இருக்கிறார்கள். இது சாதாரணமானது அல்ல. தொழில்நுட்பங்கள் வளர்ந்து மக்களின் கலைசார்ந்த மற்றும் பொழுதுபோக்குக்கான தேடல்கள் வெகுவாகக் குறைந்திருக்கும் இச்சூழலிலும் கூட எழுத்துக்கள் வரவேற்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இதற்குக் காரணம் நம் பாரம்பரியம். இலக்கியங்கள் நம் வாழ்வோடு கலந்தே இருக்கின்றன. புத்தகங்கள் இதுவரை அனைவராலும் விரும்பப்பட்டே வந்திருக்கிறது. இதெல்லாம் ஒருபுறமிருக்க தமிழர்களின் இன்னொருபக்கம் அதாவது பெரும்பான்மையானோரின் முகம் இதற்கு எதிரான மனநிலை உடையது.
அறியாமையால் பொருள் சிதைவு :
தமிழின் சிறப்புகளாக இன்றும் அழியாமல் பாமரர்களின் இலக்கிய வடிவமாக உள்ள பழமொழிகளை விருப்பம்போல் திரித்து பொருள்மாற்றி உண்மையான விளக்கத்துக்கு எதிரானதாக்கிப் பயன்படுத்துகிறோம். இது நிச்சயமாக தவிர்க்கப்பட்டு மேம்படுத்தப்பட வேண்டியது.
“ ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன் “ என்று பழமொழி ஒன்று சொல்லப்படுகிறது. இது பேரை அல்ல வேரை (மூலிகை வேரை )ஆயிரம் வேரை கொன்றவன் அரை வைத்தியன்.
“நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.” இதில் வரும் சொல் சூடு அல்ல சுவடு. சந்தையில் மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம் சுவடு. அழுத்தமான சுவட்டை பதிக்கும் மாடே அதிக பலம் வாய்ந்தது. ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம் புலனாகும் என்ற கருத்தை எதிரானதாக்கி உபயோகிக்கிறோம்.
“அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை புடிப்பான்.” எனச் சொல்லப்படும் பழமொழியின் உண்மையான பொருள் அர்ப்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான் என்பதாகும். வள்ளல் ஆனவரை கஞ்சனாக மாற்றி விட்டோம் காலப்போக்கில்.
நம் முன்னோர்கள் நம் நல்வாழ்வுக்காக சொல்லி வைத்ததை நாம் பிறரை குறை கூற உபயோகிக்கிறோம்.
தமிழர்கள் தம் தாய்மொழிக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் :
“கற்றது தமிழ்” என்றொரு திரைப்படம் தமிழ் இலக்கியம் படித்து வாழவே பாடுபடும் ஒரு இளைஞனின் கதையை நேர்மையாக எடுத்துச் சொல்லியிருக்கும். விளிம்புநிலை மக்களில் ஒருவன் இலக்கியத்தின் மீதும் தாய்மொழியின் மீதுமுள்ள பற்றினால் அதையே பாடமாய் எடுத்துப் படிக்க பின்னர் வேலை கிடைக்காமல் நடைபாதையில் கைக்குட்டை விற்கும் சூழல் காட்டப்படும். தமிழ் படித்த ஒரே காரணத்திற்காக அவன் ஒதுக்கிவைக்கப் படுகிறான். சமூகத்தில் வேடிக்கையாக்கப்பட்டு கேள்வி கேட்கமுடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறான். இதுதான் தற்போது தாய்மொழிக்குத் தரப்படும் முக்கியத்துவம். வேலைவாய்ப்புகள் கூட தரப்படுவதில்லை.
வாசிக்கும் ஆர்வம் அனைத்து பரப்புகளிலும் வெகுவாகக் குறைந்திருக்கிறது என்பதே உண்மை. தாய்மொழியில் எழுதப்பட்ட இலக்கியங்கள் வெகுவானோரால் விரும்பப்படுவதில்லை. ஆங்கிலம் பெரிதாய் இந்த விடயத்தில் பங்காற்றியிருக்கிறது. ஆங்கிலத்தின் மீதான மோகம் அதிகரிக்கத் துவங்க சிறிதுசிறிதாக நம் பல்லாயிரமாண்டு பெருமைவாய்ந்த மொழி அழிவைச் சந்திக்கத் தொடங்குகிறது.
பாரதி “ மெல்லத் தமிழினிச் சாகும்” என சொன்னது எவ்வளவு உண்மை? புத்தகங்கள் முன்போல அதிகளவில் விரும்பி வாசிக்கப்படுவதில்லை. பிரபலமான எழுத்தாளர்களின் புத்தகங்கள் கூட ஆயிரம் பிரதிகள் விற்கப்படாத சூழல் நிலவுகிறது. மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கத்தாலும் வளர்ந்துவரும் நாடுகளின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையிலும் நம் சமூகமும் மாற்றங்கண்டு வருகிறது. வாசித்தல் போன்றவையெல்லாம் தேவையில்லாததாகக் கருதப்படுகிறது. குழந்தைகளுக்கு படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தாமல் மின்னணு விளையாட்டுகளுக்குப் பழக்கி வாசித்தலில் ஒரு மோசமான எதிர்காலத்தை ஏற்படுத்தி வருகிறோம். தமிழ்வழியில் படித்தலும் கூட சமூகத்தில் ஏளனமாய்ப் பார்க்கப்படும் சூழல் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆங்கில வழியில் கல்வி கற்கும் பலரும் தாய்மொழியான தமிழை ஒரு பாடமாய்க் கூட எடுத்துப் படிக்க முன்வருவதில்லை. இந்தி உள்ளிட்ட வடமொழிப் பாடங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
உண்மையில் பார்த்தால் ஆங்கிலமே தெரியாமல் அறிவியலும், கணிதமும், தத்துவமும், தாய்மொழியில் கற்று அந்தந்தத் துறைகளில் வெற்றி கண்டவர்கள் எராளம் பேர். ஆனால், தமிழ்நாட்டில் தாய்மொழியில் இவற்றைப் பயில்வது கேவலம் என்று பொதுப்புத்தியில் வளர்க்கப்பட்டுள்ளது. தாய்மொழி வழிக்கற்றலின் மூலம்தான் புதிய கண்டுபிடிப்புகள் எளிதாக சாத்தியப்படும். புதிய கருவிகளை, இயந்திரங்களை உருவாக்கம் செய்து உலகோடு போட்டியிட இயலும்.
ஆங்கில மோகமும் தமிழின் அழிவும் :
தமிழ் வழி கற்றல் என்பது அதிக அளவில் ஆதரவு பெறாமல் இருக்க முக்கியமான காரணம் தமிழ் வழியில் படித்தால் நல்ல வேலை கிடைக்காது என்ற கருத்து பரவலாக இருப்பதே ஆகும். கல்வியானது ஆரோக்கியமான மனிதனை உருவாக்கும் என்பதை விட நல்ல சம்பளத்திற்கான வழி என்ற நம்பிக்கை பலப்படுத்தப்பட்டுவிட்டது இன்று. அதிலும் ஆங்கில வழிக் கல்வியே சிறந்த ஊதியத்தைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை. மேலும், தமிழ் வழியாக கல்வியின் பல்வேறு புலங்களை படிக்க இயலாது, அதற்கான சாத்தியப்பாடுகளும் இல்லை என்ற நிலையும் மற்றுமொரு காரணமாகும்.
இன்று தமிழ் வழிக் கல்வி என்பது அரசு பள்ளிகளில் மட்டும் காணப்படுகிறது. அங்கே பெரும்பாலும் ஏழை எளியோரே பயில்கின்றனர். அவர்களும் வேறு வழியில்லை என்பதற்காக தமிழில் பயிலும் நிலை. தமிழ் வழிக் கல்வி என்பது வெறும் மொழிப் பிரச்னை அல்ல. அது சமூக நீதி குறித்தப் பிரச்னை. அரசுப் பள்ளிகளின் அடிப்படை சமூக நீதியாகும். அதை மெதுவாக புறம்தள்ளும் வகையில் ஆங்கிலப் பள்ளிகள் எண்ணிக்கையில் பெருகி வருகின்றன. அரசும் ஆங்கில வழி வகுப்புகளை நாளும் புதிது புதிதாகத் தொடங்கி வருகிறது.
தமிழகத்தில் பள்ளிக்கல்வி முடித்த ஒருவன் தன் தாய்மொழியில் பிழையின்றி எழுதவும் படிக்கவும் இயலாதிருப்பது எவ்வளவு வெட்கக்கேடானது ? இந்த நிலைக்கு அரசுகள் ஒரு காரணம் என்றபோதும் முழுமுதற் காரணம் பெற்றோர்களே. சிறுவயதிலேயே தமிழில் வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தாமல் ஆங்கிலத்தில் பேசுவதையே பெருமையாகக் கருதி ஊக்குவிப்பதால் வந்த வினை. பின்னாட்களில் அதுவே பூதாகரமாகி தமிழ் அவர்களிடம் அடியோடு தடைப்பட்டுப் போகிறது. அந்தப் பிள்ளைகளும் வளர்ந்து அவர்களது குழந்தைகளிடம் தமிழ் வளர்ச்சி எப்படி இருக்கும் என யூகித்துப் பாருங்கள்.
நாம் தற்போது மிகப்பரவலாய்ப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு முறை மொழியைச் சிதைத்துக் கொண்டிருக்கிறது. குறுஞ்செய்திகள் *தங்கிலீஷ் (வேறு தமிழ்ச் சொல்லில் குறிப்பிடுவது அவ்வளவு சிறப்பாக இருக்காது.) என்ற பெயரில் தமிழ்ச்சொற்களை ஆங்கில எழுத்துக்களால் குறிப்பிடுகிறோம்.
இப்படித்தான் எந்த முன்னேற்பாடும் இ்ன்றி தமிழ்மொழி சீராக தன் பொழிவை இழந்து கொண்டிருக்கிறது.
தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டியன :
ஒருவர் தன் தேவைக்கேற்ப, வசதிக்கேற்ப எத்தனை மொழிகளை வேண்டுமென்றாலும் கற்றுக் கொள்ளலாம். இது அவரவர் திறனும் விருப்பமும் சார்ந்ததே. அதற்காக தமது சொந்த மொழியை, தாய்மொழியை புறக்கணிப்பதும் தாழ்வாகக் கருதுவதும் அநாகரிகமானது. ஒரு மொழி அதன் சொந்த மக்களால் புறக்கணிக்கப்படும்போது வேர் அறுபட்ட கொடியினைப் போல சிறிது காலம் பச்சையாகத் தெரிந்துவிட்டு, பின் பட்டுப் போய்விடும் அபாயம் நிகழ வாய்ப்பிருக்கிறது.
பிறமொழியில் சரளமாகப் பேசுவதை, எழுதுவதை கௌரவமாக, பெருமையாகக் கருதும் நாம், நம் தாய்மொழியை சரிவர கற்றுக் கொள்ளாது இருப்பதற்காக வெட்கப்படுவதில்லை. ஆங்கிலச் சொற்களை நிறைய நிறைய கலந்து பேசுபவர்களும், ஆங்கிலத்திலேயே பேசுபவர்களுமே புத்திசாலிகள் எல்லாம் தெரிந்தவர்கள் என்பது ஒரு மாயையான அறியாமையே!
நம்மிடம் சொற்கள் இல்லாதபோது பிறமொழிச் சொற்களில் பொருட்களின் பெயரை குறிப்பிடுவதிலாவது ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால், வலிந்து வாயில் வராதபோதும் தட்டுத்தடுமாறி பிறமொழிச்சொற்களை பெருமைக்காக பயன்படுத்துகிறோம் என்றால், நம் மொழியை நாம் அழிக்கத் தொடங்கி விட்டோம் என்றுதானே பொருள்?
தமிழைத் தம் தாய்மொழியாகக் கொண்ட மக்களில் பலர் தாமும் தங்கள் பிள்ளைகளும் தமிழில் உரையாடுவதை கௌரவக் குறைச்சலாக எண்ணும் ஒரு அபத்தம் நிகழ்கிறது. இந்த அறியாமையை முதலில் களைதல் வேண்டும். அன்றாடம் பயன்படுத்தும் சொற்களையாவது பிறமொழிக் கலப்பின்றி பேசத்தெரிதல் வேண்டும். பிள்ளைகளை ஆங்கிலவழிப் பள்ளிக்கூடங்களில் தான் படிக்கவைக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் மாற்ற முனைதல் மிக அவசியம். இன்றைக்கு ஆங்கிலவழிக் கல்விக் கூடங்களில் பிள்ளைகள் ஓரிரு வார்த்தைகள் தாய்மொழியில் பேசிவிட்டால் தண்டமும் தண்டனையும் என்பது மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளது. அறிவு வளர்ச்சி என்பது பிற மொழிகளைக் கற்றுக்கொள்வது மட்டுமேயல்ல. தாய்மொழியைப் பிழையின்றி பேசத்தெரிதலும் தான்.
தமிழ்மொழியின் வளர்ச்சிக்கான பரிந்துரைகள் :
தொழில் புரட்சி முதல் அறிவியல் புரட்சி வரை அது எந்த மொழியினரால் நடத்தப்படுகிறதோ அந்த மொழியே ஆதிக்கம் பெறுகிறது. அவ்வாறு ஆதிக்கம் பெறும் மொழி வழக்கு மொழியாக மாறி, அது பின்னர் வாழ்வியல் மொழியாக மாறுகிறது. எனவே, தமிழ் பேசலாம், கேட்கலாம், எழுதலாம், படிக்கலாம் என்ற நிலை மாறி அது வாழ்வின் அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்தலாம் என்ற நிலை என்று வருகிறதோ, அன்றைக்கு தான் தமிழ் வளரும்.
தமிழர்களின் கல்வி, வேளாண்மை, வணிகம், கலை, தொழில்நுட்பம், மருத்துவம், அறிவியல், மின்னியல், கணிதம், நீதி, வங்கித்துறை செயல்பாடுகள், அரசியல், திரைப்படத்துறை, ஊடகங்கள் என அனைத்திலும் தமிழ் என்ற நிலையை ஏற்படுத்தி, அதை பயன்பாட்டுக்கு கொண்டுவந்தால் மட்டுமே தமிழ் மென்மேலும் செழித்து வளரும்.
தமிழ் பல்கலைக்கழகம், தமிழ் படிக்கும் மாணவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் ஆகியோர் தமிழ் வளர்ச்சிக்கான திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
அறிவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், வேளாண்மை, மின்னியல், பொறியியல், தொழில்நுட்பம், மருத்துவம், மேலாண்மை, சட்டம் போன்ற உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி துறைகளில் பயன்பாட்டு மொழியாக தமிழை கொண்டுவரத் தேவையான தமிழ்ச் சொற்களை உருவாக்க வேண்டும். அனைத்துத்துறைகளிலும் உள்ள பாடப் புத்தகங்களை, ஆங்கிலம் மற்றும் உலக மொழிகளில் வெளிவரும் ஆராய்ச்சி நூல்களை அந்தத் துறையைச் சேர்ந்த வல்லுநர்களோடு சேர்ந்து, அதன் செழுமை மாறாமல் தமிழ் மொழியில் மாற்றம் செய்ய வேண்டும். அதை கல்வி பயில்வதற்கான நூலாக மாற்றம் செய்து அதை அனைத்து உயர்கல்வி நிலையங்களிலும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று அப்துல்கலாம் ஐயா குறிப்பிட்டிருக்கிறார்.
உலக தொடர்பு மொழியான ஆங்கிலத்தையும், தாய்மொழியான தமிழையும் அடிப்படையாக வைத்து நமது மொழியை வளர்க்க வேண்டும். முதலில் தமிழ் மொழியில் உயர்கல்வியை கற்பிக்கச் செய்து, அதன்பிறகு, ஆராய்ச்சியையும் நமது மொழியிலேயே மேற்கொள்ள வேண்டும். தமிழ் மொழியின் வாயிலாக செய்யப்பட்ட ஆராய்ச்சிகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து உலக அளவில் அவற்றை கொண்டு செல்ல வேண்டும். அதை புத்தகங்களாகவும், ஆராய்ச்சி நூல்களாகவும் வெளியிடுவது அவசியம்.
தமிழ் மொழி வளர்வதற்கு உயர்கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களின் பங்கு மிகவும் முக்கியமானது. தொழில்நுட்பங்கள், அறிவியல், மருத்துவம் போன்ற துறைகளில் தமிழ்மொழியிலேயே ஆராய்ச்சிகளைச் செய்து தாய் மொழியிலேயே சிந்திக்கும் திறனையும், கற்பனைத் திறனையும் மேம்படுத்த வேண்டும். இதன்மூலம், நாம் உலகத் தரத்தோடு புதிய சாதனங்களை, எந்திரங்களை உற்பத்தி செய்து உலக நாடுகளோடு போட்டி போட்டு வெற்றி பெற முடியும். இத்தகைய சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கான கொள்கைகளை வகுக்க வேண்டும். இதன்மூலம் தொழில் மேம்பாடு அடைவதோடு, வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த துறையை தேர்ந்தெடுத்துப் படிக்கும் சூழல் ஏற்படுவதுடன், தாய்மொழியிலேயே படிப்பதால் தமிழும் வளரும்.
ஆட்சி அதிகாரத்திலும், சட்டம் மற்றும் நீதியிலும் தமிழ் மொழியையே முழுமையாக பயன்படுத்த வேண்டும். அதேசமயம் தொடர்பு மொழியாக ஆங்கிலத்தை கற்றுக் கொண்டு, அதை துணை ஆட்சி மொழியாக பயன்படுத்தலாம். தமிழ்நூல்களை மற்ற மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும். அதேபோன்று, மற்ற மொழிகளின் நூல்கள் தமிழ்மொழியில் மொழி பெயர்ப்பு செய்து வெளியிட வேண்டும். இந்த திட்டங்களை முறையாக செயல்படுத்தினால் தமிழ் மொழி செழித்து வளரும்.
சமீபத்திய நாளிதழில் வெளிவந்த செய்தியின்படி சிங்கப்பூரில் குழந்தைகள் எளிமையாகத் தமிழைக் கற்றுக்கொள்வதற்கு வசதியாக ஒரு செயலியை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். அதைப்போலவே இங்கும் தொடங்கி விளையாட்டாகத் தமிழார்வத்தை இன்றைய குழந்தைகளிடம் வளர்க்கலாம். நேரமின்மையும் புத்தகங்களை வாங்கிப்படிக்க அக்கறையின்மையாலும் படிக்க இயலாதவர்கள் எளிதாக வாசிக்கும் வண்ணம் இணையம் மூலம் மின்வடிவில் அல்லது செயலிகளின் வழியாக புத்தகங்களைப் பரவலாக கிடைக்கச் செய்யவேண்டும். பழைய நூல்களை மின்வடிவில் புதுப்பித்தல் மட்டுமல்லாது புதிய எழுத்தாளர்களை ஊக்குவித்து அவர்களின் படைப்புகளும் வெளிவரச் செய்து தமிழார்வத்தை வளர்க்கவேண்டும். அப்போது மட்டுமே மொழியின் வளர்ச்சியைச் செம்மையுறச் செய்யமுடியும்.
மொழி வளர்ச்சியில் நம் கடமை :
நாம் சிந்திக்கும் முறை, நடந்து கொள்ளும் விதம், செயல்கள் இவற்றால் மட்டுமே நமது நற்பண்பும் அறிவும் ஆளுமையும் மிளிருமே தவிர, வேறு ஒரு மொழியை அம்மொழியை அறியாதவர்களிடம் பேசி தன்னைப் பெரிய ஆளாகக் காட்டிக் கொள்வதால் அல்ல. இதனால் அவர்களிடமிருந்து அந்நியப்பட்டுப் போவதற்குத்தான் அதிக வாய்ப்பிருக்கிறது. நம் தாய்மொழியான தமிழ், தமிழாசிரியர்களின் மொழியாகவும் தமிழ் இயக்கங்களின் மொழியாகவும் அரசியல் கட்சிகளின் மொழியாகவும் கதை கவிதைக்கான மொழியாகவும் மட்டும் இன்று சுருக்கப்பட்டிருப்பதை ஆயிரம் பெருமைக்குரிய செம்மொழியான தமிழ்மொழியின் துயரமான காலகட்டம் என்றே குறிப்பிடலாம்.
தாய்மொழி என்பது சிந்தனை. அதுதான் எண்ணம். அதுதான்எல்லாமும். அதை மறுப்பதன் வழியாக நாம் சிந்தனையையும் எண்ணத்தையும் மறக்கிறோம் என்பதால்தான், மகாத்மா காந்தி உள்பட அனைவரும் தாய்மொழி வழிக்கல்வியை வலியுறுத்திச் சொல்கிறார்கள். பிறமொழி வழிக்கல்வியைப் பயில்பவர்கள் அம்மொழியை நன்கு பேசி எழுதி மனனம் செய்து மருத்துவராகவோ, பொறியாளராகவோ மாறி பொருள் ஈட்ட முடியுமே தவிர, கண்டுபிடிப்பாளர்களாகவும் சிந்தனையாளர்களாகவும் உருவாவது அரிது என்பதே கல்வியாளர்களின் ஒருமித்த கருத்து. அதிகார பலமிக்கவர்களோடு எளிய மக்கள் அச்சமின்றி உரையாடக்கூடிய வலுவைத் தரக்கூடியது கல்வி. இன்றோ வருவாய் நோக்கில் நம் தூய தமிழ்மொழியின் மீது வெற்று முலாம் பூசி அதன் சிறப்பை மறைத்து விற்கப்படும் வியாபாரமாக ஆனதற்கு முக்கியப் பொறுப்பேற்க வேண்டியது அரசாங்கமே! தமிழில் கல்வி கற்றாலும் வேலைவாய்ப்புகள் ஏராளம் உண்டு என்கிற நிலையை ஏற்படுத்தி தமிழை வெறும் இலக்கிய மொழியாக மட்டும் புகழ்ந்து கொண்டிருக்காமல் வணிக மொழியாகவும் தொழில் மொழியாகவும் உயர்த்த வேண்டும். வெறும் ஆர்வம் மட்டுமே போதாது என்பதை தமிழ்ச் சமூகமே உணர்ந்து செயல்பட்டால்தான் செந்தமிழ் செழிப்புறும்.
" இனிமைத் தமிழ் மொழி எமது-எமக்
கின்பந்தரும்படி வாய்த்தல் நல் அமுது!
கனியைப் பிழிந்திட்ட சாறு-எங்கள்
கதியில் உயர்ந்திட யாம் பெற்ற பேறு!
தனிமைச் சுவையுள்ள சொல்லை-எங்கள்
தமிழினும் வேறெங்கும் யாங் கண்ட தில்லை
நனியுண்டு நனியுண்டு காதல்-தமிழ்
நாட்டினர் யாவர்க்குமே தமிழ் மீதில்..! "
எனப் பாரதிதாசனார் பாடியது எப்படி மெய்யன்றிப் போகும் ? தமிழர்கள் யாவருக்கும் தம் மொழியின் மீது காதலிருக்கும்.
நாம் அனைவரும் தற்போதைய நம் மொழியின்நிலை உணர்ந்து நம் தீந்தமிழ் மொழி ஆலமரம்போல் ஆழமாக வேரிட்டு அருகுபோல் அகலப்படர நம்மால் இயன்றதைச் செய்வோம் என உறுதியேற்போம்.
பாரதியைக் கூப்பிட்டு அவர் மகிழும் விதமாய் இப்போது ஒன்றுமட்டும் சொல்வோம்.
“தமிழ் இனி மெல்லத் தளிர்க்கும்.”
- விக்னேஷ் சி செல்வராஜ்
பதிவு : பிரதிலிபி - அகம் இணைந்து நடத்திய 'ஞயம் பட வரை' கட்டுரைப்போட்டிக்காக எழுதியது.
Total Pageviews
Wednesday, 13 January 2016
ஞயம் பட வரை - பிரதிலிபி கட்டுரைப்போட்டி
Subscribe to:
Comments (Atom)