* அடித்துப்பெய்த மழை அறிந்திருக்கவில்லை வேயாமல் ஒழுகும் அடுப்படிக் கூரையை..
* இந்த வாடிய கனகாம்பரம் கூட உன்னையே நினைக்கவைக்குமெனில் எந்த நம்பிக்கையில் மறக்கச் சொல்கிறாய் உன்னை..
* ஒவ்வொரு துளியிலும் உன்பெயரெழுதிய இம்மழை கரைத்துவிடத் துடிக்கிறது காலெடுக்க மனமின்றி முழுவதுமாய் மூழ்கிப் போகிறேன் நான் உன்னில் ..
* புறாக்களையெல்லாம் கொன்றொழித்துவிட்டு அதன் நிறங்களை மட்டும் எந்தச் சமாதானத்திற்காய் பயன்படுத்தப் போகிறீர் ?
* இந்தப் பின்னிரவு அள்ளித் தெளிக்கிறது மழையை கூடவே அவள் நினைவுகளையும்..
* விட்டுவிட்டுப் பெய்யும் மழை நினைவுபடுத்துகிறது நீ கையாட்டி திரும்பித் திரும்பிப் பார்த்துச் சென்றதை..
* மேகமென்றதற்கும் நிலவென்றதற்கும் ஒரே புன்னகைதான் வீசிச் சென்றாய்.. இப்போது மழையென்கிறேன் சிலதுளிகள் சிந்துகிறாய்..
* நெற்றியிலிடும் முத்தங்களைப்போல சாலைநனைத்த கோடைமழையும் அதி அழகானதே
* இறுதிவரை சில வார்த்தைகள் பயன்படவேயில்லை.. ஒருவேளை அவைகூட நம்மை இணைக்கப் பயன்பட்டிருக்கலாம்..
* ஒருசேர என்னுள் உன்னையும் உன்னுள் என்னையும் நினைவூட்டிவிடுகிறது யாரோ மீட்டிய இசை பண்பலையில்
* பரிகசித்த வெயிலையும் சேர்த்து விழுங்கி பசியாறிக்கொண்டிருக்கிறது இந்தப் பெருமழை..
* வெற்று இதயத்தில் இசை மீட்டுகிறாயே இப்படி உன் வயலின் விரல்களால்..
* சுவிஸ் வங்கித் தொடர்புள்ள இதே தேசத்தில்தான் கூரைவீட்டுக் கடவுள்களும் வாழ்கிறார்கள்.
* வழிந்த குருதியையெல்லாம் துடைந்தெறிந்துவிட்டு அடுத்த வேளைச் சோற்றுக்கு அலைபவனின் தேசத்தில் நாம் பெற்றதற்குப் பெயர் 'சுதந்திரம்'.
*நிலவில்லாத இரவுகளிலெல்லாம் கூட காதலிக்கிறேன் உன்னை மின்மினிப்பூச்சிகளின் சாட்சியாக..
* பக்கங்களையெல்லாம் புரட்ட ஒட்டிக்கொண்டிருந்தது இரு பக்கங்கள் எச்சில் எனத்தலைப்பிட்ட கவிதை தாங்கியபடி ..
* உச்சந்தலை வலிக்க குட்டிய சகோதரிகளின் பாசம் பின்னர் கைவைத்து அழுத்தி வலிக்குதா எனக்கேட்பதில் புரியும்.
* வேருக்குச் சேதியனுப்ப ஒவ்வொரு இலையாய் உதிர்க்கிறது கிளை.. கடைசி இலை சொல்லிச்சென்றது மரணச்செய்தியை..
*அந்தச் சிலவற்றை மட்டும் ஸ்மைலிகளால் கடக்கமுடிந்தால் வாழ்க்கை இன்னும் பேரழகு..
* மடித்து ஒற்றிட்டு உடைந்த வார்த்தைகளெல்லாம் அழகாய் அமர்ந்துகொண்டது கவிதையெனும் பெயரோடு..
* பேப்பரில் கோடரி வரைந்த குழந்தை ஏளனப் புன்னகை செய்தது மேசை..
* தட்டான்கள் ஹெல்மட் மாட்டியிருப்பதாகக் சொல்லிச் சிரிக்கும் குழந்தையை விட இந்த வானவில் ஒன்றும் அழகில்லை..
* மான் வரையத் தெரியாத குழந்தைக்காக புல்லைத் தின்று பசியாறிக்கொண்டது புலி ஓவியம்..
* பறந்துவிட்ட பலூனைப் பிடிப்பதற்காகவே முதல்நாள் விடுபட்ட கனவைத் தொடர முயல்கிறது குழந்தை ..
* புரண்டு படுக்கும் குழந்தைகளை யாரும் எழுப்பிவிடாதீர் கடவுளுடன் கிச்சுகிச்சு மூட்டி விளையாடியிருக்கலாம்..
* பென்சில்களை இறுகப் பற்றிக்கொண்டே தினம்தினம் உறங்குகிறாள் எங்கள் வீட்டு தேவதை..
* ஊதச் சொன்னால் புல்லாங்குழல் கடிக்கும் குழந்தைகளெல்லாம் கண்ணன் இல்லையென யார் சொன்னது ?
* ஒட்டுமொத்தப் பிரியங்களின் சாட்சியாக இன்னும் உயிர் வாழ்கிறது இந்த ஒற்றைப்புறா..
* பறந்துவிட்ட பட்டாம்பூச்சி
மறந்துவிட்ட கதைகள்
தொலைந்துவிட்ட பால்யம்
எல்லாவற்றையும் மொத்தமாய் உணர்ந்துவிட இருக்கவே இருக்கிறது
என் 'தமிழ்'..
* வார்த்தைகளைப் படுத்தி எடுத்ததையெல்லாம் பக்குவமாய் அடுக்கி தானாகவே கவிதையாக்குகிறது
என் 'தமிழ்'..
* பதில்களையெல்லாம் அடுத்த கேள்விகளாக்கித் தொடுத்துக்கொண்டே இருக்கிறாள் உறங்கும் வரை எங்கள் வீட்டு தேவதை..
* வானவில் மகளா நீ
மகிழ்ச்சி துக்கமென
நொடிக்கொருதரம் நிறம்மாறிக் கொண்டிருக்கிறாயே..
* எல்லா வருடமும் போல்தான் இன்றும்.
அவள் கடித்துக் கொடுத்த கொழுக்கட்டைச் சுவைதான் இப்போதைக்கில்லை..
* நீ பேசாத
வார்த்தைகளிலெல்லாம் கூடப்
பொதிந்திருக்கிறது
காதலெனும் பேரன்பு.
* சிதிலமடைந்த வீடுகளின்
பெயர்ந்த காரைகளைத் தவிர இப்போது மிச்சமிருப்பதெல்லாம் பழைய நினைவுகளாக இருக்கலாம் ..
* இருக்கும் கொஞ்சமே கொஞ்சம்
மரங்களும் வெட்டப்பட்டு
வீடுகளாக்கப்பட்டபின்
யானைகளை யார் வீட்டில் வளர்ப்பீர்..
* விரும்பிக் கேட்ட பொருளை
அப்பாக்கள் வாங்கி வருவதற்குள்
தேவதைகள் தூங்கிவிடுகிறார்கள்..
* ஆசான்
______________________
உன் காதோரம் ஒட்டிய
சாக்பீஸ் துகள்களுக்கெல்லாம்
தலை வணங்குகிறேன் ..
அதுதானே எனக்கு அகரம் சொல்லிக்கொடுத்தது..
* ஊரையே வாழவைக்கும்
மழைநீரில்
செத்துச் செத்துப்
பிழைக்கிறது
அட்டைப்பூச்சி..
* உலகை அழிக்கும் உங்கள்
ஆசை நிறைவேறவேனும்
பற்றி எரியச் சருகுகளையாவது
மிச்சம் வையுங்களேன் .
* அன்புள்ள எனத் தொடங்கிய
கடிதங்களையெல்லாம் தொலைத்துவிட்டு
தாங்கள் செலுத்தத்தவறிய தவணைத்தொகை
எனும் எல்ஐசி காகிதங்களையே
சுமந்து வருகிறார் போஸ்ட்மேன் தாத்தா..
* திருவிழாக் கடைகளில்
அடம்பிடித்து
வளையல், பாசி
வாங்கி அணிந்ததோடு
கரைந்தது மிச்சமிருந்த பால்யம்.
* பெரு அழுத்தத்தோடு
வந்த மழை
ஒருவேளை
முற்றத்து வீடுகளைத்
தேடியதோ என்னவோ ?
* சோளக்காட்டை அழித்துப்போட்ட
ரியல் எஸ்டேட்
மஞ்சள் கற்களை
மறைத்துச் செழிப்பாய்
வளர்கிறது சீமைக்கருவேலை.
Total Pageviews
Thursday, 1 October 2015
கொலுசு முத்துக்கள்
Subscribe to:
Comments (Atom)